March 12, 2010

ஆப்ரேஷன் எண்டபி - 2

இஸ்ரேலியர்களை/யூதர்களைப் பற்றிய தகவல்கள் கிடைக்குமிடங்களிலெல்லாம் தவறாது இருக்கும் குறிப்பு 'The most intelligent race'. யூதர்கள் அறிவாளிகள், தந்திரமானவர்கள், குயுக்திக்குப் பேர் பெற்றவர்கள் என பல விஷயங்கள் அவர்களைப் பற்றி. அப்படிப்பட்டவர்கள் தீவிரவாதிகளை விடுதலை செய்யவேண்டுமென்ற பாலஸ்தீனியர்களின் கோரிக்கையை ஏற்பார்களா? 48 மணி நேரம் அவகாசத்தை நீட்டிக்கச் செய்தது அதிரடியாய் களமிறங்கி பயணக்கைதிகளை மீட்பதற்கு தான். இஸ்ரேல் ராணுவத்தின் பிரிகேடியர் ஜெனரல் டான் ஷார்மன் ஒரு திட்டத்தை முன்வைத்தார். என்ன திட்டமெனில், ஒருத்தனையும் ரிலீஸ் பண்ண வேண்டாம். வீடு புகுந்து அடிப்போம் என்றார்.
ஏதன்ஸ் - எண்டபி - விமானக் கடத்தப்பட்ட பாதை
இதற்கிடையில் எண்டபியில் தீவிரவாதிகள் குத்துமதிப்பாக ஒரு சர்வே நடத்தினார்கள். யூதர்கள் தவிர மற்ற அனைவரையும் விடுவிக்க முன்வந்தாரகள். அதன்படி 105 யூதப் பயணிகளை மட்டும் வைத்துக்கொண்டு மற்றவர்களை விட்டுவிட்டார்கள். விமானத்தின் கேப்டன் மைக்கேல் பேகோஸ் 'இங்கு பிணைக்கைதிகளாக வைக்கப்பட்டிருக்கும் யூத பயணிகளின் உயிருக்கு என் குழு தான் பொறுப்பு. அவர்களில்லாமல் விமான ஊழியர்கள் குழு செல்லாது' என மறுப்புத் தெரிவித்து போக மறுத்தார். அவருடன் மீதமிருந்த பதினோரு விமான ஊழியர்களும் எண்டபி விமானநிலையத்திலேயே தங்கிவிட்டனர். யூதர்கள் அல்லாத பயணிகளை விடுவித்ததன் மூலம் தீவிரவாதிகள் இஸ்ரேல் ராணுவத்தின் வெற்றிக்கு மறைமுகமாக உதவ வழிவகுத்திவிட்டனர்.

மீண்டும் இஸ்ரேலுக்கு வருவோம். மளமளவென்று வேலைகளைப் பார்த்தார்கள். இஸ்ரேலின் உளவுத்துறையான, உலகிலேயே மிகச்சிறந்த உளவுத்துறை என குறிப்பிடப்படும் மொஸாட்-ன் அறிவுறுத்தல் படி, இஸ்ரேல் ராணுவத்தின் சிறப்பு பிரிவான செய்யட் மட்கல் (Sayeret Matkal) வீரர்கள் கமாண்டர் யோனடன் நேடன்யாஹு தலைமையில் பயணிகளை மீட்க தயாரானார்கள். இந்த மீட்பு நடவடிக்கைக்காகவே நான்கு C-130 வகையைச் சார்ந்த ஹெர்குலஸ் விமானங்கள் வாங்கப்பட்டன. விமானம் தரையிறங்குமிடத்திலிருந்து பிணைக்கைதிகளை அடைத்து வைத்திருக்கும் அறை வரை பிரச்சனையின்றி செல்ல உகாண்டா அதிபர் உபயோகிப்பது போன்ற மெர்சிடிஸ் கார் மற்றும் லேண்ட் ரோவர் கார் ஒரு விமானத்தில் ஏற்றப்பட்டது. மருத்துவ உதவிக்கான பொருட்கள், தொலைதொடர்பு சாதனங்களுடன் ஒரு போயிங் 707 விமானமும் தயாரானது.
C-130 ஹெர்குலஸ் ரக விமானம்
எந்த அடிப்படையில் இஸ்ரேல் ராணுவத்தினர் இந்த தாக்குதலுக்கு தயாரானார்கள்?

1. உகாண்டாவில் நிறைய இஸ்ரேலியர்கள் இருந்ததாக நாம் முந்தைய பதிவில் பார்த்தோம். அங்கு பிழைப்புக்கு என்ன செய்தார்கள்? இஸ்ரேலியர்கள் தாம் உகாண்டாவின் பெரும்பான கட்டிடங்களை உருவாக்கியவர்கள். எண்டபி விமான நிலையத்தை கட்டுவித்ததும் ஒரு இஸ்ரேல் நிறுவனம் தான். சோலேல் போன் (Solel Boneh) என்ற அந்த நிறுவனத்திடமிருந்து எண்டபி விமான நிலையத்தின் வரைபடம் பெறப்பட்டது.

2. ஏற்கனவே கடத்தல்காரர்கள் விடுவித்த பயணிகளிடமிருந்து, கடத்தல்காரர்களின் அடையாளம், பயணிகள் தங்க வைக்கப்பட்டிருந்த அறையின் அமைப்பு, அவர்கள் வைத்திருந்த ஆயுதம் போன்ற தகவல்கள் பெறப்பட்டன.

3. மிக முக்கியமான நம்பிக்கை. யாருமே நினைத்துப் பார்க்க மாட்டார்கள் இஸ்ரேல் இப்படியொரு அதிரடி நடவடிக்கையில் இறங்குமென்று. அந்த நம்பிக்கைத் தான் இஸ்ரேல் ராணுவத்திற்கு பெரிய துணையாக இருந்தது. நினைத்துப் பார்க்காத விஷயத்தை நடத்தி எதிரியை நிலைகுலையச் செய்வது.
மீட்பு நடவடிக்கையின் மாதிரி
ஜூலை 3 பிற்பகல் 1.20 மணிக்கு விமானங்கள் பயணத்தை துவக்கின. எகிப்து, சூடான், சௌதி அரேபிய நாடுகளின் ரேடார்களின் கண்ணில் மண்ணைத்தூவிவிட்டு விமானங்கள் எண்டபியை அடைந்தபோது மணி இரவு பதினொன்று. நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை விட ஒரே ஒரு நிமிடம் அதிகமானது. தரையிறங்கும் போதே கார்கோவின் கதவுகள் திறக்கப்பட்டன. துரிதகதியில் கார்களும், ஆயுதங்களும் இறக்கப்பட்டன். மொத்தம் 29 வீரர்கள். கமாண்டர் நேடன்யாஹு தலைமையில் அவர்களுக்கு இடப்பட்ட கட்டளை.

1. ஏரியாவை கண்ட்ரோலுக்கு கொண்டு வர வேண்டும்.
2. நம் விமானங்களை நோக்கி எதிரிகள் முன்னேறாமல் பாதுகாக்க வேண்டும்.
3. அதிரடியாய் களமிறங்கி பயணிகளை மீட்க வேண்டும்.
4. பயணிகளை பத்திரமாக விமானத்திற்கு கொண்டு வர வேண்டும்.
5. சுபம். கிளம்பிவிடலாம்.

விமானத்திலிருந்து இறக்கப்பட்ட மெர்சிடிஸ் மற்றும் லேண்ட் ரோவர் கார்களில் ஏறிக்கொண்ட வீரர்கள் டெர்மினலை நோக்கி பயணித்தார்கள். அவர்கள் கணக்குப்படி இடி அமினீன் கார் என உகாண்டா வீரர்கள் தடுக்க மாட்டார்கள் என நினைத்தார்கள். ஆனால் துரதிருஷ்டவசமாக இடி அமின் சில தினங்களுக்கு முன்னர் தான் வெள்ளை நிற மெர்சிடிசுக்கு மாறியிருந்தார். கருப்பு நிற மெர்சிடிஸில் வருவது யாரென தெரிந்துகொள்ள இரு காவலர்கள் வண்டியை நிறுத்த முயற்சித்தார்கள். அவர்களை சுட்டுக் கொன்ற இஸ்ரேல் கமாண்டோக்கள், நொடியும் தாமதிக்காது டெர்மினலை நோக்கி முன்னேறினார்கள். அப்படி செல்கையில் தலைமேயேற்ற வீரர் நோடன்யாஹு கட்டுப்பாட்டு கோபுரத்திலிருந்து சுடப்பட்டு இறந்தார். இந்த ஆப்ரேஷனில் இறந்த ஒரே இஸ்ரேலிய வீரர். அவர் நினைவாக ஆப்ரேஷன் நேடன்யாஹு என்றும் அழைக்கப்படுகிறது.
தாக்குதலில் உயிரிழந்த ஒரே இஸ்ரேலிய வீரர் நேடன்யாஹு
டெர்மினலுக்குள் நுழைந்துகொண்டே "யாரும் எழுந்திருக்காதீர்கள். நாங்கள் இஸ்ரேலிய வீரர்கள்." எனக் கத்தினார்கள். விடுதலையாகப் போகிறோம் என்ற சந்தோஷத்தில் எழுந்து நின்ற ஒரு பயணியை தீவிரவாதி என நினைத்து சுட்டனர். மளமளவென்று தீவிரவாதிகளை வீழ்த்திய பின் பயணிகளை மீட்டு விமானங்களில் ஏற்றினர். ஒரு மணி நேரத்தில் முடிக்க வேண்டுமென திட்டமிட்ட தாக்குதல் 58 நிமிடங்களில் முடிந்தது. அதில் எட்டு தீவிரவாதிகளை வீழ்த்த ஆன நேரம் வெறும் முப்பது நிமிடங்கள். ஒரே ஒரு வீரர், மூன்று பயணிகளை பலிகொடுத்து. போகும்போது சும்மா போக வேண்டாமென நினைத்த இஸ்ரேல் வீரர்கள், உகாண்டாவின் மிக் 17 ரக போர் விமானங்களை (புறப்பட்ட பின் வானில் இடையூறு செய்யாமலிருக்க) காலி செய்துவிட்டுச் சென்றனர். கிட்டத்தட்ட பதினேழு விமானங்களுடன் 45 உகாண்டா வீரர்கள் உயிரை விட்டார்கள்.

உலகம் முழுவதும் இஸ்ரேலின் இந்த தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கை பல்வேறு வகையாக விமர்சிக்கப்பட்டது. அவமானத்தில் இடி அமின் துடித்தார். மூன்று வருடங்கள் கழித்து ஆட்சி பறிக்கப்பட்டு உகாண்டாவை விட்டு வெளியேறினார். இந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு புத்தகங்களும், சினிமாக்களும் வந்தன. வரலாற்றின் பக்கங்களில் அதிரடி நடவடிக்கைக்காக நிரந்தர இடம் பெற்றது இந்தச் சம்பவம்.

பின்னிணைப்பு

இடி அமின் - ச.ந.கண்ணன்.
http://www.jewishvirtuallibrary.org/jsource/Terrorism/entebbe.html
http://en.wikipedia.org/wiki/Operation_Entebbe
http://www.operationentebbe.com/

www.military-today.com/aircraft/c130_hercules.jpg
http://newsimg.bbc.co.uk/media/images/41795000/gif/_41795388_entebbe_airport3_416.gif

15 comments:

Robin said...

இஸ்ரேல், தீவிரவாதிகளின் எமன்.
இந்திய நாட்டின் கமாண்டோக்கள்கூட இஸ்ரேலில் பயிற்சி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அகல்விளக்கு said...

woww...

interesting.....

dondu(#11168674346665545885) said...

எண்டெப்பியைப் பற்றி பேசும்போது; அது நடப்பதற்கு முன்னால் நான் படித்த ஒரு கதை ஒன்று ஞாபகத்துக்கு வருகிறது.

ஒரு பயங்கரவாதியிடம் மூவர் அகப்பட்டுக் கொண்டனராம். ஒரு இந்தியர், ஒரு அமெரிக்கர், ஒரு இஸ்ரேலியர். அவர்களை கொல்ல முடிவு செய்த பயங்கரவாதி தத்தம் கடைசி ஆசையை கூறும்படி அவர்களை கேட்கிறார். இந்தியரும் அமெரிக்கரும் கடவுள் பிரார்த்தனை செய்ய ஆசைப்பட, இஸ்ரேலியரோ, பயங்கரவாதி தன்னை உதைக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறார். அவனும் அவ்வாறே செய்ய, பந்து போல ப்ரூஸ் லீ ஜம்ப் செய்து, குட்டிக்கரணம் அடித்து, தன் கைத்துப்பாக்கியால் பயங்கரவாதியை சுட்டுக் கொன்று விடுக்கிறார். இதை முன்னமேயே செய்திருக்கலாமே என அமெரிக்கர் கேட்க, அவ்வாறு செய்திருந்தால் இந்தியர் பயங்கரவாதியைக் கொன்ற குற்றத்துக்காக தன்னை ஐ.நா. பொதுச் சபை முன் இட்டுச் சென்றிருப்பார் என இஸ்ரேலியர் கூறுகிறார்.

இதை நான் படித்தபோது, ரொம்பத்தான் மிகைபடுத்திக் கூறுகிறார்கள் என நினைத்தேன். ஆனால், எண்டெப்பி விஷயத்தில் இந்தியா நடத்திய கூத்தைப் பார்த்ததும் மனம் மாறி விட்டது.

ஏர் பிரான்ஸ் விமானம் உகாண்டாவுக்குக் கடத்தப்பட்டு அதில் இருந்த யூதப் பயணிகளை மட்டும் பிடித்து வைத்துக் கொண்டு மற்றப் பயணிகளையும், விமானச் சிப்பந்திகளையும் விடுதலை செய்தனர் பாலஸ்தீனியத் தீவிரவாதிகள். இடி அமீனும் தீவிரவாதிகளுக்கு ஆதரவாய் செயல்பட்டார். அப்போதெல்லாம் இந்தியா அதைக் கண்டிக்கவில்லை. இஸ்ரேல் என்ன செய்தது? 4000 மைல்கள் பறந்துச் சென்று 53 நிமிடச் செயல்பாட்டுக்குப் பிறகு அத்தனைப் பேரையும் மீட்டு வந்தது, ஒரே ஒரு வயதானப் பெண்மணியைத் தவிர. ஏனெனில் அவர் உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டிருந்தார். அவரை உகாந்தியர் கொன்று விட்டனர். இந்தியா இப்போது என்ன செய்தது? உகாந்தாவின் இறையாண்மை பாதிக்கப்பட்டது என்று கூப்பாடு போட்டது. தன்னைப் பாதுகாதுக் கொள்ள முடியாதக் கிழவியைக் கொன்றது பற்றி மூச்சுக் கூட விடவில்லை இந்தியா. என்ன வெட்கம்!

அன்புடன்,
டோண்டு ராகவன்

மங்குனி அமைச்சர் said...

மேடம் அருமையா எழுதி இருக்கீங்க , அந்த ஏர்போர்ட்ல நடந்த "ஆப்ரேஷன் நேடன்யாஹு" விசியத்த இன்னும் கொஞ்சம் டீடயில்டா எழுதி இருக்கலாம். அத பத்தி இன்னொரு பதிவு வேணா போடுங்களேன்

Chitra said...

It is always interesting to read about this operation. Thank you for reminding us again about this. :-)

Vidhya Chandrasekaran said...

நன்றி ராபின்.
நன்றி அகல்விளக்கு.
நன்றி டோண்டு சார்.
நன்றி சித்ரா.
நன்றி அமைச்சர்.

"உழவன்" "Uzhavan" said...

சரியான ப்ளான் & தில்.. அவங்களுக்குத்தான் தில்லு துரைனு பேரு வச்சிருக்கனும்
நல்லா எழுதியிக்கீங்க மேடம் :-)

Rajalakshmi Pakkirisamy said...

Interesting...

Unknown said...

இன்னும் கொஞ்சம் டீடெய்ல்டா எழுதி இருக்கலாம். தொடக்கம் அருமை. முடிவு தான் படக்குன்னு முடிச்சிட்ட மாதிரி இருக்கு.

andal said...

simply super :)

Thamira said...

ஆபரேஷன் எண்டபி என்ற சொல்லைத்தான் கேள்விப்பட்டிருக்கிறேன். இப்போது அதன் பின்னணியை அறிந்து கொள்ளமுடிந்தது. வரலாறு.

விக்னேஷ்வரி said...

இண்டெரெஸ்டிங் தொடர். நல்லாருந்தது வித்யா.

தாரணி பிரியா said...

படிக்கும்போதே பரபரன்னு இருக்குதுங்க. வாழ்த்துக்கள் வித்யா

Raghu said...

ரெண்டு ப‌திவுமே ந‌ல்லாயிருந்த‌து, இது மாதிரி அடிக்க‌டி எழுதுங்க‌

Vidhya Chandrasekaran said...

நன்றி உழவன்.
நன்றி ராஜி.

நன்றி கேவிஆர் (மூன்று பாகங்களாய் எழுதலாமென்று தான் இருந்தேன். சீரியல் மாதிரி சவசவன்னு ஆயிடுமோன்னு தான் ரெண்டுலயே முடிச்சிட்டேன்).

நன்றி ஆண்டாள்.
நன்றி ஆதி.
நன்றி விக்கி.
நன்றி தாரணி பிரியா.
நன்றி ரகு.