March 31, 2009

ஸ்ரீ ராஜஸ்தானி தாபா - அண்ணாநகர்

மிளகாய்ல காரம் கொஞ்சம் கம்மின்னு சொல்றவங்களுக்கு இந்த தாபா ஒத்து வராது. மிதமான சில சமயம் காரமே இல்லாத உணவுகளுக்கு பெயர் போன ராஜஸ்தான் உணவுகளை வழங்குகிறது ஸ்ரீ ராஜஸ்தானி தாபா. நேற்று மதிய உணவிற்க்கு நானும் தம்பியூம் சென்றோம். உள்ளே போகும்போது "ஈ ஓட்டிக்கிட்டிருக்கானேடா? மவனே சாப்பாடு நல்லால்ல செத்தடா நீ" என்று அவனை எச்சரித்துக்கொண்டே வந்தேன் (பின்ன அம்மாவின் இஞ்சி துவையலையும் தயிர் கீரையும் கஷ்டப்பட்டு மறுத்துவிட்டல்லவா வந்தேன்). ஆர்டர் குடுப்பதற்க்குள் திமுதிமுவென கூட்டம் சேர ஆரம்பித்துவிட்டது. Exclusive ராஜஸ்தானி உணவுகள். கூடவே கொஞ்சம் பஞ்சாபி சப்ஜிகளும் மெனுவில் இருக்கின்றன. இன்னொரு பெரிய ஆச்சரியம்/ஆறுதல் சப்ஜி/தால் வகைகள் அரை பிளேட்கூட தருகிறார்கள்.

80 ரூபாயிலிருந்து 140 ரூபாய் வரை 3 thali வெரைட்டி இருக்கிறது. தம்பி 140 ரூபாய் ஸ்பெஷல் ராஜஸ்தானி thali ஆர்டர் செய்தான். 4 சப்ஜிகள், தால், கதி (kadi), ஆலு பராத்தா, பஜ்வார் ரொட்டி (கம்பு), புல்கா, வெஜிடபிள்ஸ், தயிர், சூப்/மால்புவா, லஸ்ஸி/குல்பி. இதுதான் ஸ்பெஷல் தாலியின் மெனு. இதில் கடைசி இரண்டு அயிட்டங்களைத் தவிர மற்ற அனைத்துமே unlimited. போன முறை நண்பர்களோடு வந்தபோது நல்லா கட்டினதா தம்பி சொன்னான்.

நான் மக்கி ரொட்டியோடு (மக்காச்சோளம்) அரை பிளேட் கதி ஆர்டர் செய்தேன். மக்கி ரொட்டி டக்கராக இருந்தது. கொதிக்க கொதிக்க கொஞ்சம் எண்ணைய் (நெய்யாகக் கூட இருக்கலாம். தெரியவில்லை) தடவிக் கொடுத்தார்கள். சைஸ் கொஞ்சம் சின்னது. கதி சுமாருக்கு கொஞ்சூண்டு மேலே. ரொம்பவே தண்ணியாக இருந்தது. அதுக்கப்புறம் ஒரு புல்காவும் அரை பிளேட் தாலும் ஆர்டர் பண்ணேன். தால் சொர்க்கம். இவ்வளவு டேஸ்டியாக நான் எந்த உணவகத்திலும் சாப்பிட்டது கிடையாது. உப்பு, காரம், மசாலா எல்லாமே சரியான அளவுகளில். புல்காவும் ரொம்ப சின்னது. அதனால் தாலை வேஸ்ட் பண்ண மனசில்லாமல் ஒரு ஸ்பூனை கேட்டு வாங்கி குடித்துவிட்டேன். பசி அடங்கினாற்போலவேயில்லை. அடுத்து போனது பனீர் பராத்தா. இது சுமார் தான். பராத்தாவில் உப்பு காரம் ரெண்டுமே கம்மி. ஆலு பராத்தா நன்றாக இருந்தது. மெனுவில் ஆலு, பனீர், மூளி (முள்ளங்கி), கோபி (காலிபிளவர்) என நான்கு வகை இருக்கிறது. இவற்றிற்க்கு நடுவே ரெண்டு கிளாஸ் ஜல்ஜீரா பானி ஸ்வாஹா:)
ஸ்வீட் சாப்பிடாமல் இருந்தால் உமாச்சி கண்ணைக்குத்தும்ன்னு பெரியவங்க சொல்லிருக்கறதால மால்புவா ஆர்டர் செய்தேன். Awesome. அளவான தித்திப்புடன் அட்டகாசமாக இருந்தது. கடைசியாக கிளம்புபோது வயிறும் உணவகம் போல நிரம்பியிருந்தது.
மேலதிக தகவல்கள்

உணவகம் - ஸ்ரீ ராஜஸ்தானி தாபா
இடம் - Second Avenue, அண்ணா நகர். இடத்தை கண்டுபிடிப்பது கொஞ்சம் கஷ்டம். Second avenue ரோட்டில் வரிசையாக ஹாட் சிப்ஸ், பிட்ஸா ஹட், அடையார் ஆனந்தபவன் போன்ற உணவகங்கள் இருக்கும். காஞ்சி ரெசிடன்சி என்ற ஹோட்டலுக்கு முன்னாள் உள்ள ஒரு கட்டிடத்தின் (ஆந்திரா பேங்கின் எதிர்புறமுள்ளது) மூன்றாவது மாடியிலிருக்கிறது தாபா. கவனமாக பார்க்கவில்லையெனில் பெயர் பலகை கண்ணுக்குத் தெரியாது.
டப்பு - Thali வகைகள் 80லிருந்து 140 வரை. இருவருக்கு 300 ரூபாய் ஆனது.

பரிந்துரை - தாரளமாக ஒருமுறை போகலாம். ஆனால் மறுபடியும் சொல்கிறேன் காரம் விரும்புவர்களுக்கு கஷ்டம் தான். பர்ஸை பதம் பார்க்காத வித்தியாசமான உணவு:)

பிகு : இந்த முறை உங்களை வயிறெரிய வைக்கும் விதமாக புகைப்படங்கள் அமையவில்லை. அண்ணன் எப்ப எந்திருப்பான் திண்ணை எப்ப காலியாகுமென நாலு பேர் டேபிள சுத்தி நின்னாங்க. இதுல நான் போட்டோ வேற எடுத்துட்டுருந்தேன்னா என் நிலைமை ரெம்ப மோசமாயிருக்கும்:)

March 30, 2009

I'm Back

சரியா பத்து நாள் கழிச்சு பதிவு போடறேன். போன வாரம் இணையத்தின் பக்கமே வரமுடியாதபடி இருந்தது. பத்து நாளும் சரியான அலைச்சல்:(
ஒரு வாரம் நல்லா ரெஸ்ட் எடுக்கனும். ஆணிகளையெல்லாம் புடுங்கிட்டு நேரம் கிடைக்கும்போது விட்டுப்போன பதிவுகளையெல்லாம் படிக்கனும்.

எனக்கும் டிவிடி பேருந்துகளுக்கும் ராசியே இல்லை போல. இந்த தடவை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து கிளம்பினவுடனேவே படம் போட்டான். என்ன படம் தெரியுமா? நம்ம கேப்டன் நடிச்ச அரசாங்கம். முடியல. ஐ.பாட் எடுத்து மாட்டினவ அந்த படம் முடிஞ்சுதான் இயர்போனை கழட்டினேன். உடனே அடுத்த படம் போட்டான்.அதுக்கு அரசாங்கமே பரவாயில்ல. பரத் படுத்திய நேபாளி. திரும்பவும் ஐ-பாட். ஊர் வரப்போகுதுன்னு அப்பா சொன்னபிந்தான் நிம்மதியா இருந்தது. ஐ-பாட் மட்டும் இல்லைன்னா நான் இந்நேரம் ஏதாவது மெண்டல் ஆஸ்பத்திரியில அட்மிட் ஆகிருப்பேன்:(

இனிமே தொடர் தாக்குதல்களுக்கு ரெடியா இருங்கப்பு. அடுத்த பதிவு என்னோட பேவரிட் செக்ஷன் கொட்டிக்கலாம் வாங்க. என்ன உணவகமாயிருக்கும்ன்னு யோசிச்சுக்கிட்டே இருங்க. சீக்கிரமா வலையேத்துறேன்:)

March 20, 2009

சம்பங்கி

பூ மார்க்கெட்டை கடந்து செல்லும்போது ரோஜா, மல்லி முல்லையின் வாசனையைத் தாண்டி வீசும் சம்பங்கியின் நறுமணம் உங்களுக்குப் பிடிக்குமா? பிடிக்குமென்றால் கைகொடுங்கள். நானும் உங்கள் கட்சிதான். ஆனால் இந்த சம்பங்கியை ஏன் பெண்கள் யாரும் தலையில் சூடிக்கொள்வதில்லை? இத்தனைக்கும் மார்க்கெட்டில் விசாரித்துப் பார்த்தால் சம்பங்கி தான் விலை ஜாஸ்தி. என்ன அப்படி பார்க்கறீங்க? ஓ யாரிவ பேசிக்கிட்டே போறாளேன்னா? என் பேரு கல்யாணி. எனக்கு இன்னிக்கு வளைகாப்பு. நேத்துதான் கல்யாணம் ஆனா மாதிரி இருக்குன்னு அம்மா சிரிச்சுகிட்டே சொன்னபோது வெட்கத்தையும் தாண்டி என்னமோ மாதிரி இருந்தது. எனக்கு கல்யாணமாகி ஒரு வருஷமாகப்போகுது. அங்க பாருங்க. வர்றவங்களை வரவேற்கிறேன் பேர்வழின்னு அங்கிங்க ஓடிக்கிட்டிருக்காரே ராம் அவர் தான் என் வீட்டுக்காரர். முழுப்பேரு கல்யாணராமன். பெயர் பொருத்தம் நல்லாருக்குன்னு தான யோசிக்கிறீங்க. எங்களுக்கு ஜாதகப் பொருத்தம் பார்த்த ஜோசியர் அசந்தே போய்ட்டார். அவர் வாழ்நாளில இப்படி அம்சமா பொருந்தின ஜாதகத்தை பார்த்ததேயில்லையாம். எந்த தோஷமுமில்லாத எல்லா பொருத்தங்களும் நிறைஞ்ச அம்சமான ஜாதகமாம் எங்க ரெண்டு பேருக்கும்.

ராம் கம்ப்யூட்டர் கம்பெனில வேலை பார்க்கிறார். கைநிறைய சம்பளம், எந்த கெட்ட பழக்கமுமில்லை, சொந்த வீடுன்னு தரகர் போட்டோ குடுக்கும்போதே அம்மாக்கு ரொம்ப பிடிச்சுப்போச்சு. இத்தனைக்கும் இதான் முதல் வரன். போட்டோல நல்லா ராஜா மாதிரி இருந்தார். வழக்கமான பொண்ணு பார்க்கிற சம்பிரதாயமெல்லாம் இல்லாம பெசண்ட் நகர் அஷ்டலக்ஷ்மி கோவிலுக்கு வரசொன்னாங்க. அங்கேயே கைத்தாம்பூலம் மாத்தி நிச்சயதார்த்தையும் ரொம்ப சிம்பிளா முடிச்சாங்க. சீர் பத்தி அம்மா பேசினபோது உடனே அவர் அதெல்லாம் ஒன்னும் செய்யக்கூடாதுன்னு சொன்னப்ப ரொம்ப சந்தோஷமாயிருந்தது. பக்கத்து வீட்டு கண்மணி புருஷன் வீட்டுல ஒரு பெரிய பட்டியலே கொடுத்தாங்க. கடன வாங்கி எல்லாத்தையும் செஞ்சு முடுக்க மணி மாமா பட்ட கஷ்டம் கொஞ்சநஞ்சமில்ல. அந்த மாதிரி எதுவும் கேக்காம இருந்தது ரொம்ப சந்தோஷம். ஆடி மாசம் முடிஞ்ச முதல் முகூர்த்தத்திலேயே கல்யாணம். குறைவான கூட்டத்துடன் ரொம்ப எளிமையா ஆதரவற்ற குழந்தைகளுக்கு அன்னதானத்தோட நல்லபடியா நடந்தது. கல்யாணத்துக்கு ஆன செலவுல பாதியை எங்கம்மா கையில கொடுத்து அம்மாவ அழவைச்சிட்டாங்க என் மாமியார்.


தேன்நிலவுக்கு ஊட்டி போனது, அப்புறம் விருந்துங்கற பேர்ல ஊரூரா போய் சாப்பிட்டு நான் கொஞ்சம் சதை போட்டதெல்லாம் சுவாரசியமில்லாத விஷயங்கள். என் மாமியார் என்னை ரொம்பவே நல்லா பார்த்துக்கறாங்க. கல்யாணமான இந்த பதினொன்றை மாதங்களில் ஒருநாள் கூட அவங்க என்னை அதட்டி பேசினது கிடையாது. ராமுக்கும் என்மேல் கொள்ளைப் பிரியம். இந்தமாதிரி ஒரு குடும்பத்துல வாக்கப்பட்டதுக்கு நான் குடுத்துவச்சிருக்கனும். வீட்டுக்கு வாரிசு வரப்போற சந்தோஷத்தில மாமியார் ரொம்ப பெரியளவுல வளைகாப்பு ஏற்பாடு பண்ணிருக்காங்க. ரெண்டு ஜோடி வைர வளையல்கூட வாங்கியிருக்காங்க. இதோ பங்க்ஷன் ஆரம்பிச்சிருச்சு. சந்தனம் பூசி குங்குமம் வைச்சி பன்னீர் தெளிக்கறாங்க. அய்யோ ஏன் இவ்வளவு பன்னீர் தெளிக்கிறாங்க?


"கழுத கழுத. பகல்லயே கனாக்காணுது பாரு. 28 வயசாச்சு. 30 பேர் பார்த்துட்டு போயிட்டாங்க. கல்யாணமான பாட்டக்காணோம். செவ்வாய் தோஷம், ஆயில்ய நட்சத்திரம்னு தேடிப் பிடிச்சு பெத்துருக்கேன் பாரு. சனியன். இந்த வயசுல பூக்கட்டி வித்து பொழப்ப ஒட்டனும்னு என் தலைல எழுதிருக்கு. அதுக்காவது ஒத்தாசையாஇருக்குதா? எப்ப பாரு ஏதாவது நினைப்பு. ஒன்னுக்கும் உதவாத தண்டக்கருமாந்திரம். ஏய் எருமை எங்கடீ பராக்கு பாத்துக்கிட்டிருக்க? ஒழுங்கா மாலைய கட்டுடீ எழவெடுத்தவளே."


வளைகாப்பு நல்லபடியா முடுஞ்சுது. ராமுக்கும், மாமியாருக்கும் பெண் குழந்தை வேணும்னு ஆசை. எனக்கு பையன். உங்களுக்கு என்ன தோணுது?


டிஸ்கி : கதைய படிச்சிட்டு நல்லாருக்குன்னு கமெண்ட் போட்டீங்கனா போனபோதுன்னு இத்தோட விட்டுடறேன். ஏதாவது வம்பு பண்ணிங்கன்னா அடிக்கடி இப்படி ஏதாவது எழுதி ரப்சர் பண்ணுவேன். நீங்களே முடிவு பண்ணிக்கோங்க.

March 19, 2009

விடைப்பெற்றாள் கிருஷ்ணவேணி

ஆனந்த விகடனில் வந்த கிருஷ்ணவேணி என்ற நிஜ திகில் தொடர் இந்த வாரத்தோடு முற்றுப்பெற்றது. 36 வாரங்களாக ஆனந்த விகடனை வாங்குவதற்க்கு நான் சொன்ன காரணம் இந்த தொடர் மட்டும்தான். ராஜேஷ் குமாரின் நாவல்களுக்குப் பிறகு நான் மிகவும் விரும்பிப் படித்த திகில் கதை. அதுவும் நிஜமாகவே நடந்த சம்பவங்கள் என்கிறபோது மயிர் கூச்செரிகிறது. கதையில் வரும் ஒவ்வொரு கதாப்பாத்திரமும் இயல்பாக செதுக்கப்பட்டுள்ளது. கதையின் முதல் பாகத்திலிருந்து கடைசி வரை விறுவிறுப்பு துளிகூட குறையவில்லை. முரளிக்காணியின் அமானுஷ்யமான மரணம், குட்டியின் மரணம் கதை நாயகியான கிருஷ்ணவேணியின் மரணம் எல்லாமே திகிலூட்டின. ஒவ்வொரு வாரமும் கதையை முடிக்கும்போதும் அடுத்த வாரத்தினை ஆவலாய் எதிர்கொள்ள வைத்திருப்பது ஆசிரியரின் சிறப்பு. 36 வாரங்களில் ஒரு முறைகூட சிறு தொய்வு ஏற்படாத நடை அருமை.

இந்த வாரம் நிஜ கிருஷ்ணவேனியின் போட்டோ, அவர் அண்ணன் அண்ணியின் போட்டோவோடு பேட்டி, விக்கிரமன்காணி வள்ளி ஆகியோர்களின் போட்டோ போட்டிருக்கிறார்கள். அப்பழுக்கில்லாத முழுநிலவு போன்ற கிருஷ்ணவேணியின் முகம் அப்படியே மனதில் பதிந்துவிட்டது. தொடர் ஆசிரியர் ராஜநாரயணன்னுக்கு வாழ்த்துக்கள். சீக்கிரமே இன்னொரு வித்தியாசமான கதைகளத்தோடு வாங்க சார்.

March 18, 2009

வ்ரூம் வ்ர்ரூம் - ஜூனியர் டைம்ஸ்

தென்றலக்காவின் ஆஷிஷ் பற்றிய இந்தப் பதிவை படித்ததிலிருந்து எனக்கும் ஜூனியரின் வண்டிகள் மீதான காதலை வலையேற்றனும்னு ஆசை. அம்மா வீட்டுக்கு போகும்போதெல்லாம் இஸ்மாயில் அங்கிளோ ராஜாமணி அங்கிளோ வந்து ஜூனியரை தூக்கிக்கொண்டு போய் ஜீப்பில் உட்காரவைத்துவிடுவார்கள். ஸ்டியரிங்கை திருப்புவதும் கியர் மாற்றுவதுமாக அவன் செய்கைகள் கொள்ளை அழகு. வீடியோகூட எடுத்தேன். ஜூனியர் பிற்காலத்தில் embarass ஆகக்கூடாதுன்னு அதப் போடல:)அப்புறமா சிட்டி செண்டர் போகும்போது அங்கிருக்கும் ப்ளே ஏரியாவில் வைக்கப்பட்டிருக்கும் கார், ட்ரைன், போன்றவற்றில் ஏறினால் கீழே இறங்கவே மாட்டான்.
அவனுக்கு வாங்கின விளையாட்டுப் பொருட்களில் அவன் உபயோகிப்பது இவற்றை மட்டும்தான். மத்தபடி அவனுக்குன்னு வாங்கின விளையாட்டு பொம்மைகள் எல்லாம் சீந்த ஆளில்லாமல் தான் இருக்கின்றன. இவை போரடித்தால் ரிமோட், செல்போன் என எலக்ட்ரானிக் சாதனங்கள் மாட்டிக்கொண்டு அல்லல்படும்.

போன முறை சிட்டி செண்டர் போயிருந்தபோது அந்த காரை விட்டு கீழே இறங்கமாட்டேன்னு ஒரே அழுகை. கீழே விழுந்து புரண்டு தேம்பி தேம்பி அழுகை. பையன் அழுததும் ரகுவுக்கு என்னவோ போலாகிவிட்டது. ரிமோட்டில் இயங்கக்கூடிய கார் வாங்கலாமென்றார்ர். மார்க்கெட்டில் விலை விசாரித்தபோது 5000 என்றார்கள். நான் வேண்டவே வேண்டாமென்றேன். ரொம்ப நாளாக மைக்ரோவேவ் ஓவன் வாங்கலாமென்ற பிளானை காருக்கு மாற்றியாச்சு. "இப்ப அவனுக்கு இவ்வளவு காஸ்ட்லியா வாங்குறது வேஸ்ட் ரகு" என்றதுக்கு கொஞ்சமும் யோசிக்காமல் "அவனுக்கு கார் வாங்குவதும், உனக்கு ஓவன் வாங்குவதும் ஒன்னுதான். அவனாவது futureல யூஸ் பண்ணுவான்" என சொல்லி என் வாயை அடைத்தாகிவிட்டது. போதாக்குறைக்கு மாமன் வேற மருமகனுக்கு கண்டிப்பா வாங்கனும்னு சப்போர்ட்.
வண்டில உக்காந்தவுடனே ஒரே சந்தோசம்தான்.
Ready for a ride.

டிஸ்கி : இன்னும் இரண்டு பதிவு ஜூனியரைப் பற்றி. விரைவில் எதிர்பாருங்கள்:)

March 17, 2009

என்னத்த சொல்ல

போன துணுக்ஸ் பதிவில் பரிசல் துணுக்ஸ் என்ற தலைப்பு வெண்பூ பயன்படுத்தியது என்று சொல்லியிருந்தார். வெண்பூ அண்ணாவிடம் மன்னிப்பு கேட்டதுக்கு ரொம்ப பெருந்தன்மையா பரவாயில்லைன்னு சொல்லிட்டார். இருந்தாலும் என் மனசாட்சி உறுத்தவே துணுக்ஸ் நிறுத்தப்படுகிறது. ரொம்ப சந்தோஷப்பட்டுக்காதீங்க. அதுக்குப் பதிலாதான் இந்த தலைப்பு:)
*******

உறவினருக்கு கல்யாணத்துக்காக பெண் பார்க்க ஆரம்பித்திருக்கிறார்கள். 28 வயதான பெண் ஒருவரின் கண்டீஷன் "குறைஞ்சது 50,000 சம்பாதிக்கனும். கல்யானத்துக்கு அப்புறம் தனிக்குடித்தனம் தான். அக்கா தங்கை இருக்கக்கூடாது". இன்னும் பல. பொண்ணோட குவாலிபிகேஷன். 12 வது பெயில். இந்தக் காலத்துல பொண்ணு கிடைக்கிறது குதிரை கொம்பாருக்காம். இன்னும் கொஞ்சம் வருஷம் கழிச்சு பையன் கிடைக்கிறது கஷ்டமா இருக்குமாம். ஆக ரெகுலரா என் பதிவ படிச்சிட்டு பின்னூட்டம் போடும் பொண்ண பெத்த பதிவர்களுக்கு முன்னுரிமை அளிப்பதைப் பற்றி பரிசீலிக்கப்படும்:)
************

நான் எழுதனும்ன்னு நினைக்கிற மேட்டர வேற யாராவது ரொம்ப நல்லா எழுதிடறாங்க. அப்படி நான் எழுதனும் நினைச்ச ஏர்டெல் விளம்பரத்த பத்தி கார்க்கியும், பரிசல் சாரும் எழுதினாங்க. அப்புறம் வோடோபோன் விளம்பரத்த பத்தி பரிசல் சார் தனி பதிவே போட்டுட்டார். விடமாட்டேன். புதுசா வந்திருக்கிற மிரிண்டா விளம்பரத்தில் மொக்க ஜோக்காக இருந்தாலும், பிண்ணனி இசை டக்கராக இருக்கிறது.

***********

பேருந்தில் லேட்டஸ்ட் படங்களின் காமெடி சீன்ஸ் ஒளிபரப்பினார்கள். வில்லு படமும் ஏகன் படமும். என் நிலைமை எப்படியிருக்கும். அப்படியே கண்ணாடிய ஒடைச்சிட்டு வெளிய குதிச்சிடலாம்னுகூட யோசிச்சேன். அப்புறம் வருங்காலத்தில் தமிழ் பதிவுலகின் நம்பிக்கை நட்சத்திரத்தை இழந்துட்டோமேன்னு நீங்க எல்லாரும் சோகத்தில் தத்தளிப்பீங்களேங்கற ஒரே காரணத்துக்காக முடிவ மாத்துக்கிட்டேன். நயந்தாரா கொஞ்சம் நடிச்சும் காட்டிருக்கலாம்.
**********

அஜீத்தின் இந்தப் பாட்டைப் பாருங்களேன்.
ஒவ்வொரு முறை இந்தப் பாட்டைப் (தப்பித்தவறி) பார்க்கும்போதும் தோன்றுவது "பாட்டப் பாடின ஹரிஹரன் கூட இந்தளவுக்கு கஷ்டப்பட்டிருக்கமாட்டார்". அப்பாவோட கமெண்ட் இன்னும் மோசமா இருக்கும். அஜித் ரசிகர்களுக்கு பயந்து அதை இங்கே குறிப்பிடல. இன்னொரு பாட்டு மிஜிக் டைரக்டராக முயற்சி பண்ணுவாரே. அதுல மழைல நனைஞ்சிக்கிட்டே பாடுவார் (படுத்துவார்). நான் விஜயின் தீவிர ரசிகை இல்லையென்பதற்கான ஆதாரம்.
***********

செவ்வாய் காலை - தாம்பரம் டூ மதுராந்தகம்
வியாழன் மதியம் - மதுராந்தகம் டூ அண்ணா நகர்.
வியாழன் இரவு - அண்ணா நகர் டூ தாம்பரம்.
சனி விடியற்காலை - தாம்பரம் டூ பாண்டிச்சேரி.
திங்கள் விடியற்காலை - பாண்டி டூ கள்ளக்குறிச்சி
திங்கள் இரவு - கள்ளக்குறிச்சி டூ பாண்டி
செவ்வாய் காலை - பாண்டி டூ தாம்பரம்.

இப்படி போன வாரத்தில் முக்கால்வாசி நேரம் பயணத்திலேயே கழிந்தது. வரும் ஞாயிறு வரை ரெஸ்ட் (வீட்டில் புடுங்க வேண்டிய ஆணிகளெல்லாம் கடப்பாரைகளாக மாறி கழுத்தை நெரிப்பது வேறு விஷயம்). திரும்பவும் திங்கள் கள்ளக்குறிச்சி போகனும். ஒரு வாரம் அங்க ஸ்டே. எக்கச்சக்கமா பதிவுகள் ட்ராப்டில் முடிக்கப்படாமல் இருக்கின்றன். இந்தப் பயணங்களின் காரணமாக நீங்க தப்பிச்சிட்டிருக்கீங்க. அடுத்த வாரம் முழுக்க பதிவு போட முடியாது. ம்ம்ம்ம் ரொம்ப காலத்துக்கும் நீங்க எஸ்கேப் ஆகமுடியாது. மார்ச் முடிஞ்சு ஏப்ரலில் உங்கள் எல்லாருக்கும் சனி பிடிக்கப்போகுது. ஏப்ரலில் தொடர் தாக்குதலுக்கு ரெடியாருங்கப்பு:)

March 13, 2009

கீதம் சங்கீதம்

இப்போதெல்லாம் டிவியில் எந்த சேனலைத் திருப்பினாலும் ரியாலிட்டி ஷோ என்கிற பெயரில் சூப்பர் சிங்கர், ஸ்டார் சிங்கர் என ஒரே பாட்டு போட்டிதான். ரொம்பவே திகட்டுகிறது. நான் இந்த மாதிரியான ரியாலிட்டி ஷோக்களைப் பார்ப்பதேயில்லை. ஒரே டிராமா. கண்ணீர்விட்டு அழுவது, நடுவர்கள் போட்டியாளர்களை திட்டுவது, பின்னர் அது ச்சும்மா லுலுலாயிக்குன்னு சொல்லி பிறந்தநாள் வாழ்த்து சொல்வது போங்டாங்க நீங்களும் உங்க (ட)ரியாலிட்டி ஷோவும் என கத்தனும் போல தோணுது. இப்பல்லாம் வீட்டில டி.வி பார்க்குற நேரம் தடாலடியா குறைஞ்சுடுச்சு. முழுநேரமும் பாட்டு இல்லன்னா ஜூனியருக்காக ரைம்ஸ்ன்னு mp3 ப்ளேயர் தான் ஓடிக்கிட்டிருக்கு:)

போன வாரம் மாமியார் வீட்டுக்கு வந்திருந்தபோது விஜய் டிவியில் வரும் சூப்பர் சிங்கர் பற்றி ரொம்பவே சிலாகித்துப் பேசினார். அந்த 4 நாட்கள் அவர்கள் அடித்த கூத்தைக் காண கண்கோடி வேண்டும். நான் பார்த்த மட்டில் என் சங்கீத சிற்றறிவிற்க்கு (இது பத்தி தனி பதிவு அப்புறமா) எட்டிய வகையில் நடுவர்கள் பாராட்டும் அளவிற்க்கு இவர்களுக்கு தகுதியிருக்கிறதா என்பதென் கேள்வி. ஒரே ஒரு போட்டியாளர் பட்டையைக் கிளப்பினார். இத்தனைக்கும் அவர் கர்நாடக சங்கீதம் கற்றிருக்கவில்லை. எனக்குத் தெரிந்து கர்நாடக சங்கீதம் கற்றுத்தேர்ந்தவர்களுக்கு/ ரசிக்கத் தெரிந்தவர்களுக்கு செகண்ட் கிரேட் பாடல்கள் பிடிப்பதேயில்லை. அதேபோல் குரலும் ரொம்பவே இனிமையாக இருக்கவேண்டும் என எதிர்பார்ப்பார்கள். ஆனால் இப்போதிருக்கும் இசைக் கலைஞர்கள் / பாடகர்கள் நிறைய பேருக்கு செகண்ட் கிரேட் பாடலகளும், குத்துப்பாட்டுகளும் தியாகராஜ கீர்த்தனைகளை விட நன்றாக சூட் ஆகின்றன. நிறைய பேர் குத்துப்பாட்டுகளை உள்ளுக்குள் ரசித்தாலும் அதை வெளிப்படையாக ஒத்துக்கொள்வதில் தயக்கம் காட்டுகிறார்கள். SPB, ஜேசுதாஸ் இன்னும் பலருக்கு அப்பால் சில வித்தியாசமான குரல்களும் இருக்கின்றன. பாடகிகளில் சித்ராவிற்குப் பிறகு எனக்கு ரொம்பவும் பிடித்தவர் ஸ்வர்ணலதா. ஹை பிட்சில் அலட்டாமல் பாடுவார்.










Get this widget Track details eSnips Social DNA

இளா அருணின் இந்தப் பாட்டு தூளாக இருக்கும்.
Get this widget Track details eSnips Social DNA

அதே போல் வித்தியாசமான குரல் கொண்ட சாகுல் ஹமீதின் பாடல்கள் எல்லாமே சூப்பராக இருக்கும். ப்ச்ச் உயிரோடு இருந்திருந்தால் சிகரம் தொட்டிருப்பார்.
Get this widget Track details eSnips Social DNA

இப்போதெல்லாம் குத்துப்பாட்டு/fast numbers என்றால் அனுராதா ஸ்ரீராமைத்தான் கூப்பிடுகிறார்கள். ஒரே மாதிரியான டோனில் அவர் பாடுவது ரொம்ப போர். எனக்கு அனுராதா ஸ்ரீராமை பிடிக்காதென்பது வேறு விஷயம்:)
ஆகக்கூடி நான் என்ன சொல்றேன்னா கர்நாடக சங்கீதம் மட்டுமே நல்ல இசையென்று கிடையாது. இசை அவரவர் ரசனைக்கேற்ப மாறிக்கொண்டே இருக்கும். குத்துப்பாட்டு (சிலவற்றைத் தவிர) கேட்பதெல்லாம் கேவலமில்லை.