October 28, 2010

மன்னிப்பு கேட்கிறார் ஆமிர்கான்

நல்ல வேளை தப்பிச்சேன். முச்சந்தில நிக்க வச்சு எந்திரன் பாருங்கன்னு பிட் நோட்டீஸ் விநியோகம் பண்ண சொல்லல.

சொன்னா புரிஞ்சிக்கோங்க ஒபாமாஜி. நீங்க என்னைப் பார்க்கலன்னா கூட பரவாயில்ல. கலைஞர் பார்க்காம மட்டும் போய்டாதீங்க.

சொன்னா கேளுங்க தலைவரே. நீங்க கதை வசனம் எதுவும் இப்போதைக்கு எழுத வேண்டாம். அப்புறம் அங்க வேடிக்கப் பார்க்க சேர்ந்த கூட்டம் வோட்டு போடற கூட்டமாயிடும்.

சரி சரி. ஜெயிச்சா தலைமைச்செயலகத்த கொடநாட்டுக்கு மாத்த மாட்டேன்.

அதோ அங்க ஒருத்தர் நிக்கறாரு பாருங்க. இப்போதைக்கு அவரும் நானும் தான் கட்சில இருக்கோம்.

நான் ஆட்சிக்கு வந்தால் என் படத்தைப் பார்க்க தியேட்டருக்கு வரும் அனைத்து மக்களுக்கும் இலவச ஆயூள் காப்பீடு வழங்குவேன்.

நிம்மதியா பாத்ரூம் கூட போக முடியல சார். எங்க, எப்ப எவன் கேமராவோட வருவான்னே தெரியமாட்டேங்குது.

யப்பா ஜெமினி சர்க்கஸ்ல அந்தரத்துல தாவறதுக்கு ஆள் குறையுது. நீங்க வர்றீங்களான்னு கேக்கறான்ப்பா

பாவம். அவங்களோட கவிதைகளை தெரியாத்தனமா படிச்சிட்டாங்களாம்.

நெஞ்சத் தொட்டு சொல்றேன். இப்படி ஒரு கொடுமை நடக்கும்ன்னு தெரிஞ்சிருந்தா கண்டிப்பா 3 இடியட்ஸ் படத்துல நடிச்சிருக்கவே மாட்டேன். தமிழ் மக்கள் என்னை மன்னிச்சிருங்க.

October 27, 2010

வலியின் மொழி

இரண்டு முறை கட் செய்தும் விடாமல் மூன்றாவது தடவையும் அம்மா போன் செய்யவும் பதற்றம் தொற்றிக்கொண்டது. பரத்தை தொடர சொல்லிவிட்டு கான்பரன்ஸ் ரூமிலிருந்து வெளியே வந்தேன். லைன் கிடைக்கவில்லை. கொஞ்சம் படபடப்பாகவும் அதிக எரிச்சலாகவும் இருந்தது. போன் கட் செய்தால் மீண்டும் தொடர்ந்து அழைத்தால் எமர்ஜென்சி என்பது எனக்கும் அம்மாவிற்கும் போடப்பட்ட ஒப்பந்தம். ஒரு தடவை ப்ரொடெக்ஷ்ன் டேட்டாவை சரிப் பார்த்துக்கொண்டிருந்தபோது இரண்டு முறை தொடர்ந்து அடித்தாள். என்ன என அழைத்துக் கேட்டபோது 'சாயந்திரம் வர்றச்சே மறக்காம காபி பொடி வாங்கிண்டு வந்துடு. இன்னைக்கு செகண்ட் டோசுக்கு தான் இருக்கு' என்றவளை என்ன செய்வதென தெரியாமல் எனது நிலை விளக்கிப் போடப்பட்ட ஒப்பந்தம். எமர்ஜென்சி என்றால் மட்டும் திரும்ப கூப்பிடு என்று. உப்பு சப்பில்லாத விஷயங்கள் கூட எமர்ஜென்சி என்பாள். கொஞ்சம் கடிந்து கொண்டால் போதும். ஒப்பாரி ஆரம்பித்துவிடும். 'உங்களுக்கெல்லாம் நான் வேண்டாதவளாப் போய்ட்டேன். என்னை யாரும் மதிக்கமாட்டேங்கறேள்'. உங்கள் என்பது நான் அல்லது அப்பா. அல்லது இருவருமே. இந்தப் பாட்டுக்கு பயந்தே அவள் எது கேட்டாலும் மறுபேச்சின்றி செய்தோம். மார்கழி மகா உற்சவத்திற்கு அழைத்துச் செல்வதை விட மீட்டிங் முக்கியமா என கேட்பவளை என்ன சொல்வது? நாலைந்து முயற்சிக்குப் பிறகு லைனுக்கு வந்தாள்.

'என்னம்மா?'

'நீ சீக்கிரம் லீவு சொல்லிட்டி கிளம்பி வா.'

'கவர்மெண்ட் ஆபிசில்லமா இது. நினைக்கறச்சே கிளம்ப. முதல்ல என்னன்னு சொல்லு. உடம்புக்கு படுத்தறதா ஏதாவது?'

'நான் நன்னாதான் இருக்கேன். ரமணிம்மாஞ்சி தான் போய் சேர்ந்துட்டாராம். நீ கிளம்பி வா. எனக்கு அவாத்துக்கு தனியாப் போத்தெரியாது. சாயந்திரம் பாடி எடுக்கறதுக்குள்ள போகனும்.'

'விளையாடறியாம்மா. இங்க தலைக்கு மேல வேலை இருக்கு. என்னால வர முடியாது. அப்பாவ அழைச்சிண்டு போய்ட்டு வா.'

'அவர் டிசி மீட்டிங் முடியாதுன்னுட்டார். உன்ன கூட்டிண்டு போக சொன்னார்.'

'எனக்கும் இன்னிக்கு க்ளையண்ட் கால் இருக்குமா. இன்னைக்கு போகலன்னா என்ன? பத்துக்கு முன்னால ஒரு நாள் போய் விசாரிச்சிட்டு வரலாம்.'

'நீயும் முடியாதுங்கறே. நானென்ன பீச், பார்க்குன்னா கூட்டிண்டு போக சொல்றேன். என் அம்மாஞ்சி மூஞ்ச கடைசி தடவை பார்க்கனும்ங்கற ஆசை இருக்காதா எனக்கு?'

பாட்டு ஆரம்பித்துவிட்டது. அப்பா தப்பித்துவிட்டார். ’ஹாஃப்’ என்றவளை முறைத்த பரத்திடம் அடுத்த மாதம் நான் பார்த்துக்கொள்கிறேன் என பொய் சத்தியம் செய்து கிளம்பி வீட்டை அடைவதற்கு மணி இரண்டானது. அம்மா தயாராய் வாசலில் இருந்தாள்.

'மயிலாப்பூருக்கு ஆட்டோலயே போய்டலாமா?'

'மயிலாப்பூர் என்னத்துக்கு?'

'ரமணி மாமா ஆம் அங்கதானே இருக்கு. அவாத்துக்கு தானே பாடி கொண்டு வருவா? இல்லை மாமியாத்துக்கு போறதா?'

'அடியே. இறந்தது குண்டு ரமணி.'

'நீ சொல்ல வேண்டாமா? உங்காத்து மனுஷாளுக்கு பேர் பஞ்சம் வந்தாப்ல அத்தனை ரமணி. குண்டு ரமணி, சேப்பு ரமணி, கல்யாண ரமணின்னு ஒரே ரமணி மயமா இருக்கு. நல்ல வேளை நான் மயிலாப்பூருக்கு போன் பண்ணி ஆத்துக்கு வழி கேட்கலை. அசடு வழிஞ்சிருக்கனும்.'

'அருணுக்கு போன் பண்ணி அவா ஆம் எங்க இருக்குன்னு கேளு. அவன் தான் எனக்கு தகவல் சொன்னான்.'

அருண் என் பெரியம்மா பையன். மெடிக்கல் ஃபீல்டில் இருப்பதால் யாருக்காவது உடம்பு என்றால் கட்டாயம் உதவி வரும். அண்ணாவை அழைத்து வழி கேட்டதுக்கு 'மாம்பலத்துல தான் வீடு. அயோத்தியா மண்டபத்திற்கு எதுதாப்புலயே இருக்கு' என்றார். மாம்பலத்திலிருக்கும் முக்கால்வாசி பேர் சொல்வது தான். அயோத்தியா மண்டபத்திற்கு எதிர்ல தான் வீடு. எத்தனை வீடு தான் இருக்க முடியும் அயோத்தியா மண்டபத்திற்கெதிரவே? அயோத்தியா மண்டபம் போய் சேர்ந்து மறுபடியும் போன் செய்தோம். லைன்லயே இருன்னு சொல்லி 2 கி.மீ தொலைவிற்கு வழி சொன்னார். அந்தத் தெருவில் நுழைந்தபோதே ஷாமியானாவும், நீல்கமல் சேர்களும் ரமணி மாமா வீட்டை அடையாளம் சொன்னன. வாசலிலேயே அருணண்ணாவும் பாடை கட்டுபவனுக்கு இண்ஸ்டரக்ஷன் கொடுத்துக்கொண்டு இருந்தார். நீங்க வந்தத நான் கவனிச்சேன் என்பது போல் பார்த்தவர்களெல்லாம் தலையை மேலும் கீழும் ஆட்டினார்கள். அம்மா உள்ளே செல்ல நான் அண்ணாவின் அருகிலேயே நின்றுவிட்டேன். அம்மா உள்ளே நுழைந்ததும் பெரிதாக அழுகை சத்தம் எழும்பி அடங்கியது. வாசலில் கொஞ்சம் மாமாக்கள் அங்கங்கே உட்கார்ந்து கொண்டு பேப்பரை நாலாய் எட்டாய் மடித்து வைத்து படித்துக்கொண்டிருந்தார்கள். "உள்ளே போலியா" என்றார் அண்ணா.

”ப்ச். போய் என்ன பண்றது. யாரு என்னன்னே தெரியாது. கடைசியா உங்க கல்யாணத்துச்சே பார்த்தது. என்ன ப்ராப்ளம்?”

“ஹார்ட் அட்டாக். மாஸிவ். ஏற்கனவே கொஞ்சம் ட்ரபிள் இருந்தது போல.”

“நீங்க எப்படி?”

“கான்ஃபரன்ஸ் விஷயமா டாக்டரப் பார்க்க போயிருந்தேன். சின்னவ என்ன பார்த்திருக்கா.”

“பெரியம்மா வரலையா?”

“பெங்களூர்ளன்னா இருக்கா. ப்ராப்ளமா இருக்கு. நாளன்னிக்கு கிளம்பி வர்றா. நீ எப்படி?”

“உங்க அருமை சித்தியால வந்தது. ஒரே ஒப்பாரி. சொல்லி சொல்லி காமிப்பா. அதான் நானே அழைச்சுண்டு வந்துட்டேன்.”

“ஜாப் எப்படி போயிண்ட்ருக்கு?”

“என்னத்த சொல்ல. பேர்தான் ப்ராஜெக்ட் லீடர். டெவலபர், டெஸ்டர்ன்னு நாலு பேருக்கான பில்லிங் குடுத்துக்கிட்டிருக்கேன். இப்போக் கூட க்ளையெண்ட் கால விட்டுட்டு தான் வந்திருக்கேன். ஆப்ரைசல்ல ரிஃப்ளெக்ட்டாகுமோன்னு கவலையா இருக்கு. உங்களுக்கு எப்படி போறது?”

“அதே நாய் பொழப்பு தான். ஏய் சுதா அத்தை வர்றாடி”

“அய்யோ நான் உள்ளே போறேன் சாமி. அத்தை வாயாலேயே வறுத்தெடுத்துடுவா.”

ஹாலின் நடுவில் நெடுஞ்சான்கிடையாக ஐஸ் பாக்ஸில் படுக்க வைக்கப்பட்டிருந்தார் மாமா. போஸ்ட்மார்ட்டம் செய்யப்படவில்லை என்பது மார்பு வரை போர்த்தியிருந்த துணியின் மூலம் தெரிந்தது. நாலு நாள் முள்ளு தாடியுடன் கையை மார்பில் வைத்தாவறு கிடந்தார் மாமா. தலைமாட்டில் பீதாம்பரி பவுடரால் அங்கங்கே நான் பித்தளை வம்சம் தான் என காட்ட முயன்றுக்கொண்டிருந்த காமாட்சி விளக்கு நிதானமாய் எரிந்துக் கொண்டிருந்தது எந்த சலனமுமில்லாமல் ரமணி மாமாவைப் போல். ஐஸ் பாக்ஸின் மேல் ஒரு பெரிய ரோஜாப் பூ மாலை போடப்பட்டிருந்தது. ஒரு நிமிடம் பாக்ஸின் அருகே தலை குனிந்து நின்றேன். அதற்குள் அத்தை வந்து மாமியைக் கட்டிக்கொண்டு அழ ஆரம்பித்துருந்தாள். நான் எதிர்பக்கம் ஹாலின் மூலையில் அமர்ந்தேன். அம்மா மாமிக்கு ஆறுதலளிக்க வேண்டி அவள் கையைப் பற்றிக் கொண்டிருந்தாள். இவ்வளவு நேரம் என்ன பண்ண என்ற கண்ணாலேயே கேட்டாள். நான் முறைத்துவிட்டு பார்வையை மாமி மேல் நகர்த்தினேன். இதற்குமேல் அழ திராணியில்லையென்பதுபோல் அரை மயக்கத்தில் இருந்தாள் சாரதா மாமி. ரமணி மாமாக்கு இரு பெண்கள். பெரியவளின் ஜாதகத்தை தையில் எடுத்துவிட்டதாய் அம்மா பெரியம்மாவிடம் பேசிக்கொண்டிருந்தது நினைவுக்கு வந்தது. அம்மாவின் தூரத்து உறவென்பதால் ரமணி மாமா குடும்பத்துடன் அந்தளவு பழக்கமில்லை. எப்போதாவது பெரியம்மா வீட்டு விசேஷங்களில் பார்த்துக்கொண்டு நன்னாருக்கியா? யாருன்னு தெரியறதா என்ற சம்பிரதாயக் கேள்விகளோடும் பரஸ்பரப் புன்னகை பரிமாற்றங்களோடும் நகர்ந்துவிடுவதோடு சரி. பெரியவளின் முகத்தை நினைவிலிருந்து தூசு தட்டி எடுத்துக்கொண்டிருந்தேன். பாக்ஸை சுத்தி பார்வையைச் சுழட்டியதில் மாமிக்கு எதிர்த்தாற்போல் இரு பெண்களும் அருகருகில் அமர்ந்திருந்தார்கள். சின்னவளுக்கு 13 வயதிருக்கும். பெரியவளுக்கு கிட்டத்தட்ட என் வயதுதான். பெயர் நினைவிலில்லை. பெரியவள் கன்னத்தில் கண்ணீர் கோடுகளாய் காய்ந்திருந்தது. மாமாவை வெறித்துப் பார்த்தவளாய் அமர்ந்திருந்தாள். அருணன்னாவின் கல்யாணத்தில் கடைசியாய் பார்த்தேன். கொஞ்சும் குரலில் நலங்கின் போது அவள் பாட்டு பாடியது ஞாபகத்துக்கு வந்தது. எழுந்துபோய் அவளருகில் அமர்ந்தேன். என் இருப்பை உணர்ந்தவளாய்

'நன்னாத்தான் இருந்தார். மைல்டா ஹார்ட்ல பிராப்ளம் இருந்தது. நத்திங் சீரியஸ்ன்னு தான் டாக்டர் சொல்லிருந்தார். நேற்றைக்கு தீடிர்ன்னு அட்டாக். மாஸிவ். போய்ட்டார்'.

எந்த உணர்ச்சியுமில்லாமல் அவள் சொல்லிமுடிக்கவும் என்ன சொல்வதென்று தெரியாமல் அமர்ந்திருந்தேன். அவளே தொடர்ந்தாள்.

'பயமாயிருக்கு. என்னப் பண்ணப்போறேன்னு தெரியல.'

'நீ இப்பதான் தைரியமா இருக்கனும். அம்மாக்கும் தங்கைக்கும் தெம்பு கொடுக்கனுமில்லையா' என்றேன். இதற்குமேல் என்ன பேச வேண்டுமெனத் தெரியவில்லை. அழலாமா என யோசித்தேன். இண்ஸ்டண்ட் அழுகை பழக்கமில்லாததால் முயற்சியைக் கைவிட்டேன். கடைசியாக அழுதது எப்போது என்ற கேள்வி எழுந்தது. சிறுமியாக இருந்தபோது பெரியப்பா, தாத்தா, சித்தப்பா என அடுத்தடுத்து பறிகொடுத்த குடும்பம். புதிதாக எழும்பிக் கொண்டிருந்த வீட்டில் அண்ணன்களோடு விளையாடிக் கொண்டிருந்தது நினைவிருந்தது. சென்ற வருடம் பாட்டி இறந்தபோது அழவில்லை. காட்டுக்குப் போய்விட்டு வீடு வந்து குளித்தவுடனே சாப்பிடாமல் கிளம்பி ஓடியதும் நினைவில் இருந்தது. துக்கமோ, வருத்தமோ இல்லாத மனநிலையில் இருந்தேன். இன்னும் சொல்லப் போனால் எந்தவிதமான உணர்ச்சியும் என்னில் இல்லை.

இதற்கிடையில் அவள் சித்தப்பா வந்து சேர, பாடியை எடுக்கும் வேலைகள் ஆரம்பமானது. மாமியால் முடியாததால் சாஸ்திரத்துக்கு பக்கத்து வீட்டு கிணற்றிலிருந்து தண்ணி கொண்டு வந்து கொட்டப்பட்டது. அண்ணாவும், சித்தப்பாவும் சேர்ந்து மாமாக்கு வேஷ்டி போர்த்தினார்கள். பாடையில் கிடத்த பாடியை தூக்கியபோது எழுந்த அழுகை அடர்த்தியான ஊதுபத்தி மற்றும் சாம்பிராணி புகையை மீறி அனைவரையும் தாக்கிற்று. பாடியை தூக்கும் நேரம் பெரியவள் அலற ஆரம்பித்தாள்.

'மெதுவா தூக்குங்கோ. கைய அழுந்தப் புடிக்காதீங்கோ. அவருக்கு கை வலி இருக்கு'

சட்டென திரும்பி என் பக்கம் பார்த்து

'என் கூட வர்றியா. நானும் காட்டுக்குப் போகனும். அப்பா ரொம்ப சூடு தாங்க மாட்டார். நான் வர்றதுக்குள்ள அம்மாக்கு என்ன பண்ணனுமோ பண்ணிடுங்க. அதெயெல்லாம் என்னை பார்க்க வச்சிடாதீங்கோ. அம்மாவ ரொம்ப படுத்தாதீங்க.'

டக்கென்று அவள் சித்தப்பா “என்ன புது பழக்கம். பொம்ணாட்டிகள் காட்டுக்கு வர்றது? எல்லாம் இங்கேயே இருங்கோ. நான் அண்ணாவை அனுப்சிட்டு வர்றேன்” என்றார்.

”என்னக் காலத்திலடா இருக்க சங்கரா? இப்பல்லாம் எல்லாருமேதான காட்டுக்குப் போறா. விடுடா. அவாளும் வரட்டும். அப்பாக்கு பெண்குழந்தேள் கொள்ளிப் போடறதொன்னும் மாபாதம் கிடையாது” என்றாள் கூட்டத்திலிருந்து ஒரு வயதான மாமி. பேச்சுகள், எதிர்பேச்சுகள் என ஹாலில் சிறு குழப்பம் ஆரம்பமாயிற்று. வாத்தியார் நாழியாயிடுத்து என்றார். கடைசியில் வழக்கம்போலவே ஆண்கள் மட்டும் காட்டுக்குப் போகலாம் என முடிவெடுக்கப்பட்டது. மாமியாத்திலும் பயங்கரமான மடி ஆச்சாரம் என கேள்விப்பட்டேன்.

ஐந்து நிமிடங்களில் மாமாவைக் கிளப்பிக்கொண்டு போனார்கள். பெரியவள் விடாமல் பேசினாள். அவள் நிலையிலில்லை என உணர்ந்து அவளை நானும் அண்ணாவும் வெளியே அழைத்துக்கொண்டு போனோம்.

'எல்லாம் முடிஞ்சிடுத்துல்ல. இனிமே என்ன பண்றது. எல்லாத்தையும் நாந்தான் பார்க்கனும். எவ்வளவு சேர்த்திருக்காருன்னு கூட தெரியாது. அந்தளவுக்கு பார்த்துண்டார். ஈபி கார்ட் முதற்கொண்டு எங்கிருக்குன்னு அவருக்குத் தான் தெரியும். கண்ணக் கட்டி காட்டுல விட்டாப்ல இருக்கு. இனிமே புதுசா முதல்ல இருந்து ஆரம்பிக்கனும். இனி நான் ராஜகுமாரி இல்ல. வெறும் சேவகி. தங்கையப் படிக்க வைக்கனும். அம்மாவ கடைசி வரைக்கும் குறையில்லாம வச்சிக்கனும். எப்படி? தெரியல. ஏன் இப்படி திடீர்ன்னு போய்ட்டார்' என தேம்பினாள்.

'அதெல்லாம் அப்புறம் பேசிக்கலாம். நாங்க எல்லாம் இருக்கோம். தைரியமா இருடி' என்றார் அண்ணா.

'எத்தனை நாளைக்குண்ணா இருப்பேள். உங்களுக்குன்னு வாழ்க்கையிருக்குல்ல?'

என் கைய அழுந்தப் பற்றிக்கொண்டவள் 'எப்படியாவது எனக்கு ஒரு வேலை வாங்கிக்கொடு ஸ்வேதா. வேற எதுவும் வேணாம். யாரும் வேணாம். நான் கடைசி வரை இப்படியே இருந்திடறேன் அம்மாக்குத் துணையா.'

ஒரு இழப்பு இவள் வாழ்க்கையை மாற்ற ஆரம்பித்திருந்தது. நீச்சல் தெரியாமல் கடலைக் கடக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்படுவது கொடுமைதானே. ஒரே நிமிடம் இவள் நிலையில் என்னை வைத்துப் பார்த்தேன். உடம்பு அதிர்ச்சியில் உதறியது. எல்லாம் முடித்து அம்மா வந்து காதைக் கடித்தாள். 'போய்ட்டு வர்றேன்னு அச்சு பிச்சுன்னு உளறாதே. அப்படியே வா'

செருப்பை மாட்டியவள், ஏதோ உறுத்தியதால் கழட்டிவிட்டு நேரே அவளிடம் சென்றேன். அவள் கையைப் பற்றி அழுத்தினேன். வேறெதுவும் சொல்லத் தோன்றவில்லை. கிளம்பிவிட்டேன். ஆட்டோ ஏறியவுடன் அழ ஆரம்பித்த என்னை அம்மா விநோதமாக பார்த்தாள்.

October 25, 2010

முழிப்பெயர்ப்புக் கவுஜைகள் - I

பிறமொழிக் கவுஞ்சர்களில் குறிப்பிடத்தக்கவர் கவுஞ்சர் அந்நோவ்ன். அவரின் எண்ணிலடங்கா படைப்புகள் வாசிக்க வாசிக்க மட்டற்ற மகிழ்ச்சியைத் தருவன. குழந்தைகளுக்கு குதூகல பாடலாகவும். பெரியவர்களுக்கு முற்போக்கு அர்த்தம் பொதிந்த தத்துவங்களாகவும் தெரிவது இவர் கவுஜைகளின் சிற்ப்பம்சம். இவரின் கவுஜைகள் படிப்பவரின் மனநிலைக்கு ஏற்ப தன் அர்த்தத்தை மாற்றிக்கொள்ளும் வல்லமை படைத்தவை.

Baa, baa, black sheep
Have you any wool?
Yes sir, yes sir,
Three bags full.
One for my master,
One for my dame,
And one for the little boy
Who lives down the lane.

- Unknown

சின்னஞ்சிறிய ஆட்டுக்குட்டியே
பயமின்றி திரிகிறாயே

அச்சுறுத்தலுக்கு அஞ்சேனய்யா
பயம் போக்கும் பானம் உள்ளதய்யா

எசமானருக்கு கொடுப்பேன்
பெண்ணெனப் பிரித்துப் பார்க்க மாட்டேன்
உலகமறியாச் சிறுவனென உதாசீனப்படுத்தமாட்டேன்
சமமாய் கொடுத்து மகிழ்வேன்
சரக்கையும் சந்தோஷத்தையும்

- தமிழில் வித்யா..

ஆசிரியர் சுட்டிக் காட்டும் ஆடு வயதில் சிறியது (baa baa - பாப்பா). நரிகள் திரியுமிடத்தில் இருக்கிறாயே. உனக்கு உள்ளூர பயமில்லையா எனக் கேட்கிறார். அதற்கு அந்த ஆட்டுக்குட்டியானது பயமிருந்தாலும் மூன்று பை முழுவதும் இருக்கும் திரவத்தைக் குடிப்பதால் பயம் போய் தைரியம் வந்துவிடும் எனக் கூறுகிறது. மேலும் பெண்கள் குடிக்கக்கூடாது எனத் தடைகள் போடும் கலாச்சார/பிற்போக்குத்தனமான சமுதாயத்திலிருந்து வந்தாலும் ஆணிற்கும் பெண்ணிற்கும் சரிசமமாக பகிர்ந்துக்கொடுக்கும் எண்ணம் கொண்ட கவுஞ்சர் அந்நோவ்ன் அந்தக் காலத்திலேயே பெண்ணீயம் பேசியிருக்கிறார். அதே போல் சின்னப்பையன் உனக்கு ஒன்னும் தெரியாது என்று சொல்லாமல் அவனையும் சக மனிதனாக மதித்து அவனுக்கு தனியே எடுத்துவைத்திருபதன் மூலம் குழந்தைகளின் மனதைப் புரிந்த வல்லுநராகயிருக்கிறார்.

கவுஞ்சர் அந்நோவ்னின் வேறொரு கவுஜையின் முழியைப்பேர்த்து அடுத்த பதிவில் தருகிறேன்.

October 20, 2010

நவராத்திரி - ஃபோட்டோ ரவுண்ட் அப்

மைலாப்பூர் வடக்கு மாட வீதி முழுவதும் பொம்மைகளின் அணிவகுப்பு. ஜூனியரைக் கூட்டிக்கொண்டு போனேன். பொம்மைகள் எல்லாம் அம்மாடியோவ் விலையில். 30 ரூபாயில் ஆரம்பித்து 8,000 ரூபாய் வரை பொம்மைகள் இருந்தன. தெருவின் இருபுறமும் பொம்மைகளின் அணிவகுப்பு அவ்வளவு அழகாக இருந்தது. ஜூனியர் கண்ணில் படுவதையெல்லாம் வாங்கனும்னு சொல்லிக்கொண்டிருந்தார். அவர்கள் சொல்லும் விலையில் பாதியைக் குறைத்து பேரம் பேசவேண்டியிருக்கிறது:((
அதே வடக்கு மாட வீதியில் ஒரு பாட்டி கோல அச்சுகள் விற்றுக்கொண்டிருந்தார். எனக்கு சுட்டுப் போட்டாலும் கோலம் போடவராது. அதனால் நானும் சில அச்சுகள் வாங்கிக்கொண்டேன். நான் கேட்ட மயில் டிசைன் அவுட் ஆஃப் ஸ்டாக். நாளை வா தாரேன் என்றார். ஜூனியரைக் கூட்டிக்கிட்டு இரண்டு நாள் வந்ததுக்கே நாக்கு வெளில தள்ளிருச்சு. இதுல மூணாவது நாள் வேறயா என மனதில் நினைத்துக்கொண்டேன்.
மூன்று படிகளோடு ஆரம்பித்திருக்கிறேன். வியாழனன்று மாலை ஒரே ஒரு பிள்ளையார் பொம்மை மட்டும் வைத்துவிட்டு மறுநாள் மாமியார் வீட்டிற்கு சென்றுவிட்டேன்.
பைனாப்பிள் கேசரி
பீங்கான் பிள்ளையார்
மாமியார் வீட்டு கொலு
இது நான் வைத்தது. கம்ப்ளீட். DOT:)
கிருஷ்ணன் - கோபியர் கோலாட்டம். தாண்டியா ஆட்டமும் ஆட தசரா கூட்டமும் கூட
சமயபுரம் மாரியம்மன். பாண்டிச்சேரியில் வாங்கினது. மைலாப்பூரை விட பாண்டியில் பொம்மைகள் மலிவாக இருக்கின்றன. அரசே கண்காட்சி நடத்தி சிறப்புத் தள்ளுபடியும் கொடுக்கிறார்கள். பண்ரூட்டியிலிருந்து வரும் பொம்மைகள் தத்ரூபமாக இருக்கின்றன.
அர்த்தநாரீஸ்வரர். பார்த்ததும் பிடித்ததால் வாங்கினேன்.
இது எதுக்கு வாங்கின?
ஆணும் பெண்ணும் சமம். பெண்ணீயம். அதெல்லாம் உனக்குத் தெரியாது. புரியாது.
முதல்ல நெட் கனெக்‌ஷன புடுங்கனும்.
இதுவும் ஆணாதிக்கம்தான்.
ஙே!!
டெரக்கோட்டா பிள்ளையார்
இந்த டெரக்கோட்டா பவுல் தோழி பரிசளித்தது.
இந்த தசாவதார பொம்மைகள் அம்மாவுடையது. 25 வருஷத்திற்கு முன்னர் பெரியம்மா அம்மாவிற்கு வாங்கிக்கொடுத்ததாம். விருத்தாச்சலம் பீங்கான் ஃபேக்டரியிலிருந்து வாங்கியிது. அம்மா காஞ்சிபுரத்தோடு கொலு வைக்கும் பழக்கத்தை விட்டுவிட்டார் (தொடர்ந்து மூன்று வருடங்கள் வீட்டில் துக்க நிகழ்வு. செண்டிமெண்டாக அம்மா அப்செட்). இந்த முறை நான் அம்மாவிடமிருந்து லவட்டிக்கொண்டு வந்துவிட்டேன்.
இதை எந்த ஆர்டரில் அடுக்க வேண்டும் என்பது தெரியவில்லை. வழக்கம்போல் அம்மாவிடம் கேட்க அம்மா பெரியம்மாவிடம் கேட்டு அவங்களுக்கும் சரியா ஞாபகமில்லையென சொன்னார். அப்புறம் நெட்ல தேடிப்பாரேன் என்றார்;) பின்னர் வைசாகிலிருந்து அக்கா ஃபோன் பண்ணி வரிசை சொன்னார்.
“எப்படிக்கா?”
“ஹி ஹி. ரெண்டு வருஷத்துக்கு முன்னால மைலாப்பூர்ல செட் வாங்கும்போதே பின்னால நம்பர் போட்டுக் கொடுத்துருக்காண்டி”
“அதானே பார்த்தேன்.”
“அது சரி. நீ என்ன கொலுவெல்லாம் ஆரம்பிச்சிருக்க. நம்பவே முடியல”
“போரடிக்குதுக்கா. ஃப்ரெண்ட்ஸ், ஃபேமிலி, அக்கம் பக்கமென நிறைய பேர் வந்து போய்கிட்டிருக்காங்க. ரிலாக்ஸ்டா இருக்குக்கா.”

இந்த பிள்ளையார் என்னோட பிறந்தநாள் பரிசாக வந்தது:)
மேலும் சில படங்கள்

October 19, 2010

Go Mexico - Texas Fiesta

சிட்டி செண்டர் - ஐநாக்ஸ் தியேட்டரில் “டெக்சாஸ் ஃபியெஸ்டா’ என்ற எக்ஸ்பிரஸ் கவுண்டர் பார்த்ததிலிருந்து இந்த ரெஸ்டாரெண்டுக்குப் போக வேண்டுமென்ற ஆசை இருந்துக்கொண்டே இருந்தது. பலவித தடைகளைக் கடந்து ஒரு சனிக்கிழமை மதியம் சென்றோம். ரொம்ப சிரமப்படவில்லை இடத்தைக் கண்டுபிடிக்க. கஃபே காஃபி டேயின் மாடியில் அமைந்திருக்கும் ரெஸ்டாரெண்டின் வாசலில் “Welcom cowboys and yankees" என்ற வாசகம் உள்ளே என்ன எதிர்பார்க்கவேண்டுமென சொல்கிறது. ஹேங்கரில் தொங்கும் கௌபாய் உடைகள், தொப்பி, வால்பேப்பர்கள், உட்டன் ப்ளோரிங், ரெஸ்டாரெண்ட் சிம்பலான ரேஜிங் புல் என மெக்சிகன் ஆம்பியன்ஸ் சிம்ப்ளி சூப்பர்.

Veg Mixed Bean Tortilla Soup, Potato Wedges, Nachos with chilli beans, Garlic Bread இவையனைத்தும் ஸ்டார்டருக்கு ஆர்டர் செய்தது. Potato wedges உடன் சர்வ் செய்யப்பட்ட டிப் அட்டகாசம். Nachos உடன் ரேஜிங் பஃபெல்லோ என்ற டிப் ஆர்டர் செய்தோம். எல்லாமே நன்றாக இருந்தது. அளவும் அதிகம். பனியில்லாத மார்கழியா போல மார்கரிட்டா இல்லாத மெக்சிகனா என நான் Naranja என்ற ஆரஞ்சு ஃப்ளேவர்ட் மார்கரிட்டாவும், அவர் லெமன் ஃப்ளேவர்டும் சாப்பிட்டோம். Slurrppp;)


கலர் கலராய் மார்கரிட்டா பார்க்கும்போதே மனதைக் கொள்ளை கொள்கிறது. மெயின் கோர்ஸிற்கு நாங்கள் ஆர்டர் செய்தது Vegetable enchilada மற்றும் vegetable chimichangas. இதுல் என்சிலாடா ஆவரேஜாகவும், சிமிசாங்காஸ் சூப்பராகவும் இருந்தது. சிமிசாங்காஸோட பரிமாறப்பட்ட மெக்சிகன் ரைஸ் நல்ல காரமாகவும் புளிப்பாகவும் இருந்தது.

இதுவே ரொம்ப ஃபில்லிங் ஆகிவிட்டதால் டெசர்ட் எதுவும் சாப்பிடவில்லை. Fruit Quesadilla ட்ரை பண்ண சொல்லி ரெகமெண்ட் செய்தார்கள். கண்டிப்பாக அடுத்த முறை என சொல்லிவிட்டு வந்தோம்:)

மேலதிக தகவல்கள்

உணவகம் - Texas Fiesta
உணவு - Mexican
இடம் - Shafee Mohamed Road, Nungambakkam. அப்போல்லோ ஹாஸ்பிட்டல் செல்லும் வழியில் அபூர்வா சங்கீதா ரெஸ்டாரெண்ட் அருகில் இருக்கிறது.
டப்பு -
800 + taxes இருவருக்கு (காஸ்ட்லி தான். ஆனால் உணவிற்கு கொடுக்கலாம் போலிருக்கிறது. டான் பெப்பேவைக் கம்பேர் செய்யும்போது இந்த இடம் நன்றாக இருப்பதாகத் தோன்றுகிறது).

பரிந்துரை : மெக்சிகன் உணவிற்குப் பழக்கப்பட்டவர்கள் கண்டிப்பாக போகலாம். புது முயற்சியெனில் பிடிக்காமலும் போகலாம்.

October 11, 2010

200க்கு 200 (இருநூறாவது பதிவு)

அல்லாருக்கும் டாங்சுபா....




ஸ்க்ரிப்ளிங்க்ஸ்க்கு இது 200ஆவது பதிவு. அப்படியே ஃபாலோவர்ஸும் 200 பேர் ஆகிட்டாங்க.

தொடர்ந்து ஊக்கமும் உற்சாகமும் அளித்து வரும் சக பதிவர்களுக்கு நன்றி.

October 7, 2010

கமான்..கமான்...காமினி (சவால் சிறுகதை)

திடுமென விழிப்பு வந்தது காமினிக்கு. காற்றில் கனமான மருந்து நெடி மூக்கைத் தாக்கியது. சிறிது நேர சிரமத்திற்குப் பின்னர் கண்ணைத் திறந்தாள். அரைக்கண்ணால் அறையை சுழற்றினாள். மெல்லிய நீல வெளிச்சத்தில் எதுவும் துல்லியமாக தெரியவில்லை. கட்டிலைச் சுற்றி சில எலக்ட்ரானிக் வஸ்துக்கள் கடோத்கஜன்கள் போல் நின்று கொண்டிருந்தன. சிக்னல் இல்லா ரோடை க்ராஸ் செய்யும் வாகனங்கள் போல ஒயர்கள் குறுக்கும் நெடுக்குமாய் ஓடிக்கொண்டிருந்தன. கதவு திறக்கப்படும் சத்தம் கேட்டதும் கண்களை மூடிக்கொண்டாள். இரண்டு ஜோடி பூட்ஸ்களின் ஓசை மெல்லத் தேய்ந்து அறை மீண்டும் நிசப்தமாயிற்று.

“ஏதாவது இம்ப்ரூவெமெண்ட்ஸ்?”

“ம்ம்ம். இப்பதான் பல்ஸ் ஸ்டேபிள் ஆயிருக்கு. இனிமே தான் கண்ட்ரோல் சோதனைகளை முயன்று பார்க்கனும்.”

“சிப் பங்கஷனிங்??”

“மற்ற எல்லா உறுப்புகளையும் கண்ட்ரோல் செய்கிறது. மூளையுடனான synchronization பக்காவாய் இருக்கிறது. சிலிக்கான் நியூரான்களை இம்ப்ளாண்ட் செய்து முடித்தபின் சோதனைகள் வெற்றியடைந்தால் மூளையை அகற்றி விடலாம்.”

“அவசியம் அதை செய்ய வேண்டுமா? sync proper எனும் பட்சத்தில் எதற்கு ரிமூவ் செய்யனும்?”

“நோ கௌதம். அது எப்பவுமே டேஞ்சர். சில சமயங்களில் சுரப்பிகள் தப்பாட்டம் ஆடினால் போச்சு. ஒரு செகண்ட் மிஸ்மேட்ச் ஆனாலும் ரிகவரி கஷ்டம். கண்ட்ரோல் அதை விட கஷ்டம்.”

“பழைய ஞாபகங்கள்?”

“இன்னும் எரேஸ் செய்யவில்லை. நாளைக்கு சேம்பருக்கு கொண்டு சென்ற பிறகு தான் நெர்வ் கேஸ் கொடுக்க வேண்டும். அதன் பின் 72 மணி நேரத்தில் அக்யூட் மெமரி லாஸ் ஏற்பட்டுவிடும். பிறகு புது செட் கண்ட்ரோல் அப்ளை செய்து பார்க்க வேண்டும். பை தி வே அந்த நம்பர்க்குரிய ஆளை கண்டுபிடித்தாயா?’

“இன்னும் இல்லை. அது ஃபேக் நம்பராக இருக்குமென நினைக்கிறேன். நாளை சொல்லிவிடுகிறேன்.”

“சரி. ஏற்கனவே ரன் பண்ணிய ப்ரோக்ராம்களை ஒரு முறை டெஸ்ட் பண்ணனும். ப்ளீஸ் ட்ரெஸ் ஹெர்.”

“ஒக்கே. ஐ வில்.”

மீண்டும் பூட்ஸ் சத்தம். ஆனால் இந்தமுறை ஒரு ஜோடி மட்டும். சத்தம் தேய்ந்து கதவு திறந்து மூடியதும் சிறுது நேரத்திற்கு அமைதி நிலவியது. மெல்லிய பீப் சத்தங்கள் கேட்டன. பின்னர் மீண்டும் நிசப்தம்.

“ஹலோ. டாக்டர் பேசறேன். கேன் ஐ டாக் டு சிவா?”

”....”

“என்ன சொல்லுங்க டாக்டர்? நீ பண்ண தப்பால இப்ப மாட்டிக்கப் போற”

“......”

“புல் ஷிட். உன் கார்லயேவா கொண்டு போய் டிஸ்போஸ் பண்ணுவ. அதுவும் பட்டப் பகல்ல”

“......”

“நல்லா செக் பண்ணப் போ. மொதல்ல காரோட ரெக்கார்ட்ஸ ஒழி. நம்பர் ஃபேக்குன்னு நான் சொல்லிட்டேன்.”

“.......”

“தட்ஸ் ஒக்கே. எல்லாம் உங்க அப்பாவுக்காக.”

”.....”

“ஃபைன். டோண்ட் ஒர்ரி. டேக் கேர்.”

காமினியின் ப்ளாஸ்டர்களை எடுத்த டாக்டர் அதிர்ந்தார். காயங்கள் இருந்த இடம் சுத்தமாக இருந்தது. வடு கூட இல்லை. இண்டர்காமை எடுத்து லேபிற்கு சுழற்றினார். பதிலில்லை. அவசரமாக அறையை விட்டு வெளியேறினார். டாக்டர் அகன்றதும் காமினி எழுந்து தன் முகத்தில் இருந்த மாஸ்கை அகற்றிவிட்டு, வயர்களையெல்லாம் பிடுங்கி விட்டு அருகிலிருந்த கண்ணாடி ஜன்னலைத் திறந்து வெளியே குதித்தாள். கொரியன் புல்வெளி அவளை வரவேற்றது. காமினி சுற்றிலும் பார்த்தாள். இருட்டத் தொடங்கியிருந்தது. காம்பவுண்ட் சுவற்றைத் தாண்டி குச்சி குச்சியாய் சவுக்கு மரங்களும், யூகலிப்டஸ் மரங்களும் அணிவகுத்து நின்றன. அவற்றைத் தாண்டி எதுவும் தெரியவில்லை. கடலலைகளின் ஓசை மெல்லிதாய் கேட்டது. காம்பவுண்ட் சுவற்றையும் எளிதாக தாண்டினாள். வெளியில் ஹோண்டா சிட்டி நி்ன்றுக்கொண்டிருந்தது.
***

லவரமான முகத்துடன் அமர்ந்திருந்த இருவரையும் அளவில்லா எரிச்சலுடன் பார்த்துக்கொண்டிருந்தார் இன்ஸ்பெக்டர் கோகுல்நாத்.

“ஏன் சார். படிச்சவங்க தானே நீங்க? ஒன்னு ரெண்டு தப்பு பண்ணலாம். இப்படி வரிசையாவா பண்ணுவீங்க? உங்களுக்கு ஆராய்ச்சிக்கு பாடி தேவைப்பட்டா முறைப்படி பெர்மிஷன் வாங்கனும் சார். ரோட்ல கிடந்ததுன்னு எடுத்துட்டு வந்து யூஸ் பண்ணிருக்கீங்க. ஃபோட்டோ இல்லைன்றீங்க. இப்ப நாங்க என்ன சார் பண்றது. ப்ராபர் எவிடென்ஸ் இருக்கற கேஸெல்லாமே தண்ணி காட்டுது. இதுல இந்த இம்சை வேற. போனாப் போட்டும்ன்னு விடவேண்டியது தானே? இப்ப மட்டும் எதுக்கு எனக்கு இன்ஃபார்ம் பண்ணீங்க?”

“இல்ல சார். அது வந்து...”

“சொல்லித் தொலைங்க சார்”

“காமினி இப்ப ஒரு அரை ம்யூடண்ட் சார்”

“அப்படீன்னா”

”கம்ப்யூட்டர் சிப்பும், மூளையும் சேர்ந்து கண்ட்ரோல் செய்யும் மனித உருவிலிருக்கும் ஜந்து.”

“வாட்? ஜந்துவா?”

”ஆமாம் சார்.”

“காமினி வெளியிலிருப்பதால் என்ன மாதிரியான ப்ராப்ளம் வரும்?”

“இன்னும் உறுதியாய் தெரியவில்லை சார். If she becomes aggressive its very difficult control her."

”அதாவது பாதியிலேயே அத்துகிட்டு போயிட்டா. இந்தா மாதிரி ஆராய்ச்சியெல்லாம் பண்ணும்போது செக்யூரிட்டி டைட் பண்ண மாட்டீங்களா சார்? ஏதோ பாதி படத்திலேயே தியேட்டரவிட்டு எழுந்து போற மாதிரி போயிருக்கா.”

“இல்லை சார் நாளையிலிருந்து தான் அவள் எந்த மாதிரியெல்லாம் ரியாக்ட் செய்வாள், எப்படி கண்ட்ரோல் செய்யவேண்டும் என்ற டெஸ்ட்களை மேற்கொள்ளவிருந்தோம். அதுக்காக அவளை இன்றிறவு எலக்ட்ரானிக் செக்யூர்ட் ரூமுக்கு மாற்றுவதாய் இருந்தது. அதற்குள்..”

“ஹுக்கும். அவள் கோபமடைந்தால் கண்ட்ரோல் செய்வது கஷ்டம்னீங்களே? உங்களுக்கு எப்படி தெரிய வந்தது?”

“சார் என் ஆராய்ச்சியின் முழு மாதிரியையும் உங்களுக்குப் புரிய வைக்க முடியாது சார். சுருக்க சொன்னால் மனித உணர்வுகளை, நடவடிக்கைகளை கம்ப்யூட்டர் மூலம் கட்டுப்படுத்துவதுதான் என் ரிசர்ச்சின் நோக்கம். இந்த ஒரு மாத காலத்தில் காமினியின் மூளையோடு என்னுடைய கண்ட்ரோலர் சிப்பும் சரியாக synchronize ஆகிக்கொண்டிருந்தது. என்னுடைய அடுத்த முயற்சி, சிப்பின் ஆதிக்கத்தை அதிகப்படுத்தி மெல்ல மெல்ல மூளையின் கட்டுப்பாடுகள் அனைத்தையும் சிலிக்கான் நரம்புகளின் உதவியால் சிப்பிலேயே கொண்டு வருவது. அதற்குள் இப்படியாகிவிட்டது.”

“சரி அந்த சிப்பை டிடெக்டிங் டிவைஸ் எதனுடனாவது இணைத்திருக்கிறீர்களா? சம்திங்க் லைக் அ ஜிபிஆரெஸ்?”

“இன்னும் இல்லை. காமினியை இன்னும் தனியாக விடாததால் அது எனக்கு அநாவசியமாகப் பட்டது.”

“கடவுளே. ஏன் சார் இப்படி அரைகுறை வேலை பண்ணி என் தாலிய அறுக்கறீங்க? ஒரு கம்ப்ளெய்ண்ட் எழுதிக் கொடுங்க. முடிஞ்சத பார்க்கிறோம்.”
***

kamini escaped. she may find you. get out from there n go to hadows bungalow immediately. dont take ur cellphone. i'm on the way" டாக்டரிடம் வந்த குறுஞ்செய்தியைப் படித்த சிவா துணுக்குற்றான். ஒரு பொட்டச்சிக்கு பயந்து ஓடறதா என நினைத்துக்கொண்டே பிஸ்டலை எடுக்கவும் காலிங் பெல் அலறியது. வியூவரில் கண் வைத்துப் பார்த்தவன் காமினியைப் பார்த்து அதிர்ந்தான். பின்னர் சரேலென கதவைத் திறந்து காமினியை உள்ளிழுத்து “ஸாரி.. எனக்கு வேற வழி தெரியலை” என்று காமினியின் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்தான் சிவா. காமினியின் நீல நிறக் கண்கள் பிரகாசமாய் ஒளிர்ந்தது.
***

டேய்...நாலு நாளா நானும் பார்க்கிறேன். லாப்டாப்பிலிருந்து தலைய எடுக்க மாட்டேங்கற. இந்த ரெண்டு மணி நேரத்துல ஒரு பாக்கெட் சிகரெட் காலி பண்ணிருக்க. என்னடா பண்ற?” என்றான் கணேஷ்.

”இல்ல பாஸ். ஒரு சிறுகதை எழுதறேன்.”

“அடப்பாவி அந்தாளு போனதிலிருந்து ரொம்ப துளிர் விட்டுப் போச்சுடா உனக்கு. இப்ப எதுக்கு இந்த வேணாத வேலை. புஸ்தகம் எதுனாச்சும் போடப் போறியா?”

“ஒரே கதைலயா? போங்க பாஸ். ஒரு போட்டிக்காக எழுதிட்டிருக்கேன் பாஸ்.”

“போட்டியா? என்னடா புதுசு புதுசா என்னமோ சொல்ற”

“அதில்ல பாஸ். மூணு வாக்கியம் கொடுத்து அதே ஆர்டர்ல கதை எழுதனும்ன்னு போட்டி வச்சிருக்காங்க. சில கண்டிஷன்சும் இருக்கு. அதான் பாஸ் எழுதிட்டிருக்கேன்.”

“எந்திரி. என்னதான் எழுதிருக்கேன்னு பார்ப்போம்.”

எழுதியவரைப் படித்துவிட்டு “டேய் சத்தியமா சொல்லு. நீதான் எழுதினியா?”

“ஏன் பாஸ்? ஏன்? ஏன் உங்களுக்கு இந்த அவநம்பிக்கை?”

“இல்லடா காமினிங்கற கேரக்டர பத்தின டிஸ்க்ரிப்ஷன் எதுவுமே இல்லையே. பொண்ணுங்கள வர்ணிக்காத வசந்தா? அதான் கேட்டேன்.”

“போங்க பாஸ். நான் சயின்ஸ் பிக்‌ஷனுக்கு முயற்சி பண்ணிட்டிருக்கேன் பாஸ்”

“இங்கப் பார்றா. இது வேறயா? அது சரி. காமினிக்கும் சிவாவுக்கும் என்ன ரிலேஷண்டா?”

“அது வாசகர்களுக்குப் புரியும் பாஸ்”

“யாருக்கு?”

“ரீடர்ஸ்க்கு பாஸ்.”

“ஸ்ஸப்ப்பா. சரி காமினி எப்படிடா சிவாவ ட்ரேஸ் பண்றா?”

“அது வாசகர்களோட யூகத்துக்கு விட்ருக்கேன் பாஸ்.”

“கடவுளே........”

“பாஸ் எனக்கு ஒரு சின்ன ஹெல்ப் பண்ணுங்களேன்.”

“என்னடா?”

“காமினி... வெல்டன்.. எப்படியோ போலீஸ் கண்ல மண்ணைத் தூவிட்டு இந்த டைமண்டைக் கொண்டு வந்துட்டியே என்று பாராட்டினார் பரந்தாமன். இந்த வாக்கியம் வர்றாப்ல கதைக்கு நல்ல ஒரு எண்டிங் சொல்லுங்களேன்.”

”எண்டிங்”

“ஆமா பாஸ்’

“இந்தக் கதைக்கு.”

“ஆமா பாஸ்”

“சொல்றேன். பரிசு கிரிசு எதாவது உண்டா?”

“முதல் மூனு கதைக்கு ஆயிரம் ரூவா வொர்த் புஸ்தகங்களை பிரிச்சுக் கொடுப்பாங்களாம் பாஸ்.”

“பிரிச்சுன்னா? புக்லருந்து பேப்பர் கிழிச்சா?”

“என்ன பாஸ் சின்னபுள்ளையாட்டம் விளையாடறீங்க. எப்படியோ தருவாங்க பாஸ். முடிவு சொல்லுங்க பாஸ்”

“நாளைக்கு யோசிச்சு சொல்றேன். கோர்ட்டுக்கு கிளம்பு. இன்னிக்கு பரந்தாமன் கேஸ் ஹியரிங் வர்றது” கணேஷ் சொல்லிக்கொண்டிருக்கும்போதே காலிங் பெல் அலறியது.

வசந்த் சென்று கதவைத் திறந்தான். இளம்பெண் ஒருத்தி நின்றுகொண்டிருந்தாள்.

“வாவ். சாரி வாட் டூ யு வாண்ட் மிஸ்???”

“காமினி.. மிஸ் காமினி” சிரித்துக்கொண்டே சொன்ன காமினியின் நீல நிறக் கண்கள் ஒளிர்ந்தது.

October 1, 2010

சத்தியமா சொல்றேன்...

கண்டிப்பாக எந்திரன் பார்க்க வேண்டும். ரங்ஸின் ஆபிசில் வேலை செய்பவர்கள் அனைவருக்கும் டிக்கெட் இஷ்யூ பண்றாங்களாம். அடுத்த வாரம் பார்த்துவிடுவேன் என நினைக்கிறேன். எப்போ பார்த்தாலும் என் பார்வையில், அடிதட்டு/மேல்தட்டு/எவர்சில்வர் தட்டு மக்களின் பார்வையில், பின்/முன்/சைடு நவீனத்துவ பார்வையில், உள்குத்து/வெளிகுத்து/ஊமைகுத்து கண்டுபிடித்து, ஈயம்/இசம் சாயம் பூசி, குப்பை/சப்பை என பஞ்சடித்து, ஆல் அவுட் காப்பி (அதாங்க ஈயடிச்சான் காப்பி) என ஆராய்ச்சி பண்ணி விமர்சனப் பதிவெழுத மாட்டேன் என கூகிளாண்டவர் மேல் சத்தியம் செய்கிறேன்.
************

சமீபத்தில் மாஸ்டர் ஹெல்த் செக்கப்பிற்காக அப்பல்லோ சென்றிருந்தோம். எல்லா டெஸ்ட்டும் முடித்து கார்டியாலிஜிஸ்ட் கன்சல்டேஷன்க்காக சென்றபோது பெரிய அதிர்ச்சி ஏற்பட்டது. கார்டியாலிஜ்ஸ்ட் ஈசிஜி, CST ஆகிய ரிப்போர்டுகளைப் பார்க்கவில்லை. BP செக் செய்துவிட்டு போகலாம் என்றார். ரிப்போர்ட் பார்க்கவில்லையா என கேட்டதற்கு “Do u hav any complaints?" என்றார். இல்லையென்றதுக்கு அப்படின்னா ரிப்போர்ட் பார்க்கதேவையில்லை என்கிறார். எந்த சிம்ப்டம்ஸும் காட்டாமல் ஆரம்பநிலை பிரச்சனைகள் ஏதாவதிருந்தால்? Hardly 2 mins/patient. ஹூம்ம்ம்.
*************

அண்ணா நூற்றாண்டு நூலகம் சென்றிருந்தோம். பளிச்சென்றிருக்கிறது. தகவல் மையத்திலிருந்தவர் கேட்ட கேள்விக்கெல்லாம் பொறுமையாக பதிலளித்தார். ஜனவரி 2011லிருந்து நூலகம் முழுமையாக செயல்பட ஆரம்பிக்கும். 8 தளங்களில் மொத்தம் 12 லட்சம் புத்தகங்கள் இடம்பெறப்போகின்றன. குழந்தைகளுக்கென்றே ஒரு தளம் முழுவதும் புத்தகங்களும் சிடிக்களும் இருக்கின்றன. குழந்தைகளுக்கான உறுப்பினர் விவரங்கள் நவம்பர் மாதம் அறிவிக்கப்படும். பின்னர் மருத்துவ துறை சம்பந்தப்பட்ட புத்தகங்கள் தயாராகும். ஒவ்வொரு புத்தகத்தின் விவரத்தையும் கம்ப்யூட்டரில் சேர்த்து தயார்படுத்த அரைமணிநேரம் பிடிக்கிறதாம். வெயிட்டிங் ஃபார் ஜனவரி 2011.
***************

ஜூனியரின் ஹேர்கட்டிற்காக பார்லர் சென்றிருந்தேன். ஐந்து நிமிடம் வெயிட் பண்ண சொன்னார்கள். பக்கத்தில் ஒரு ஆள் செவிட்டு மெஷின் மாட்டிக்கொண்டு அலப்பறை பண்ணிக்கொண்டிருந்தார்.

“Yes babe. No probs. I'll arrange it."

"Wat the f***"

"My goodness."

"Holy s***" என வாயைத் தொறந்தாலே பீட்டர் மழை பொழிஞ்சிட்டிருந்தது. முன்னமெல்லாம் பொண்ணுங்க தான் இப்படி சீன் போடுவாங்க. இப்ப பசங்களும் ஆரம்பிச்சிட்டாங்களான்னு நெனச்சிக்கிட்டிருக்கும்போதே பார்லர் இன்சார்ஜ் வந்து “How can i help u sir?" அப்படின்னார். இதுவும் ரொம்ப பந்தாவா “Well need to hair spa. Think i've dandruff. Can i have ur menu card" அப்படின்னுது. என்னால சிரிப்ப கண்ட்ரோல் பண்ண முடியல. அந்த இன்சார்ஜ் கஷ்டப்பட்டு சிரிப்ப அடக்கிக்கிட்டு “Yes sir. I'll get u the service card" அப்படின்னார். சலூன்ல வந்து மெனு கார்ட் கேட்ட ஒரே ஆளு நீயாதாண்டா இருப்பன்னு நினைச்சுகிட்டு வந்த வேலையப் பார்க்க போனேன்.
*****************

Astra
Calypso
Valentino
Sunshine
Brimstone

மேலிருப்பவை எல்லாம் உலகப் படங்களின் பேரா எனக் கேட்காதீங்க. Fruit Shop on Greams Road ஜூஸ் கடையில் கிடைக்கும் ஜூஸ்களின் பெயர்கள். அட்டகாசமான ப்ளேவர்களில் ஜூஸ் குடிக்க இங்கு போகலாம். கொஞ்சம் காஸ்ட்லி. இருந்தும் டேஸ்ட் இஸ் குட். ஜூஸ் ஆர்டர் கொடுக்கும்போதே பாதி சர்க்கரை சேர்க்கச் சொல்லுவது உத்தமம். ரெகுலர் டோஸ் சுகர் ஓவர் தித்திப்பாக எனக்குத் தெரிகிறது. ஜூஸோடு மில்க் ஷேக்கும் டெஸர்ட்ஸும் கிடைக்கும். Date Milk shake, Tender coconut pudding, caramel custard எல்லாம் கட்டாயம் ட்ரை செய்யவேண்டியவை.
***************

பதிவுலக நண்பர்களுக்கு வரும் திங்கள் முதல் (அக்டோபர் 4) ஒரு வாரத்திற்கு வலைச்சரம் ஆசிரியர் பொறுப்பினை ஏற்கவுள்ளேன். இத்தளத்தில் அளித்து வரும் ஆதரவைப் போல் வரும் வாரம் வலைச்சரத்திலும் தொடர்ந்து ஊக்கம் அளிப்பீர்கள் என்ற நம்பிக்கையில் அடுத்த வாரத்தினை எதிர்கொள்ள ஆவலாய் இருக்கிறேன்.