April 27, 2010

சூடு வைக்கலாமா??!!

கலா அக்காவும் (புதுகைத் தென்றல்), ரகுவும் விருது கொடுத்து கௌரவப்படுத்தியிருக்காங்க. நெம்ப நன்றி. வாங்கின விருத என் வலைப்பக்கத்தைப் (பதிவு போட்டா மட்டும்) பார்க்கும் சுமார் 180 வாசகர்களுக்கு (எவ்ளோ முட்டினாலும் இந்த ஹிட் கவுண்டர் இதுக்கு மேல போகமாட்டேங்குது. மீட்டர்க்கு சூடு வெக்கனும் போல) இந்த விருதினை கொடுக்கிறேன் (மேடயப் போட்டு என்னை வாழ வைக்கும் தெய்வங்களேன்னு பேசலாமா??!!).



*****************

அதிகாலை 4.30 அல்லது ஐந்து மணிக்கு நெடுஞ்சாலையில் டீக்கடையில் டீ வாங்கிக் குடித்திருக்கிறீர்களா? சென்ற ஞாயிற்றுக்கிழமை விடியற்காலை (எனக்கு மிட்நைட்) 3 மணிக்கு ஆரம்பித்த பயணம் இரவு 9.30 மணிவாக்கில் முடிவடைந்தது. 5 மணிக்கு சுடச்சுட டீ (என்னதான் முயற்சி பண்ணாலும் வீட்டில் போடும் டீ அந்தளவுக்கு நன்றாக இருப்பதில்லை). அதுவும் அந்த கண்ணாடி டம்ளரை பிடிக்கமுடியாதளவுக்கு சூடு. துப்பட்டாவில் சுற்றி வாங்கிக் குடித்தது தொண்டைக்கும் மனதுக்கும் இதமாக இருந்தது. கூடவே ஒரு பிஸ்கட். டிவைன். விடியற்காலை மெல்லிய குளிர், விர்ரென பறக்கும் வண்டிகளின் சத்தம் என ரம்மியமாய் இருந்தது. ஏதாவது பாட்டுப் போடசொல்லி ட்ரைவரிடம் சொன்னதற்கு வில்லு படம் இருக்கு போடவா என்றார். செட்ட கழட்டி கடாசுங்க என்று சொல்லிவிட்டோம்.
**************

அணைக்கரை பாலத்தில் பழுது காரணமாக போன வருடம் கனரக வாகனப் போக்குவரத்து மூடப்பட்டது. கார்கள் மட்டுமே அனுமதிக்கிறார்கள். ஒரு வருஷமா என்னப் பண்றாங்களோ தெரியல. ஊரெல்லாம் சுத்திகிட்டு சென்னை வரவேண்டியதாய் இருக்கிறது. 11 மணிக்கு கும்பக்கோணத்தில் பேருத்து ஏறினோம். அசோக் பில்லரில் இறங்கியபோது மணி ஆறேமுக்கால். வெரி லாங் டே. ஜுனியர் நன்றாக தூங்கிக்கொண்டுவந்தார். எனக்குதான் தூக்கம் வரவில்லை. பராக்கு பார்த்துக்கொண்டே வந்தேன். பண்ரூட்டியில் நுழைந்ததுமே பலாப் பழ வாசனை மூக்கைத் துளைத்தது. மிதமான நல்லெண்ணைய் வாசனையோடு தேனில் பலாப்பழம் ஊறவைத்து சாப்பிட்டது நினைவுக்கு வந்தது. ஹும்ம்.
***************

சுறா பாடல்கள் ரொம்ப சுமார் என நிறைய பேர் சொல்லிக் கேட்டேன். சென்ற வாரம் நானே கேட்டேன். ஒன்னும் மோசமில்லையென்றாலும் எல்லா பாடல்களும் தளபதி புகழ் பாடுவது கொஞ்சம் கடியாக இருக்கிறது. என்னுடைய பேவரிட் 'தஞ்சாவூர் ஜில்லாக்காரி', 'நீ நடந்தால் அதிரடி'. இரண்டும். ஜூனியருக்கு வழக்கம்போல் டமுக்கு டக்கா தான். எல்லாப் பாட்டுக்கும் ஆடுகிறான். சன் டிவியின் பப்ளிசிட்டி பயங்கரமாய் ரீச் ஆகிறது. என் மாமியாருக்கு கூட ரிலீஸ் தேதி கரெக்டாய் தெரிகிறது. சுறா படம் வரட்டும் அப்புறமாய் நான் விஜய்க்கு எழுதிவைத்திருக்கும் கதையை பதிவிடுகிறேன்:))
********************

நண்பர்களோடு கெட் டு கெதர். சமீபத்தில் திருமணமான தோழி கொடுத்த ட்ரீட். அவருடைய கணவர் வெள்ளிக்கிழமை கோவிலுக்கு செல்வார் என்றாள். உடனே நாங்கள் எல்லாரும் கோரசாய் அடித்த கமெண்ட் "இருந்து என்ன ப்ரோயஜனம்? கடவுள் அவரக் கைவிட்டதோட இல்லாம கடுமையான பனிஷ்மெண்டும் கொடுத்துட்டாரே". நல்லவேளை அவள் அப்போதுதான் பில் செட்டில் செய்தாள்:)
****************

April 23, 2010

இத எப்படி உச்சரிப்பது?

Khao pod tod nam prik pow
Poh pia je
Geang jued woon shek phak
Mian kum

கண்ண மூடிக்கிட்டு ஏனோதானோன்னு டைப்படிச்ச மாதிரி இருக்கா? இத மெனுகார்டில் பார்த்த எங்களுக்கு எப்படியிருந்திருக்கோம். சத்தியமா ஒரு பேரும் சொல்லத் தெரியல. தாய்லாந்து உணவுகள் பரிமாறும் Benjarong என்கிற உணவக மெனு கார்டிலிருந்த ஐட்டம்கள் இவை. நல்லவேளையாக நீண்ண்ட விளக்கமும் ஆங்கிலத்தில் குடுத்திருந்தார்கள். இல்லையெனில் ஒரு வழியாகிருக்கும்.

பொதுவாகவே எனக்குத் தாய் உணவுகள் ரொம்பப் பிடிக்கும். காரணம் unique flavour. இரண்டு வருடங்களுக்குப் பிறகு இரவு உணவிற்காக சென்றோம் (அதே மூவர் கூட்டணி). தம்பி தற்போது சுத்த சைவ சன்மார்க்கத்தை:)) கடைப்பிடிப்பதால், ஆப்சனை என்னிடமே விட்டுவிட்டான் (அசைவம் சாப்பிடாத சமயத்தில் இங்கு கூட்டிவந்ததற்கு திட்டு விழுந்தது).

சூப் மற்றும் ஸ்டார்டர் ஆர்டர் செய்வதற்கு முன் அப்படைசர் தந்தார்கள். நம்மூர் வெற்றிலை மாதிரி இருந்தது. Mian kum என்று பெயராம். நம்மூர் வெற்றிலையில் பாக்கு, சுண்ணாம்பு சேர்த்து சாப்பிடுவதற்கு பதில் கொப்பரைத் தேங்காய், எலுமிச்சை, இஞ்சி, பச்சை மிளகாய், வெங்காயம், வேர்க்கடலையோடு இனிப்பு கலவை சேர்த்து சாப்பிட சொல்கிறார்கள். நன்றாக இருக்கிறது.

முதலில் சொன்ன Khao pod tod nam prik pow என்பது சில்லி பேஸ்ட்டோடு வறுத்த பேபி கார்ன். இதை rice tartletsல் பரிமாறினார்கள். அதோடு ஃப்ரைடு தாய் வெஜ் ஸ்ப்ரிங் ரோல் (poh pia je) சாப்பிட்டோம். நன்றாக இருந்தது. தாய் க்ளியர் சூப் வித் க்ளாஸ் நூடுல்ஸ். எனக்குப் பிடித்திருந்தது. மற்ற இருவரும் சூப்பிற்கு தம்ப்ஸ் டவுன் கொடுத்தார்கள்.

மெயின் கோர்ஸிற்கு jungle fried rice, bamme phad noodles, thai red curry, tofu mushroom curry ஆகியவை ஆர்டர் செய்தோம். ஆர்டர் எடுத்தவர் thai red curry ப்ளெய்ன் ரைசோடு தான் நன்றாக இருக்குமென்றார். பரவாயில்லை நாங்கள் சொன்னதையே கொண்டு வாருங்கள் என்று சொல்லிவிட்டு தம்பி அடித்த கமெண்ட் "வெறும் அரிசி சாதம் சாப்பிட நான் ஏண் இங்க வர்றேன்". மெயின் கோர்ஸ் வரும் வரை சிண்ட்ரெல்லா என்ற பெயரில் பைனாப்பிள் மற்றும் ஸ்ட்ராபெர்ரி கலந்த ஜூஸ் குடித்தோம் அருமையாக இருந்தது. மெயின் கோர்ஸும் நன்றாக இருந்தது.

ரகு ஸ்வீட் வேண்டாமென சொல்லிவிட, நான் கோகனட் புட்டிங் (பெயர் மறந்து போச்சு), தம்பி பனானா பேன் கேக் வித் கோகனட் ஐஸ்க்ரீம் ஆர்டர் செய்தோம். இதில் தம்பிது சூப்பர் விக்கெட் ஆகிவிட என்னுடையது இண்டர்நேஷனல் பருப்பு பாயாசம் ரேஞ்சுக்கு ஒருமாதிரி பார்டர் பாஸ் பண்ணியது.

மேலதிக தகவல்கள்

உணவகம் - Benjarong
உணவு/cuisine - Thai (Veg/Non veg)
இடம் - டிடிகே சாலை, ஆழ்வார்பேட்டை. ராயல் எண்டர்பிரைசஸ் எதிரில்.
டப்பு - அநியாய காஸ்ட்லி. மூவருக்கு கம்ப்ளீட் மீல் (வெஜ்) 2600 ரூபாய் வரியுடன்:(


பரிந்துரை - கண்டிப்பாக போகலாம். விலைதான் ரொம்பக் கூட. Though the food speaks for its price;)


டிஸ்கி 1 : பசி நேரத்தில் பதிவைப் படித்து வயிற்றெரிச்சல் பட்டால் கம்பேனி பொறுப்பாகாது.
டிஸ்கி 2 : இடுகை முழுக்க முழுக்க பெர்சனல் எக்ஸ்பீரியன்ஸை பேஸ் பண்ணி எழுதப்பட்டது. உங்களுக்கு மாற்று அனுபவம் ஏற்படுமெனில் அதற்கும் கம்பேனி பொறுப்பாகாது:)

April 21, 2010

சென்னையின் மழைக்காலங்களில்...

கிட்டத்தட்ட 12 வருடங்களை வேலூர் வெயிலில் கரைத்த எனக்கு சென்னையின் வெயிலும் சரி மழையும் சரி எரிச்சல் தரும் விஷயமாகவே இருந்தன. வேலூரில் என்ன தான் கொளுத்தியெடுத்தாலும் கசகசப்பு இருக்காது. சென்னை நேரெதிர். கொஞ்சமே வெயிலடித்தாலும் கசகசவென எரிச்சல் படுத்திவிடும். என்றைக்குமே மழையில் நனைவதென்பது எனக்கு அறவே பிடிக்காது. டிரெஸ் நனைந்து, முடியெல்லாம் ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொண்டு i hate it. மழையில் நனைய ரொம்பப் பிடிக்கும் என்று சொல்பவர்களை நினைத்து மனதிற்குள் சிரித்துக்கொள்வேன் (யாரையோ இம்ப்ரெஸ் செய்யவே இந்த டயலாக் வரும். Or to show that u r very romantic).

இது சென்னையில் எனக்கு ஐந்தாவது வருடம். 2005இல் வேலை சேர்ந்து கதீட்ரல் ரோடில் குப்பைக் கொட்டிக் கொண்டிருந்தோம். அந்த வருட மழை என்னை நிஜமாகவே மிரட்டி விட்டது. பெசண்ட் நகரிலிருந்து 29C பிடித்து ஆபிஸ் போகனும். எந்த முன்னறிவிப்புமின்றி அடித்து ஆட ஆரம்பித்திருந்தது மழை. அதற்கு முன் தினம் தான் ரூமுக்கு வெட்டிவேர் தட்டி போடுவது பற்றி நானும் ஹேமாவும் டிஸ்கஸ் செய்தோம். மறுநாள் பஸ்ஸில் போனால் அதிர்ச்சி. சாந்தோம் சிக்னலிலிருந்து ஐ.ஜி ஆபிஸ் வரை வெள்ளம் தான் ரோட்டில். நானும் ஹேமாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டோம். ஸ்டாப்பிங்கில் இறங்கி ரோட் கிராஸ் செய்து ஆபிஸ் நுழைவதற்குள் (மேட்டர் ஆஃப் 3 மினிட்ஸ்) ரெண்டு பேரும் நன்றாக நனைந்திருந்தோம். ஆபிசே வெறிச்சோடியிருந்தது. Adminல் கேட்டால் "மேட்டர் தெரியாதா. ஹெவி டவுன் போர் (மழைங்கறத எப்படியெல்லாம் சொல்லுது பாரு பயபுள்ள). அதனால நிறைய பேர் ஆபிஸ் வரல. அநேகமாக இன்னிக்கு லீவு வுட்றுவாங்கன்னே நினைக்கிறேன்" என வயிற்றில் புளியைக் கரைத்தனர். பின்னே. முக்கால்வாசி நாட்கள் வெறும் பாலும், ஆப்பிளும் முழுங்கிட்டு ஆபிஸ் லஞ்சை நம்பி வரும் எங்களுக்கு அந்த செய்தி பேரிடியாகவே இருந்தது. ஆபிஸை விட்டு வெளியே போகமுடியவில்லை. எல்லாத்தையும் விட பேரதிர்ச்சியாக பில்டர் காபி/டீ மெஷினை ஆபரேட் செய்பவர்கள் எவரும் வரவில்லை. எனக்கு அந்த பவுடர் பால் டீ உள்ளவே இறங்காது. ஆட்டோ பஸ் என எதுவும் கிடைக்கல. இன்னிக்கு ஆபிஸ்லேயே தான் தங்கவேண்டிவரும்போல என நொந்துக்கொண்டோம். இதற்குள் தொலைக்காட்சிகளில் செய்தி பார்த்துவிட்டு வீட்டிற்கு கிளம்பி வரும்படி போன் செய்தார்கள். ரூமுக்கு போகவே வக்கத்துப் போய் ஆபிஸ்ல உட்கார்ந்திருக்கோம். ஸ்டேஷன் போக வண்டி கிடைக்கவேயில்லை. அப்புறம் அப்பா உறவினர்களிடம் பேசி வண்டி ஏற்பாடு செய்து ஊர் போய் சேர்ந்தோம்.



அதே ஆண்டு இறுதியில் கதீட்ரலிலிருந்து பெருங்குடி மாற்றிவிட்டார்கள். சுத்தம். ஆபிஸ் தனியாய் மிதக்கிறது. அன்னிக்கின்னு ஆபிஸ்ல முக்கியமா ஒரு கிளையெண்ட் கால். முந்தின நாள் பேசிட்டு படுக்கவே 2 ஆகிவிட்டதால் வழக்கம்போல எல்லாமே லேட். கரெக்டாய் பஸ் மிஸ் பண்ணிட்டோம். ஆட்டோ பிடித்து போனால் SRP tools தாண்டியதும் ஆட்டோக்குள்ள தண்ணி வர ஆரம்பிச்சிடுச்சு. ஆட்டோகாரர் கொஞ்சம் இரக்கப்பட்டு ரோட்டோரமா கொஞ்சூண்டு மேடா இருந்த இடத்துல இறக்கிவிட்டுட்டு போய்ட்டார். அப்புறம் கம்பெனி பஸ்ஸ நிறுத்தி ட்ரைவர் காலில் விழாத குறையா கெஞ்சி ஆபிஸ் இருக்கும் ரூட்டில் போய் எங்களிருவரையும் இறக்கிவிட்டு போகும்படி வேண்டினோம். போனாபோகுதுன்னு அவரும் பெரிய மனசு பண்ணதால கரெக்டா மீட்டிங் ஆரம்பிக்கும்போது உள்ள போயி, வழக்கம்போல இங்கிலீஷ் பட டயலாக் மாதிரி அவங்க பேசினதுக்கெல்லாம் "Yes" "No" "Sure" "Ok" "Fine" போட்டுட்டு வந்தேன். புதுசாய் ஒரு PL வேறு வந்திருந்தார். லைட்டா தூறல் போட்டாலே அவர் ஆபிஸ் வரமாட்டார். மழை பெய்த மறுநாள் சரியாக பத்து மணிக்கு அவரிடமிருந்து போன் வரும். "Hey i'm struck @ home due to this rain. I think i'll not b able to make it to office today. If u guys need anything call me". ஹூக்கும். இந்த மழைக்கு சூடா மசால் வடையும் டீயும் தான் வேணும். அத அவர்ட்ட கேக்க முடியுமா என அருகிலிருப்பவன் உதிர்க்கும் மொக்கைக்கு சிரிப்பதா வேண்டாமா என யோசிப்பதில் கொஞ்ச நேரம் செலவிடப்படும். 2006 ஆம் ஆண்டு என் கல்யாணத்திற்கு 1 மாதத்திற்கு முன்பு மறுபடியும் பிராஜெக்ட் மூவ் பண்ணாங்க. இந்தமுறை இன்னும் டெரராய் OMR பிராஞ்ச். அங்கனயிருந்து வூடு போய் சேர நல்ல நாளிலேயே குறைஞ்சது ஒன்றரை மணி நேரம் ஆகும். இதுல மழைன்னா கேக்கவே வேணாம். எங்க பள்ளமிருக்குன்னு தெரியவே தெரியாது. ஞாயிறுகளில் பெசண்ட் நகரில் நிறைய பேர் வீலிங் பழகுவார்கள். நல்ல ஸ்பீடில் வந்து சரக்கென்று பிரேக் அடித்து பின் வீலை ஆகாசத்தில் சுழற்றுவார்கள். அந்த மாதிரி பண்ணாமலேயே நிறைய பைக்குகள் இந்த பள்ளத்தில் கிடக்கும். கார்கள் கூட ஒரு பத்து பேர் "ஏலேலோ ஐலசா" பாட ஒருக்களித்துப் படுத்திருப்பதுபோல் பள்ளத்தில் சிக்கியிருக்கும். ஒழுங்கா வீடு போய் சேரனும்டா சாமீ என ஆன் த ஸ்பாட் வேண்டுதல்கள் பிறக்கும்.

ஓ.எம்.ஆரோடு என் கேரியர் ஓரியண்டட் வாழ்க்கைக்கு தொடரும் போட்டாச்சு. 2007ல் ஜூனியர் பிறந்தபின் மதுராந்தகத்தில் கொஞ்ச காலமும், பாண்டிச்சேரியில் கொஞ்ச காலமும் இருந்துவிட்டு எண்ட் ஆஃப் சீசன் போது மறுபடியும் சென்னை. இந்தமுறையும் மழை கொஞ்சம் டெரராய் இருந்தது. ஜூனியரின் உடல்நிலையில் மாற்றம், குழந்தை துணிகள் காய்வது போன்ற பிரச்சனைகளோடு வீட்டுக்குள் வந்துவிடும் குட்டி குட்டி தவளைகள் கிலியேற்படுத்திக்கொண்டிருந்தன:( 2008 தாம்பரத்தில். பெரிய கஷ்டமேதும் தெரியவில்லை. குழந்தை தான் மாற்றத்தை அடாப்ட் செய்ய திணறினான். இப்போ மறுபடியும் சென்னையில். இந்த தடவை எப்படி ஆட்டுவிக்கிறதென பார்க்கனும். "உஸ்ஸ் அப்பா" என புலம்பிக்கொண்டே வெயிலை சமாளித்துவிட முடிகிறது. மழைதான் ரெகுலர் ரொட்டினையே புரட்டிப் போட்டுவிடுகிறது. தண்ணீர் தேங்கி வழுக்கும் தரைகள், எவ்வளவு பெருக்கி துடைத்தாலும் சேறாகும் வீடு, சரிவர காயாமல் கிடக்கும் துணி, அடிக்கடி எட்டிப் பார்க்கும் ஜல்பு, இவற்றிர்கெல்லாம் மேலாக தூங்கிட்டே இருந்தா நல்லாருக்கும் என தோன்றும் எண்ணம் என மழையினால் ஏற்படும் அசௌகரியங்கள் ஜாஸ்தி தான். இருந்தாலும் மழையில் நனைந்து ஒட்டிக்கொண்டுவிட்ட சிறகுகளை பிரிக்க உடலை உதறும் புறாவை ஆறாவது மாடியிலிருந்து சூடாக ஆவி பறக்கும் இஞ்சி டீயோடு ரசிப்பதிலும் சுகம் இருக்கத்தான் செய்கிறது.

பி.கு : போன வருடம் மழை சீசன் போது எழுதியது. அப்படியே கொஞ்சம் வெளியூர் போக வேண்டியிருப்பதால் ட்ராப்டிலிருந்து தூசி தட்டி எடுத்து போட்டிருக்கிறேன். வெயிலுக்கு காண்ட்ரவர்சியலா மழைப் பதிவு:)

April 19, 2010

நான் ஆட்டோக்கார(ர்)ன்...

சில மனிதர்கள் நம் வாழ்வில் நமக்குத் தெரியாமலேயே முக்கிய பங்கு வகிக்கின்றனர். அவனின்றி/அவளின்றி ஒரு அணுவும் அசையாது என்பதற்கேற்ப பால் போடுபவர், பேப்பர்காரர், வீட்டு வேலை செய்பவர் என நிறைய பேரின் துணையோடு தான் நாம் ஒவ்வொரு நாளையும் ஓட்டுகின்றோம். மேற்படி லிஸ்டில் ஒருவர் வரவில்லையென்றாலும் கொஞ்சமாவது டென்ஷன் ஏற்படும். நம் வீட்டையும் தாண்டி வெளியிலும் ஏதோவொரு விதத்தில் நமக்கு உதவுபவர்கள் நிறைய. அப்படிப்பட்ட மனிதர்களுடனான கலந்துரையாடலே இப்பதிவு(கள்).

தவிர்க்க முடியாத நேரங்களில் அரை மணி நேரம் ஆட்டோவில் பயணம் செய்ய நேர்ந்தபோது ஆட்டோ ஓட்டுனர்களோடு பேசிய உரையாடல்களிவை. பேசிய பின் பதிவுலகம் பற்றி சொல்லி உங்கள் கருத்தை பதியலாமா என கேட்டதற்கு பெயர் போட வேண்டாமென கேட்டுக்கொண்டதால் போடவில்லை. இரு ஓட்டுனர்களின் (அண்ணா நகர் ஸ்டாண்டிலிருந்து ஒருவர், எக்மோர் ரயில் நிலைய ரன்னிங் ஆட்டோ ஓட்டுனர் ஒருவர்) கருத்து.

(பேட்டி போலில்லாமல் சும்மா பேசிக்கொண்டிருந்ததைப் பதிந்திருப்பதால் கேள்விகள் அங்கங்கே எகிறி குதித்து ஓடும். கண்டுக்காதீங்க).

எந்த சீசன்ல ஆட்டோ ஓட்றது கஷ்டம்? வெயிலா? மழையா?

ரெண்டுமே கஷ்டம் தான். வெயில் காலத்துல அனல் காத்து ரொம்ப அடிக்கும். ரொம்ப நேரம் தொடர்ந்து ஓட்ட முடியாது. மழைக்காலம் தான் ரொம்ப கஷ்டம்மா. ஆட்டோக்கு நிறைய்ய செலவு வைக்கும். பள்ளம் மேடு தெரியாது. ஆட்டோக்குள்ள தண்ணி வந்துடும்.

ஒரு பிஃக்சட் ரேட்டுன்னு இல்லாம இஷ்டத்துக்கு வாங்கறீங்களே ஏன்? உதாரணத்துக்கு கோயம்பேடு பஸ் ஸ்டாண்டிலிருந்து அண்ணாநகர் மேற்கு வர 60, 70, 80 வாங்கறீங்க. ஏன் இப்படி?

ரேட்டு ஒவ்வொரு ஸ்டாண்ட்க்கும் மாறும். கோயேம்பேடு ஸ்டாண்ட்ல 80 ரூபா வாங்குவாங்க. நாங்க (அண்ணாநகர் ஸ்டாண்ட்) 70 ரூவா வாங்குவோம்.

ஒரு தடவை ஒரு ட்ரைவர் 40 ரூபாய் தான் வாங்கினார். எப்படி?

அது ரிடர்ன் ஆட்டோவா இருக்கும். ரிடர்ன் ஆட்டோ எப்பவுமே குடுக்கற காசுக்கு வருவோம். இப்ப உங்கள வேளச்சேரில இறக்கிவிட்டு ரிடர்ன் எம்ப்டியா வந்தா பெட்ரோல் வேஸ்டாகும். அதுக்கு 150 ரூபா குடுக்கறேன்னு சொன்னாலும் சவாரி ஏத்திப்போம். காலியா வர்றதுக்கு ஏதோ கொஞ்சமாவது காசு வருதுல்ல. எங்களுக்கு அப்போ நினைப்புக்கு இருக்கறதெல்லாம் ஸ்டாண்ட்க்கு ரிடர்ன் ஆவும்போது காலியா வரக்கூடாது. அவ்வளவுதான்.

ஆட்டோல மீட்டர் போடமாட்டேங்கறீங்களே ஏன்?

மீட்டர் கட்டுபடியாகாது. ஒரு பேச்சுக்கு வச்சுப்போம். இங்க இருந்து (அண்ணாநகர்) வேளச்சேரி போக மீட்டர் போட்டா 120 ரூபாய்க்குள்ள ஆகும். கிட்டத்தட்ட 25 கி.மீ தூரம். பெட்ரோல் முதற்கொண்டு கணக்குப் போட்டா கட்டுபடியாகாது. அதனால வாங்கறது 300 ரூபா.

அப்போ பெட்ரோல் விலை, ஆட்டோக்கான மெயிண்டனன்ஸ், உங்களுக்கு சார்ஜ்ன்னு சேர்த்து ஒரு நியாயமான விலைக்கு மீட்டர் பிஃக்ஸ் பண்ணலாமே?

அதெல்லாம் வேலைக்காகதுங்க. மீட்டரில்லாம இருக்கிறதான் முக்காவாசி பேர் விரும்புறாங்க. ஏறும்போதே இந்த ரேட்டுன்னு தெரிஞ்சிக்கிறது சேஃப் தானுங்களே. மீட்டர் போட்டா இறங்கும்போது மீட்டர் காட்ற ரேட்டு கைல இல்லன்னா கஷ்டம். (எப்படியெல்லாம் சப்பக்கட்டு கட்றாங்க). ரயில்வே ஸ்டேஷனில் இருக்கும் ப்ரீபெய்ட் ஆட்டோ சிஸ்டம்கூட சரியா ஒர்க் அவுட ஆகலயே. கஸ்டமருங்க கம்ப்ளையெண்ட் நிறைய வருதே.

அதுக்கும் நீங்கதானே காரணம். இறக்கிவிடும்போது எக்ஸ்ட்ரா கொடுங்கன்னு முரண்டு பண்றீங்களே.

கஸ்டமருங்க மேல தான் மேடம் மிஸ்டேக். சரியான அட்ரஸ் சொல்லாம ஜெனரலா சொல்லவேண்டியது. ஒருதடவ மலர் ஹாஸ்பிட்டல் பக்கத்துலன்னு சொல்லி ஏறுனவங்க இறங்கினது சாந்தோம்ல. எங்களுக்கு எப்படி கட்டுப்படியாகும்?

ஒரு நாளைக்கு எவ்ளோ கலெக்ஷன் ஆகும்?

ஓட்றதப் பொறுத்தும்மா. ஆட்டோ வாடகை, பெட்ரோல் செலவு போக ஒரு நாளைக்கு 500 ரூபா வர்ற வரைக்கும் ஓட்டுவோம். சில சமயம் 1000 ரூபா இருந்தாலும் பத்தாது. தேவைக்கேத்த மாதிரி ஓட்டிப்போம்.

ஆட்டோ வாடகை எவ்ளோ ஆகும்?

சேட்டுங்க வாரக்கணக்கில வாங்குவாங்க. சவாரி வந்தாலும், வரலைன்னாலும் தினப்படிக்கு 200 ரூவா சேட்டுக்கு கொடுக்கனும். சில பேர் தின வாடகைக்கு வண்டி உடுவாங்க. என்னுது சொந்த வண்டி.

எவ்ளோ வருஷமா ஆட்டோ ஓட்றீங்க?

10 வருஷமா ஓட்றேன். இந்த வண்டி 2 வருஷத்துக்கு முன்னால தான் வாங்கினேன்.

அப்ப இருந்ததுக்கும் இப்பத்தைக்கும் என்ன வித்தியாசம்?

ட்ராபிக் தாம்மா. அப்போ இந்த அளவுக்கு வண்டிங்க கிடையாது. இப்ப பாருங்க பார்க் பண்ண இடமில்லாட்டியும் பரவால்லன்னு எல்லாரும் கார் வச்சிருக்க்காங்க. ஒரு இலட்ச ரூபாய்க்கே புது கார் கிடைக்குது. ஆட்டோ விலை 2 லட்சம்.

எவ்ளோ வண்டி வந்தாலும், அதுக்கு சரிசமமா ஆட்டோவும் ஓடுதே.

எல்லாமே பழைய வண்டிங்க. இப்பல்லாம் யாரும் புதுசா வண்டி எடுக்கறதுல்ல. இந்தா இப்ப கவர்மெண்ட்ல 200 ஆட்டோக்கு பர்மிட் குடுத்திருக்காங்க. ஆனா 80,000 வெட்டினாதான் பர்மிட் கைக்கு வரும். அவ்ளோ செலவு பண்ணி ஆட்டோ எடுக்கறது வேஸ்ட். இந்த நெரிசல்ல ஓட்றதுக்குள்ள ஒரு வழியாவுது.

என்னங்க நீங்க. சிட்டி ட்ராபிக்கே ஆட்டோன்னா அலறுது? ஓவர் ஸ்பீட். அது ஏன்? சைக்கிள் கேப்பில ஆட்டோ ஓட்றதுங்கறது எவ்ளோ பேமஸ் டயலாக்.

எல்லாரும் இப்படியே சொல்றீங்களே? நாங்க என்ன கவர்மெண்ட் உத்யோகமா பார்க்கிறோம். அடுத்தடுத்து சவாரி பார்த்தாதான் பிழைப்பு ஓடும். நாங்களும் எப்பப்பாரா அப்படி ஓட்றோம்? கஸ்டமருங்க சீக்கிரம் போங்கன்னு சொன்னாங்கன்னா நாங்க போய்த்தானே ஆகனும்?

சென்னைல எப்பப் போணாலும் சவாரி கிடைக்கிற இடம்?

தி.நகர்.

ஏண்டா இங்க சவாரிக்கு வந்தோம்ன்னு தோணற இடம்?

பீக் அவர்ல நூறடி சாலை முழு ஸ்ட்ரெட்ச், அடையார் ஏரியா. மழைக்காலத்துல மடிப்பாக்கம், வேளச்சேரி, நார்த் மெட்ராஸ் ஏரியால கொஞ்சம் இடம்.

ஏன் ஆட்டோ ஓட்ட வந்தோமோன்னு எப்பவாச்சு தோணிருக்கா.

அப்பப்ப போலீஸ் மடக்கும்போது தோணுங்க. ஆனா அதைத்தாண்டி இத வேலையா பாக்காம வாழ்க்கையா பாக்கும்போது சலிப்பாவே இருக்காதுங்க.

பி.கு : இந்தப் பதிவில் கூறப்பட்டிருக்கும் அனைத்துமே தனிநபர் கருத்துகள் தான். ஜெனரலைஸ்ட் அல்ல.

April 16, 2010

காதல் வைத்துக் காத்திருந்தேன்...

நூலைப் போல சேலை. தாயப் போல பிள்ளை என்ற மொழி உண்டு. அப்பாப் போல பிள்ளை என மாற்றியமைக்கலாம் என்ற யோசனையை தோற்றுவிப்பவர் இவர். விஜய் யேசுதாஸ். அப்படியே அப்பாவின் குரல். பல சமயங்களில் பாடுவது அப்பாவா பிள்ளையா என்ற குழப்பத்தை கூகிளாண்டவர் தான் தீர்த்து வைப்பார். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் பாடியிருக்கிறார். பயணத்தைத் தொடர்கிறார்.

தமிழில் இவர் அறிமுகமானது பிரண்ட்ஸ் படத்தின் மூலம். ஓரளவுக்கு ஹிட்டான பாடல் ஜெயம் படத்தில் வரும் 'கோடி கோடி வார்த்தைகள்' பாட்டு. என் அப்பாவோட பேவரைட். எங்கோ ஏதோவொரு தெலுங்கு சேனலில் இதன் ஒரிஜினல் வெர்ஷனை கேட்டுவிட்டு எந்துக்கு எந்துக்கு எந்துக்குன்னு கொஞ்ச நாள் படுத்திக்கொண்டிருந்தார்.

தமிழில் இவர் பாடியுள்ள பாடல்கள் கொஞ்சம் கம்மிதானென்றாலும், அத்தனையும் ஹிட் வகையறாக்கள். காதல் கொண்டேன் படத்தில் 'காதல் காதல் காதல் நெஞ்சில்' பாட்டு ரொம்பப் பிடிக்கும்.
'காதல் தந்த மூர்ச்சை நிலை
நான் கண்கள் திறந்தும் தெளியவில்லை'



சண்டக்கோழி படத்தில் 'தாவணி போட்ட தீபாவளி' பாட்டு சூப்பர் ஹிட்டாகியது. மீரா ஜாஸ்மினின் துறுதுறுப்பு கொஞ்சம், பாடல் படமாக்கப்பட்ட விதம் கொஞ்சம், இவர் குரலின் மேஜிக் நிறைய என சேர்ந்து எப்போது பார்த்தாலும் முழுவதுமாய் பார்க்கத் தூண்டும் பாடல்.



அடுத்து நமது சூப்பர் ஹீரோ கம் டைரக்டர் சுண்ணாம்பு காவா நடித்த படத்தில் ஒரு பாட்டு. 'தாஜ் மஹால் ஓவியக் காதல்' பாட்டு. கண்ண மூடிக்கிட்டு பாக்கனும். தைரியசாலிகள் கண்ண தொறந்துகிட்டும் பார்க்கலாம்;)



இவருடைய ஹிட் பாடல்கள் அனைத்துமே யுவன் இசையமைத்தது. புதுப்பேட்டை படத்தில் 'புல் பேசும் பூ பேசும்' பாட்டு. அட்டகாசமான நடனம் (சினேகா தவிர்த்து). அந்த கிதார் இசையோடு இவர் குரலும் பின்னி இழையும்.

மெலடி விரும்பாதவர்களுக்கும் பிடிக்கக்கூடிய பாட்டு தீபாவளி படத்தில் வரும் 'காதல் வைத்து காத்திருந்தேன்'. ஐயோ பாவனாவின் அழகோடு பாடல் அப்படித் தாலாட்டும். மனது லேசாக இருக்க நான் அடிக்கடி கேட்பது இந்தப் பாட்டு.

'உன்னைக் கண்ட நாள் ஒளிவட்டம் போல்
உள்ளுக்குள்ளே சுழலுதடி
உன்னிடத்தில் நான் பேசியதெல்லாம்
உயிருக்குள் ஒலிக்குதடி'



அடுத்த பிடித்த பாட்டைப் பார்க்கவும் தனி மனதைரியம் வேண்டும். எனக்கு அது இல்லாத காரணத்தால் டிவியில் பார்க்க நேரிட்டால் அலறியடித்துக்கொண்டு சேனலை மாற்றிவிடுகிறேன். ஹீரோ??!! ஹீரோயின் காஸ்ட்யூமும், ஹீரோவின் அதிஅற்புதமான முகபாவங்களும் ஊப்ஸ் முடியல. மாயக்கண்ணாடி படத்தில் வரும் 'உலகிலே அழகி நீதான்'. இதே கேட்டகிரியில் பொக்கிஷம் படத்தில் 'நிலா நீ வானம் காற்று' பாட்டும் சேரும்.

மலைக்கோட்டை படத்தில் 'தேவதையே வா வா', தாமிரபரணி படத்தில் 'கட்டபொம்மன் ஊரெனக்க்கு', பாடல்களில் விஷாலுக்கு இவர் குரல் பர்பெக்டாய் செட்டாகும். சர்வம் படத்தில் 'சுட்டா சூரியன' பாட்டில் வரும் மேகம் கருக்குது மழ வரப் பார்க்குது என இவர் பாடும்போது இசை மழையே வரும்.

ஆயிரத்தில் ஒருவன் படத்தில் 'தாய் தின்ற மண்ணே' பாட்டை பாடியது யேசுதாஸ் சார் என ரொம்ப நாள் நினைத்துக் கொண்ண்டிருந்தேன். பெப்பி நம்பர் மட்டுமல்ல கிளாசிக்கலிலும் கலக்குவார் என நிரூப்பித்த பாடல்.

புலிக்குப் பிறந்தது பூனையாகுமா என்ற மொழியை பொய்யாக்காமல் கலக்கிக்கொண்டிருக்கும் விஜய் மேன்மேலும் நல்ல பாடல்களை தர வேண்டும். வாழ்த்துகள் விஜய்.

April 13, 2010

மொழி ஆராய்ச்சி

வெயில் கொளுத்துகிறது. இப்பவே இப்படின்னா அக்னி நட்சத்திரம் ஆரம்பித்தால்?? நினைக்கவே பயம்மாய் இருக்கிறது. இத்தனைக்கும் தமிழக நகரங்களில் சென்னையில் தான் வெயில் கம்மியாம். 35 ரேஞ்சிலேயே இருக்கிறது. வெயில் நகரான வேலூரில் 42 டிகிரி செல்சியஸ். ஏழு வருடங்கள் வேலூர் மாவட்டவாசியாக இருந்திருக்கிறேன். எவ்வளவு வெயிலடித்தாலும் தாங்கமுடியும் அங்கே. கசகசவென்ற உணர்விருக்காது. சென்னையில் கடல் காரணமாக புழுங்கித் தள்ளுகிறது. இன்னும் நுங்கு சீசன் ஆரம்பிக்கவில்லை சென்னையில். வெயிட்டிங். பாலைக் காய்ச்சி ஆறவைத்து, இளநுங்கை போட்டு ப்ரிட்ஜில் வைத்து கொஞ்சம் வெல்லம் சேர்த்து முழுங்கினால் சொர்க்கமாய் இருக்கும்.
***************

அம்மா வீட்டு வாசலில் ஒரு அறிவிப்பு பலகை வைக்கலாமென்ற யோசனையிலிருக்கிறோம்.
"அம்மாவைப் பார்க்க வருவபவர்கள் தயவுகூர்ந்து சாத்துக்குடி கொண்டுவரவேண்டாமென தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மாறாக சர்க்கரை, துவரம் பருப்பு, எண்ணைய், கிஃப்ட் கூப்பன்ஸ் அல்லது பணமாகவோ தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்."

அள்ள அள்ள குறையாத அக்ஷ்யப் பாத்திரம் போல் தீரவே மாட்டேன் என குவிந்து கொண்டே இருந்தது சாத்துக்குடி. காபி டீ நிறுத்திவிட்டு ஜூஸாய் குடித்து மாளவில்லை. வீட்டிற்கு வந்து செல்லும் உறவினர்களுக்கெல்லாம் ரிடர்ன் கிஃப்டாய் அரை டஜன் சாத்துக்குடி கொடுத்தனுப்பும் அளவுக்கு சேர்ந்திருந்தது. ஆண்டவா ஏதாவது பண்ணி சாத்துக்குடியின் விலைய ஏத்துப்பா:(
*************

வேலைக்காக வட இந்தியா சென்ற அண்ணாவை வடக்கு வாஞ்சையுடன் வரவேற்று வஞ்சனையில்லாமல் ஜாண்டிசை அள்ளி வழங்கியிருக்கிறது. நான்கு நாட்கள் ஆஸ்பத்திரியில் ட்ரிப்ஸ் ஏற்றப்பட்டு, இதற்கு மேல் தாங்காது என சென்னை வந்து சேர்ந்தார். நேராக இங்கே வந்தவருக்கு நாலே நாலு இட்லியும் கொஞ்சம் தயிரும் சாப்பிட கொடுத்தேன். சாப்பிட்டு மறுநாள் வாலாஜா சென்று மருந்து சாப்பிட்டுவிட்டு ஊருக்கு சென்றார். அங்கிருந்து பெரியம்மா போன் பண்னி அண்ணாக்கு பரவாயில்லையாக இருப்பதாகவும், என் இட்லியை சாப்பிட்டதால் சரியாக போன உணர்விருப்பதாகவும் சொன்னார். இதை நான் பெருமை பீத்திக்கொண்டிருந்தபோது (இன்னொரு பெரியம்மா பையன்) மகன் சொன்னது 'ரொம்ப அலட்டிக்காதடி. உன் இட்லியப் பார்த்து ஜாண்டிசே அரண்டுடுச்சு'. ஹூம் பொறாமை பிடித்தவர்கள்":)
****************

அண்ணாவிடம் வடக்கு எப்படி என்ற விசாரணையில் எல்லாம் ஒகே மொழி தான் பிரச்சனை என்றார். அப்பா அவரிடம் "இதுல என்னடா பிரச்சனை. எல்லா வார்த்தைக்கும் முடிவுல ஹை போடு ஹிந்தியாகிடும்". அடுத்து ஒரு மொழி ஆராய்ச்சி மாநாடு ஆரம்பித்தது.

சிம்பிளா சொல்றேன் பாரு.

ராம் - இது ஹிந்தி.
ராமன் - இது தமிழ்.
ராமுடு/ராமுலு - இது தெலுங்கு.

எப்படிப்பா இப்படியெல்லாம்.

இருடி. இன்னும் பெட்டர் எக்சாம்பிள் பாரு

சார் - இது இங்லீஷ்
சார் - இது தமிழும் கூட??!!
சர்ஜி - இது ஹிந்தி/பஞ்சாபி
சாரு - இது தெலுங்கு.
சாரே - இது மலையாளம்.

அப்பா முடியலப்பா - இது நான்.

சித்தப்பா யார் யாருக்கோ சிலை வைக்கறாங்க. தமிழ் செம்மொழி மாநாட்டுல உங்களுக்கு ஒரு சிலை வைக்க ஏற்பாடு பண்றேன் - இது அண்ணா.
***************

அங்காடித் தெருவை பார்த்ததால் ஏற்பட்ட சோகத்தை விரட்ட சிப்பு படமொன்று பார்க்கலாமென முடிவு செய்தோம். கைவசம் இருந்த டிவிடிகளை அலசி ஆராய்ந்ததில் யாருக்கும் சுமுகமான கருத்து ஏற்படாமல் போகவே 'லவ் ஆஜ் கல்' சிடியோடு நான், அவர், அண்ணா(க்கள்) அமர்ந்தோம். கொஞ்சம் கொஞ்சமாய் ஆளாளுக்கு எஸ்ஸாக முழு படத்தையும் பார்க்கலன்னா உம்மாச்சி கண்ண குத்திடுமென்பதால் நானும் அண்ணாவும் முழுப் படத்தையும் கஷ்டப்பட்டு முடித்தோம். பட விமர்சனம்? அது கிடக்கு கழுதை.

எதுக்குண்ணா சயீப்க்கு பத்மஸ்ரீ கொடுத்தாங்க.

தெரியலயேம்மா தெரியலயே - அண்ணா.

கரீனா கபூர கிட்ட நின்னு பார்க்கற தைரியத்துக்கா இருக்கும் - போகிற போக்கில் அப்பா.
****************

சக பதிவர்கள் அனைவருக்கும் தமிழ்ப் புத்தாண்டு ஊப்ஸ் சாரி சித்திரை முதல் நாள் வாழ்த்துகள். அப்படித்தான் சொல்லனுமாம். கலைஞர் டிவில கத்துக்கொடுத்தாங்க:)

April 9, 2010

மாநரகப் பேருந்து

திருச்சியைச் சேர்ந்த நண்பனொருவன் வேலைக்கு சேர்ந்தவுடனே ஐசிஐசிஐ வங்கியில் லோன் போட்டு ஆசை ஆசையாய் ஒரு ஹுண்டாய் சாண்ட்ரோ வாங்கினான் (எல்லோரும் ட்ரீட் என அவன் பர்ஸ் பழுக்க வைத்தது வேறு நடந்தது). திருச்சியில் கார் ஒட்டி பழக்கமாதலால் தைரியமாய் ட்ரைவர் இல்லாமலே சென்னையில் வண்டி ஓட்ட ஆரம்பித்தான். சரியாய் ஆறாவது நாளிலேயே வண்டியின் வலது பக்கம் கோடு போட்டிருந்தது. நண்பர்கள் துக்கம் விசாரிக்கையில் 'தப்பு என் மேல இல்ல மாமா. பஸ் ட்ரைவர் தான் விடாம ரப்சர் பண்ணி கோட்ட போட்டான்' என புலம்பினான். சென்னையிலேயே பிறந்து வளர்ந்த மற்றொரு நண்பன் சொன்னது 'மாமா மெட்ராஸ்ல எவன்கிட்ட வேணாலும் வம்புக்கு போ. முதல் சவுண்ட் நீ கொடுத்துட்ட கேம் நம்ள்து. தைரியமா இறங்கி ஆடலாம். ஆனா MTC கிட்ட மட்டும் சரண்டர் ஆய்டு. என்ன வண்டி எதுன்னு பார்க்கவே மாட்டான். கோட்டப் போட்டுட்டு போய்ட்டே இருப்பான். அவனுக்கு சைக்கிளும் ஒன்னுதான் சாண்ட்ரோவும் ஒன்னுதான்' என்றான். அப்போது எனக்கும் சென்னை புதிது. ரொம்ப எக்ஸாஜிரேட் பண்ணி சொல்ற நீ என்றேன். சிரித்துக்கொண்டே இங்கதான இருப்ப தெரிஞ்சுக்குவ என்றான். ஐந்து வருட சென்னை வாழ்க்கையில் அவன் வார்த்தைகள் ஒவ்வொன்றும் உண்மை என சுத்தமாகப் புரிந்தது.

இன்றைய தேதிகளில் சென்னை போக்குவரத்து ஒழுங்கில் சீர்கேட்டு கிடப்பதன் பெரும்பங்கு MTCயைச் சேரும். இரண்டு சம்பவங்களைச் சொல்கிறேன். ஒன்று எனக்கு நேர்ந்தது. மற்றொன்று நான் கண்ணால் பார்த்தது. சென்ற வருட தொடக்கத்தில் தோழியோடு டூ வீலரில் சென்றுகொண்டிருந்தேன். வலது பக்கம் திரும்ப வேண்டும். சிகப்பிலிருந்து பச்சைக்கு மாற காத்துக்கொண்டிருந்தோம் முதல் ஆளாய். நேராக செல்ல வேண்டிய வண்டிகளும் சிக்னலுக்காக காத்துக்கொண்டிருந்தன. பெரும் சத்தத்துடன் பின்னால் இடிப்பதுபோல் வந்து நின்றது MTC பேருந்து ஒன்று. கொஞ்சம் தடுமாறிய தோழி வண்டியைக் கொஞ்சம் முன்னால் நகர்த்தி நிறுத்தினாள். நேராக செல்ல வேண்டிய வண்டிகளுக்கு சிக்னல் விழுந்தது. ஆனால் ரைட் சைட் க்ளியர் ஆகவில்லை. ஆனால் அந்த ட்ரைவர் விடாமல் ஹாரன் அடிக்க ஆரம்பித்தார். பொறுத்துப் பார்த்த நாங்கள் திரும்பி அவரிடம் சிக்னல் ரெட்டில் இருப்பதை காமித்து வெயிட் செய்ய சொன்னோம். அவரோ கேட்காமல் நேராக கையை காட்டி ஹாரன் அடித்துக்கொண்டே இருந்தார். என்ன நடந்தாலும் சிக்னல் போடாம நகரக்கூடாதென முடிவெடுத்து வெயிட் செய்தோம். ட்ரைவர் துளியும் யோசிக்காமல் லெப்டில் வளைத்து எங்கள் வண்டியின் பின்புறம் இடித்து சென்றுவிட்டார். இந்த லட்சணத்தில் பக்கத்திலேயே ட்ராபிக் போலீஸ் வேறு. அவரிடம் கம்ப்ளையெண்ட் செய்ததற்கு வழக்கமான சினிமா டயலாக்கை விட்டார்.

இரண்டாவது சம்பவம் சென்ற வாரம் பார்த்தது. வழக்கம்போல் சிக்னலில் நிற்காமல் அவசரமாய் கடக்க முயன்ற MTC பேருந்து ஒன்று குறுக்கில் வந்த (சரியாய் சிக்னலை பாஃலோ செய்து வந்த வண்டி) காரில் இடித்ததில் முன்னால் அமர்ந்திருந்த சிறுமிக்கு காலில் காயம். வருத்தமாவது தெரிவிக்க வேண்டுமே அந்த ட்ரைவர். "பார்த்து வாடா ********" என கார் ஓட்டியவரை தகாத வார்த்தைகளால் அர்ச்சித்துப் பறந்தார். காரில் வந்தவர் பஸ் நம்பரைக் குறித்துக்கொண்டார். கம்ப்ளெய்ண்ட் தந்தாரா, பெற்றார்களா எனத் தெரியாது.

இப்போதெல்லாம் சாலைகளில் MTC பேருந்தைப் பார்த்தாலே எமனின் எருமையைப் பார்ப்பதுபோலிருக்கிறது. ஒரு சிக்னலையும் மதிப்பதில்லை. லெப்ஃட்டோ ரைட்டோ திரும்ப இண்டிகேட்டர் போடுவதில்லை. சாலையின் இடது பக்கத்திலிருந்து வலதுபக்கத்திற்கு ஒரு ஹாரன் கூட கொடுக்காமல் போவது என அத்தனை அடாவடித்தனம். காது கிழியுமளவிற்கு விடாமல் ஹாரன் அடித்து எரிச்சல் செய்வது, வழி தர மறுக்கும் வண்டிகளை இடிப்பது, உராய்ந்து சேதாரமேற்படுத்துவது என அத்தனை அட்டூழியம். ஒரு நிமிடம் அருகிலிருக்கும் MTC பேருந்தை கூர்ந்து பார்த்தீர்களானால் வண்டியின் இருபுறமும் வரிக்குதிரை போல் கோடுகளிருக்கும். காயலான் கடை செல்லவேண்டிய பழைய பச்சை கலர் வண்டியாகட்டும். அல்லது லேட்டஸ்ட் மாடல் வோல்வோ ஏசி பஸ்ஸாகட்டும். கோடு சர்வ நிச்சயம். சர்வ சாதாரணம். ஸ்டாப்பிங் வரும் வரை ஆக்ஸிலரேட்டரிலிருந்து கால் நகரவே நகராது. ஸ்டாப்பிங் வந்தவுடன் அடிக்கும் சடன் ப்ரேக்கினால் பல் பெயர்ந்தவர்கள் ஏராளம். ரத்தம் சொட்ட சொட்ட கர்ச்சீப்பை பொத்திக்கொண்டு இறங்கி ஆட்டோ நோக்கியும், பின்னர் ஆஸ்பத்திரி நோக்கியும் விரையும் நபர்களை நான் பார்த்திருக்கிறேன்.

ஏன் இந்த ஒழுங்கீனம்? போக்குவரத்துக் காவல் துறையினரும் இவர்களை கண்டுக்கொள்வதுபோல் தெரியவில்லையே ஏன்?

MTC பேருந்துகளின் விதிமீறல்களை போக்குவரத்து காவல்துறையினர் கேட்காததற்கு பெரிய காரணமாய் சொல்லப்படுவது யூனியன். ஒரு முறை காவலர் ஒருவர் சொன்னார். 'ரெட் போட்டும் போறான். பிடிச்சா யூனியன் வச்சு முதல்வன் படத்துல வர்ற மாதிரி பெரிய பிரச்சனை பண்ணுவாங்க' என புலம்பினார். யூனியன் என்பது எதற்கு? தொழிலாளர்களின் நலன் பேணத்தான். அதே யூனியனால் சேவை பெறும் மக்கள் பிரச்சனைக்குள்ளாவது கேலிக்கூத்தாகவே இருக்கிறது. கலர்கலராய் வித விதமாய் டீலக்ஸ், அல்ட்ரா டீலக்ஸ், தாழ்தள பேருந்து, தங்கரதம் என வண்டிக்கு பெயர் வைத்தால் மட்டும் போதுமா? ட்ரைவர்கள் சாலை விதிமுறைகளைப் பின்பற்றுகிறார்களா என கண்காணிக்க வேண்டாமா? எல்லா தொழிலிலும் ப்ரோபேஷன் பீரியட் இருக்குமல்லவா? முறையான பயிற்சி, சாலை விதிகள், ரூட்டுகள் என அனைத்திலும் தேர்ச்சி பெற்ற ட்ரைவர்களை நியமிக்கும் கடமை அரசாங்கத்துக்கு/சார்ந்த துறைக்கு இருக்கிறதல்லவா? சில தனியார் ட்ராவல் நிறுவனங்களில் ஓவர் ஸ்பீட் கம்ப்ளெய்ன் செய்ய செல் நம்பர் ஒன்று எல்லா வண்டிகளிலும் இருக்கும். அப்படி ஒரு கம்ப்ளைய்ண்ட் நம்பரை உருவாக்கி தாறுமாறாக ஓட்டும் ட்ரைவர்களை கண்காணிக்கலாமே.

குற்றமென வரும்போது கை தவறு செய்த/செய்யும் அனைவரையும் நோக்கி நீள வேண்டும். மதிப்பிற்குரிய மகாகணம் பொருந்திய காமன் மேன்களான நாம் எந்தளவு ஒழுக்கத்துடன் செயல்படுகிறோம். ஒரே ஒரு பிரயாணி பேருந்து நிறுத்ததிலிருக்கும் நிழற்குடையில் நின்று பேருந்து ஏற வேண்டுமே. ஊஹூம். அத்தனை பேரும் சாலையில் தான் நிற்பார்கள். ட்ரைவரும் நடுரோட்டில் வண்டியை நிறுத்தி ஆட்களை ஏற்றி இறக்குகிறார். அதேபோல் பஸ்சில் ஏறி இடம்பிடிக்க நடக்கும் யுத்தம். கையில் குழந்தை வைத்திருக்கிறார்களா. கர்ப்பிணிகளா. முதியோர்களா? ஊனமுற்றவர்களா. எந்தக் கவலையும் இல்லை. தானுண்டு தன் சீட்டுண்டு என கர்ச்சீப், ஹாண்ட்பேக், சில சமயங்களில் செருப்பு கூட போட்டு இடம்பிடிக்கும் ஆட்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். வரிசைப் பின்பற்றுதல், பர்ஸ்ட் கம் பர்ஸ்ட் சர்வ் போன்றவை இங்கு கடைபிடிக்கப்பட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்.

மக்களின் ஒத்துழைப்போடு அரசாங்கமும் கவனம் செலுத்துமாயின் நன்றாக இருக்கும். இல்லேயேல் MTC மார்ச்சுவரி ட்ரான்ஸ்போர்ட் கார்ப்பரேஷன் ஆகிவிடும் அபாயம் இருக்கிறது.

April 7, 2010

Technology has improved so much you know

பாடி பாய்ஸ் டீமின் குமார் சச்சினுடன் சேர்ந்து சிரிக்கிறான்
உலகக்கோப்பையைக் கையில் பிடித்தபடி

முந்தாநாள் வயசுக்கு வந்த கலைசெல்விக்கு
தன் வீணையையும் வெள்ளைத் தாமரையையும்
கடன் கொடுத்திருக்கிறாள் கலைமகள்

இடதுபுறம் திரும்பி நின்று
நேராய் பார்த்து சிரிக்கும்
ராஜாவையும் கமலாவையும்
இடப்பக்கத்திலிருந்து சிவன் பார்வதியும்
வலப்பக்கத்திலிருந்து அம்மாவும்
வலக்கையுயர்த்தி ஆசிர்வதிக்கிறார்கள்
கைகளிலிருந்து கொட்டுகிறது பூக்கள்

வானளந்த வாமணன் உசரத்தில்
நடந்து வரும் அய்யாவின் காலடியில்
வெள்ளை மாளிகை

முடி சிலுப்பி
புருவம் நெரித்து
சிறுத்தை சீறுகிறது
சே குவேராவென

மருந்துக்குக் கூட மரமில்லாத இடத்தை மறைத்தபடி நிற்கிறது
ப்ரெஞ்ச் விண்டோவும் ஜெர்சி பசுக்கள் மேயும்
ஸ்வீடிஷ் புல்வெளியும் கொண்ட வீடு

மீண்டும் தலைப்பு

April 5, 2010

அங்காடித் தெரு

சில படங்களை பார்க்கும்போது ஏண்டா இந்தப் படத்த பார்த்தோம் என்ற உணர்வு இருவேறு மனநிலைகளில் ஏற்படும். ஒன்று இவ்வளவு மொக்கையானப் படத்துக்கு வந்துட்டோமேன்னு (எனக்கு விஜய் படங்களைப் பார்க்கும்போது ஏற்படும்) தோணுகின்ற நிலை. மற்றொன்று தாங்கமுடியாத மன அழுத்தத்தினை ஏற்படுத்தும்போது. நான் கடவுள் பார்த்தபோது 'அய்யோக் கடவுளே' என்ற உணர்ச்சி மேலோங்கி இருந்தது. அதே உணர்ச்சி அங்காடித் தெருவைப் பார்த்தபோதும் இருந்தது.

இப்படியும் வாழ்க்கை வாய்க்கப்பெற்றவர்கள் இருக்கிறார்களா என்ற ஆச்சர்யம்/அதிர்ச்சி படத்தைப் பார்த்தபோது ஏற்பட்டது. முழுப் படமும் இதே உணர்வுகளை ஏற்படுத்துவதால் சில இடங்களில் மிகைப்படுத்தியிருக்கிறார்களோ என்ற எண்ணமும் ஏற்படுகிறது. எதிர்பாராத தருணங்களில் ஏற்படும் விபத்துக்கள்/நிகழ்வுகள் வாழ்க்கையை எவ்வாறெல்லாம் புரட்டிப்போடுகிறது என்பதற்கான சா(கா)ட்சிகள் படம் முழுவதும். லிங்கு, ராணி, கனி கதாபாத்திரங்கள் மனதில் நிற்கிறார்கள். கருங்காலியாக இயக்குனர் வெங்கடேஷ். அலட்டாமல் வில்லத்தனம். வார்த்தைகளாலேயே குத்திக் கிழிக்கிறார் மனுசன்.

ராணியின் ரத்தத்தை கோலத்தோடு சேர்த்து கழுவி அதே இடத்தில் பிறரால் போடப்படும் கோலங்கள், மரணங்களை மற்றொன்றாக எடுத்துக்கொள்ளும் மனோபாவங்கள் வலியைக் கொடுக்கின்றன. நாய்க்கொட்டிலில் இருக்கும் தங்கை, பாலியல் தொழில் செய்தவருக்கு பிறக்கும் குழந்தை, வெரிக்கோஸ் நோய்கண்டு இறக்கும் நபர் என கதாபாத்திரங்கள் இதுவும் வாழ்க்கைதான் என உணர்த்துகிறார்கள்.

வசனங்கள் பளிச். ஜெயமோகனாமே. இதே மாதிரி இவர் கதைகளும் (எனக்கு) புரிந்தால். ஹும்ம். அதிகம் மெனக்கெடாமல், வார்த்தைகளைத் தேடாமல் இயல்பாய் சொல்ல வந்ததை சொல்ல வேண்டியதை புரிவதுபோல் சொல்லிச் செல்லும் வசனங்கள். இசையும் அப்படியே. அவள் அப்படியொன்றும் அழகில்லை பாடல் அழகாய் இருக்கிறது.

படத்தில் எனக்குப்ப் பிடித்த மற்றுமொரு கதாபாத்திரம் பாண்டி. ஹெவியான படத்தை அவ்வப்போது லேசாக்க முயற்சி செய்திருக்கிறார். 'நீருல்ல நேரம் பார்த்திருக்கனும்' என்பதாகட்டும், சவுரியை வைத்துக்கொண்டு சலம்புவதாகட்டும், கடவுள் வாழ்த்தை காதல் கவிதையாக்குவதாகட்டும். கச்சிதமாய் செய்திருக்கிறார்.

அங்காடித் தெரு - கனக்கிறது

பி.கு : இந்தப் படத்தை பின்பற்றி இனி வெறும் யதார்த்தமான கதைகளே படமாக்கப்படும் என்ற சூழ்நிலை உருவாகாமல் இருக்க பிரார்த்திக்கும் சராசரிக்கும் கொஞ்சுண்டு அதிகமாய் எதிர்பார்க்கும் சாதாரண சினிமா ரசிகை. தியேட்டரில் எங்களிடயே ஏற்பட்ட விவாதங்கள் மற்றொரு பதிவில் பகிர்கிறேன்.