November 26, 2010

டாக்டர் கேப்டன் வால்க வால்க

நீண்ட நாட்களாக ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தது நடந்தேறிவிட்டது. குருவியே டாக்டர் பட்டம் வாங்கும்போது அது பறக்கும் (அல்லது பறப்பதாக நம்பப்படும்) விண்ணையே ஆளும் எங்கள் விண்ணரசுக்கு டாக்டர் பட்டம் தாமதமாய்த் தான் தரப்பட்டிருக்குறது. Better late than never என்று மனசை தேற்றிக்கொண்டு விலா எடுக்க ஏற்பாடுகள் மும்முரமாய் நடந்துக்கொண்டிருக்கின்றது. ஜிப் வெச்ச ஷூ போடும் ஜூப்பர்மேன், டார்ச் வெச்ச தொப்பி போடும் தமில்தலைவன், விருத்தகிரி தரப்போகும் வித்தகன், கரண்டுக்கே ஷாக் கொடுக்கும் ட்ரான்ஸ்பார்மர், புல்லட்டையே புஸ்வாணமாக்கும் பூகம்பம் டாக்டர் கேப்டன் வால்க வால்க..

************

கேப்டனா நடிச்சேன் கேப்டன் பட்டம் கொடுத்தீங்க. டாக்டரா நடிச்சேன். டாக்டர் பட்டம் கொடுத்தீங்க. அடுத்தது முதலமைச்சரா நடிக்கப் போறேன். பார்த்து பண்ணுங்க சாமீங்களா

ஃபோர் பீசஸ். நாட் இனஃப்..Sing in the rain..

கேப்டன் : நீ வேணா பாரேன். எதிர்காலத்துல இந்தக் குழந்தைங்க எதுக்குமே பயப்படாத மாவீரர்களாக வருவாங்க.

அண்ணி : எதை வெச்சு சொல்றீங்க?

கேப்டன் : என்னை இவ்ளோ கிட்டத்துலப் பார்த்தும் அழுகாம தைரியமா இருக்குதுங்களே. அதான்.

ஏய் இந்தாப்பா போட்டோகிராஃபர். என்னை மட்டும் எடு. கீழே உடைஞ்சிகிடக்கும் மெஷினையெல்லாம் எடுக்காதே.

அடுத்த படத்துல நான் BMஆ (PM) நடிக்கிறேன். கதை என்னான்னா, இந்தியாவின் தலைசிறந்த MNC கம்பெனில ஸ்டாஃபுகளா ஊடுருவி இந்தியாவை அழிக்கிற சாஃப்ட்வேர் ஒன்ன இன்ஸ்டால் பண்ற பாகிஸ்தான் தீவிரவாதிய ஒழிக்கிறேன். இந்தியால மொத்தம் முந்நூத்தி சொச்சம் சாஃப்ட்வேர் கம்பெனி இருக்கு....

ஏன்ப்பா இன்னும் கொஞ்சம் பெரிய விசிறி வாங்கிட்டு வந்திருக்கக்கூடாதா? பாரு எங்க ரெண்டு பேருக்கும் காத்தே போத மாட்டேங்குது.

யார்றா அது என்ன கிண்டல் பண்றது? என்கவுண்டர் பண்ணிடுவேன் ஜாக்கிரத.


டிஸ்கி : இது முழுக்க முழுக்க நகைச்சுவைக்காகவே எழுதப்பட்ட பதிவு.

November 23, 2010

Harry Potter and the Deathly Hallows - Part I

டம்பிள்டோரின்(Dumbledore) மறைவைத் தொடர்ந்து ஹாரி பாட்டரும் அவன் நண்பர்களும் வால்டிமோர்ட்டை(Voldemort) அழிக்க புறப்பட்டிருக்கும் கதையின் முதல் பாகம். டெத் ஈட்டர்ஸின் (Death Eaters) ஆதிக்கம் அதிகரிப்பதைத் தொடர்ந்து ஹாரியை பாதுகாப்பான இடத்திற்கு மாற்ற முடிவு செய்கிறார்கள். மேட் ஐ (Mad Eye) தலைமையில் சிலரை ஹாரி போலவே மாற்றி அனைவரும் ஒன்றாக பயணிக்கிறார்கள். உண்மையான ஹாரி யார் எனத் தெரியாமல் டெத் ஈட்டர்ஸ் குழம்புவதைக் கொண்டு ஹாரி தப்பிக்கிறான். இந்தப் போராட்டத்தில் மேட் ஐ இறந்துவிட்டதாக சொல்லப்படுகிறது.

பாதுகாப்பாக இருக்கும் இடத்தில் மேஜிக் மினிஸ்ட்ரியிலிருந்து வருபவர் டம்பிள்டோர் ஹாரி, ரான் மற்றும் ஹெர்மாயினிக்காக சில பொருட்களை விட்டுச் சென்றுள்ளதாக குறிப்பிட்டு அவற்றை அவர்களிடம் ஒப்படைக்கிறார். வால்டிமார்ட்டை அழிக்க மீதமிருக்கும் Horcruxes (ஏற்கனவே இரண்டு அழிக்கப்பட்டுவிட்டன. ஒன்று டாம் ரிட்டிலின் டைரி. மற்றொன்று வால்டிமார்ட்டின் முன்னோரின் மோதிரம்) அழிக்கப்படவேண்டுமென்பதால் மூவரும் அவற்றைத் தேடி பயணிக்க முடிவு செய்கின்றனர். மீண்டும் டெத் ஈட்டர்ஸின் தாக்குதலில் இருந்து தப்பி மூவரும் நகரத்திற்கு வருகின்றனர். வந்த இடத்தில் உண்மையான ஸ்லிதரின் லாக்கெட் யார் வசமிருக்கிறது என்பதை அறிந்து கொள்கின்றனர். இதில் டாபி (Dobby - the elf) ஹாரிக்கு உதவுகின்றது. இதற்கிடையில் மினிஸ்ட்ரியில் பல மாற்றங்கள் நிகழ்கின்றன. வால்டிமார்ட்டின் கை ஓங்குகிறது.

பாலி ஜூஸின் உதவியால் மூவரும் மினிஸ்ட்ரி ஸ்டாஃப்களை போல் உருமாறி ஸ்லிதரின் லாக்கெட்டை கவர்ந்துகொண்டு தப்பிக்கின்றனர். அந்த லாக்கெட்டினால் ரானுக்கும் ஹாரி பாட்டருக்கும் சண்டை வருகிறது. ரான் கோபித்துக்கொண்டு சென்றுவிட லாக்கெட்டை அழிப்பதற்கு தேவையான க்ரிஃப்பிண்டோர் வாளைத் தேடி ஹெர்மாயினியும் ஹாரியும் பயணிக்கிறார்கள். ஹாரி வாளைக் கண்டெடுக்கும் வேளையில் ரானும் வந்து சேர்ந்துக்கொள்ள ஸ்லிதரின் லாக்கெட்டை அழிக்கிறார்கள். மீதமிருக்கும் horcruxesன் இருப்பிடம் தெரியாத வேளையில் டம்பிள்டோரின் நண்பன் என தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ளும் லவ்குட்டின் (Lovegood)மூலம் டெத்லி ஹாலோஸ் (Deathly Hallows) என்ற புனிதப் பொருட்களைப் பற்றி தெரிந்துகொள்கிறார்கள். அங்கேயும் டெத் ஈட்டர்ஸ் இவர்களை துரத்துவதால் அங்கிருந்து தப்பிக்கும்போது ஸ்னாட்ட்சர்ஸிடம் (Snatchers)மாட்டிக்கொள்கிறார்கள். வால்டிமார்ட்டின் சப்போர்டர்களான மெக்ஃபாய் அண்ட் கோவிடம் இருந்து தப்பிக்க டாபி உதவுகிறது. அந்தப் போராட்டத்தில் டாபி இறந்துவிடுகிறது. டெத்லி ஹாலோஸில் ஒன்றான elder wand டம்பிள்டோர் வசமிருப்பதை அறிந்துக்கொள்ளும் வால்டிமார்ட் டம்பிள்டோரின் கல்லறையை உடைத்து அதைக் கவர்கிறான்.

ஹாரி மற்ற horcruxesகுளை கண்டுபிடித்தானா? வால்டிமோர்ட்டை அழித்தானா என்பது இரண்டாம் பாகத்தில் வருமென நினைக்கிறேன். நான் ஹாரி பாட்டர் நாவல்களைப் படித்ததில்லை. ஆனால் எல்லாப் படங்களையும் பார்த்திருக்கிறேன். அந்த வகையில் இந்தப் படத்தில் நகாசு வேலை கம்மிதானென்றாலும் விறுவிறுப்பும் நகைச்சுவையுமாக செல்கிறது படம். ரான் வீஸ்லி பேசும் டயலாக்குள் சிரிப்பை வரவழைக்கின்றன. குறிப்பாக மினிஸ்ட்ரியில் உருமாறி நுழையும்போதும், அங்கிருந்து கிளம்பும்போதும், ஹெர்மாயினியின் கோபத்தை போக்க முயலும்போதும் நல்ல நகைச்சுவை. ஹாரி - மந்திரவாதிகளுக்கு ஏன் வயசாகிறது? சிறு வயது ஹாரியே பார்க்க நன்றாக இருக்கிறான் (கழுதக் கூட குட்டில நல்லாயிருக்கும்??!!!). தனக்காக பிறர் உயிர்விடுவதை நினைத்து வருந்தும் காட்சிகள் நன்றாக இருக்கின்றன. எம்மா வாட்சனின் அழகு படத்திற்குப் படம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. ஹாரியை விட்டுப் போக முடியாமல், ரானையும் தடுக்க முடியாமல் அவஸ்தை படும் காட்சிகள் அருமை.

சத்யம் தியேட்டரில் சென்ற சனிக்கிழமை சென்றிருந்தோம். வந்திருந்த மொத்தக் கூட்டத்தில் முக்கால்வாசி பீட்டர் பாண்டி கூட்டமாகத்தான் இருந்தது. அதுவும் எனக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருந்த இரு பெண்கள் டூ மச். என்னவோ ஹாரியைப் பார்த்ததும் ஜென்ம சாபல்யம் அடைந்ததைப் போன்ற பில்டப். குலவை போட்டு தீ மிதிக்காதது ஒன்றுதான் குறை. வில்லன் வர்றான் ஓடு ஒடு என்ற அம்மாக்கள் எம்ஜிஆர் படம் பார்த்து உணர்ச்சிவசப்படுவதுபோல் கத்திக்கொண்டிருந்தார்கள்.

“Oh my god those f***ing snatchers r going to get them"

"Oh Dobby is going to die. Faster. faster" என படம் முழுவதும் அரற்றிக்கொண்டிருந்தார்கள். ஒரு கட்டத்தில் பொறுக்க மாட்டாமல் கொஞ்சம் கதை சொல்லாம சும்மாருக்கீங்களா என்றேன். அதற்கு “Sorry. we got excited u know" என்றதுகள். ஹுக்க்கும்.

வீட்டுக்கு வந்ததும் அப்பா கால் செய்தார்.

“என்ன படம்?”

“ஹாரி பாட்டர்ப்பா”

“ஹூம். வெள்ளைக்காரன் நல்லா காதுக் குத்தி வுட்ருப்பான். வாயப் பொளந்து பார்த்திருப்பீங்களே. என்ன கதை?”

சொன்னேன். உடனே “அட நம்ம அம்புலி மாமா ஸ்டைல் கதை. ஏழு கடல் தாண்டி ஏழு மலை தாண்டி, ஏழு பொருட்கள் இருக்கிற மந்திரவாதியோட உயிரை அழிக்கறது. இதுவே நம்மாளுங்க எடுத்தா கிண்டல் பண்ணுவீங்க. வெள்ளைக்காரன் சொன்னா என்னா க்ராபிக்ஸ்ப் பாருன்னு பாராட்டுவீங்க.”

“அப்படி இல்லப்பா. நம்மூர்ல க்ராபிக்ஸ்ங்கற பேர்ல கொல்லுவாங்கப்பா. இங்க வில்லன் தேளா/பாம்பா மாறவோ, ஆயிரக்கணக்குல சூலம் வரவோ, வில்லனோட மூக்கோ நாக்கோ பெருசாவறதுக்கோதான்பா க்ராபிக்ஸ் யூஸ் பண்றாங்க.”

“அங்க மூக்கே இல்லாத வில்லன க்ராபிக்ஸ்ல காட்றாங்க. எல்லாம் ஒரே குட்டைல ஊறின மட்டைங்கதான். சரி குழந்தை என்ன பண்றான்? பத்திரமா பார்த்துக்கோ.”

டொக்.

ஙே!!!

November 19, 2010

பயணத் தேவைகளுக்கு...

தரை மற்றும் ஆகாய வழிப் பயணங்களை அடிக்கடி மேற்கொள்பவர்களுக்கு சிறப்பான வாய்ப்பு. நீங்கள் விரும்பும் மாடல் கார்/ஜீப்/பைக்குகள் குறைந்த விலைக்கு வாடகைக்குத் தரப்படும். பெட்ரோல் செலவில்லை. ட்ரைவருக்கு சம்பளம் தரத்தேவையில்லை. அதிவேகமான அதே சமயம் மிகப் பாதுகாப்பான பயணம் மேற்கொள்ளலாம்.

கார்கள் மட்டுமில்லாமல், தங்களுடைய பொருட்களை மிகக் குறைந்த செலவில் எங்கிருந்து எங்கு வேணுமானாலும் அனுப்பலாம். கண்டெய்னர் லாரிகள், ட்ரக்குகள், ஜேசிபி இயந்திரங்களும் கிடைக்கும்.

ஆடம்பரத்தை விரும்புவர்களுக்கு ஜெட் விமானங்கள் மற்றும் ஹெலிக்காப்டர்களும் கிடைக்கும். மேலே சொன்னது போல பைலட்டுக்கு சம்பளம் தேவையில்லை.


























வாகனங்களின் அணிவகுப்பு உங்கள் பார்வைக்கு....




ஒன்னு ரெண்டு வாங்கலாம். வாரத்திற்கு மூனு நாலு வாங்கறான். ஐ மீன் அப்பாவோ/மாமாவோ வாங்கிக் கொடுத்திடறாங்க. வீடு முழுக்க இறைஞ்சி கிடக்கு. இவன தூங்க வச்சிட்டு இதெல்லாத்தையும் ஒழுங்குப்படுத்தி வைக்கவே ஒரு மணிநேரம் பிடிக்குது:(

எந்திரிக்கும்போதே பஸ்ஸு, ஆட்டோ, லாரி, ரெட் கலர் காரு எல்லாம் வாங்கித் தர்றீயா என்ற கண்டிஷனோடு தான் பல் தேய்க்கும் வைபவம் ஆரம்பிக்கும்.

காலையில வேன் ஏறினவுடனே டாட்டா காமிச்சிட்டு, ஃப்ளையிங் கிஸ் கொடுத்திட்டு சார் சொல்றது “அம்மா ரெட் கலர் ஸ்கூட்டர்ல வந்திடு”. ஸ்கூட்டர்ல வந்திடு மட்டும் அப்படியே இருக்கும். டெய்லி ஒரு கலர். அதே மாதிரி கருப்பு கலர் பல்ஸர எங்கப் பார்த்தாலும் “அம்மா அவா தினேஷ் மாமா வண்டிய எடுத்துட்டு போறாங்க. தர சொல்லு” என அழுகை ஆரம்பித்துவிடும். பஸ்ஸையோ காரையோ எடுத்து வைத்துக்கொண்டு ”அம்மா நீ என் பக்கத்துல உக்காச்சிக்கோ. அப்பா டிக்கெட் வாங்கு” என விளையாட ஆரம்பித்துவிடுவான்.

மாமன மாதிரியே மெக்கானிக்கல் எஞ்சினியரா வருவானோ?

இன்னும் நிறைய தூரமிருக்கு. இப்பதான வண்டில ஏறியிருக்கான்:)

November 15, 2010

மைனா

படிப்பு வராததால் இளம்வயதிலே வேலைக்குப் போகும் நாயகன், ஆதரவு இல்லாமல் நடுத்தெருவில் நிற்கும் நாயகியின் தாய்க்கும், நாயகிக்கும் ஆதரவளிக்கிறார். சிறு வயது முதலே ஒருவர் மீது ஒருவர் மிக அன்பாக இருக்கின்றனர். நாயகியின் அம்மா நாயகிக்கு வேறிடத்தில் மாப்பிள்ளை பார்ப்பதால் ஆத்திரமாகும் நாயகன், அவளை அடித்துவிடுகிறார். அதனால 15 நாள் ரிமாண்டில் வைக்கப்படுகிறார். இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி நாயகிக்கு வேறிடத்தில் மணமுடித்து வைக்க முயல, சேதி அறிந்த நாயகன் தப்புகிறார். மறுபடியும் போலீஸ் இவரை கைது செய்து சிறைக்கு அழைத்துச் செல்ல முயலும்போது நடக்கும் சம்பவங்களே கதை.

படத்தின் மிகப் பெரிய பலம் காமிரா. மலையும் காடும் சூழ்ந்த கிராமத்தில் கதை நடப்பதாக காட்டுகிறார்கள். ஒவ்வொரு முறை அடர்ப்பச்சை/நீல நிறத்தில் மலை தெரியும்போதெல்லாம் நமக்கு குளிரெடுக்கிறது. க்ளீன் & நீட். இன்னொரு ஹீரோ தம்பி ராமையா. இறுக்கமான திரைக்கதையை இயல்பான இவரின் நகைச்சுவை அழகாய்த் தாங்கிப்பிடிக்கின்றது. “ங்கொப்பத்தா” என அனைவரையும் வார்த்தையால் கடிக்கும்போதாகட்டும், விதார்த்தின் கையோடு சேர்த்து விலங்கிட்டு இழுத்துக்கொண்டு அலைவதாகட்டும் வெடித்துச் சிரிக்க வைக்கிறார். “மாமோய் நீ எங்க இருக்கீங்க” என செல்போன் கேரக்டராக வரும் மனைவியோடு பேசும்போது அவர் காட்டும் எக்ஸ்பிரஷன்கள் அருமை.

காதலைக் காப்பாற்ற போராடும் கிராமத்து இளைஞனாக விதார்த். ஒக்கே ரகம். அமலா பால் - மிரட்டும் கண்கள். வாய் பேசவேண்டியதைக் கண்களே பேசிவிடுகின்றன. லவ்லி. ஜெயிலராக வரும் சேது. பண்டிகை அதுவுமாய் அக்யூஸ்ட்டைத் தேடி அலையும் போலீஸாகவே வாழ்ந்திருக்கிறார். இவர் மனைவி கேரக்டர் மிரட்டல். “தலை தீபாவளிக்குப் போறோமா இல்லையா?” எனும்போது அவர் வாய்ஸ் செம்மையாக இருக்கிறது. விதார்த்தின் அப்பா காரெக்டர், வாத்தியார், ரியல் எஸ்டேட் ப்ரோக்கர், என அனைவரும் கவனிக்கும்படி செய்திருக்கிறார்கள். இசை இமானாம். நம்பமுடியவில்லை. அனைத்துப் பாடல்களும் நன்றாக இருக்கின்றன. அதிலும் “கையப் பிடி கண்ணப் பாரு பாடல்” இப்போ என் ஃபேவரைட். பிண்ணனி இசை சுமார் ரகம் தான்.

பாடல்களில் பருத்தி வீரன் இமிட்டேஷனும், “சுருளிக்கும் மைனாக்கும் இடையில என்ன இருக்கு” என்பது போன்ற மொக்கை சீன்களிலும் கடுப்பாகிறது. அதை விட சைக்கிளோட்டி படிக்க வைப்பது, மின்மினிப் பூச்சிக் கொண்டுவருவது போன்ற சீன்கள் மகா திராபை. நேட்டிவிட்டி படமென்றாலே அண்ட்ராயர் தெரிய லுங்கி கட்ட வேண்டும் என விதி உருவாகிவிட்டது போல. அதே போல் அமலா பாலின் அம்மாவாக நடித்திருப்பவர் நன்றாக செய்திருந்தாலும், உச்சஸ்தாயில் கீச் கீச்சென கத்தும்போது காது கிழிகிறது:(

பழைய கதைதான் என்றாலும், திரைக்கதையில் பயணத்தைக் கொண்டு வந்து, சில திருப்புமுனைகளோடு, துருத்திக்கொண்டு தெரியாத நகைச்சுவையோடு படத்தைக் கொடுத்ததற்காக பிரபு சாலமனை பாராட்டலாம்.

November 12, 2010

ஸ்வீட் எடு கொண்டாடு

அடிப்படை சுவைகளில் ஒன்றான இனிப்பை விரும்பாதவர்கள் யாரும் இருக்க முடியாது. மகிழ்ச்சியை வெளிப்படுத்த ஸ்வீட் கொடுப்பது வழக்கமாக இருக்கிறது. பாயாசம் ஆரம்பித்து பை (pie) வரை எத்தனை வகை. எண்ணிலடங்கா சுவை. எனக்கும் ஒரு காலத்தில் ஸ்வீட் ரொம்பப் பிடிக்கும். இப்போது ஸ்வீட் உண்பதைக் குறைத்துக்கொண்டேன். நான் உண்டவரை வித்யாசமான சுவைக் கொண்ட, குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே கிடைக்கிற, ஸ்பெஷாலிட்டி வகை ஸ்வீட்களைப் பற்றிய குறிப்புகளே இந்தப் பதிவு.

மக்கன் பேடா

குலோப் ஜாமூனின் ரிச் வெர்ஷன். வேலூர் மாவட்டம் ஆற்காட்டில் பிரியாணிக்கப்புறம் ஃபேமஸான ஐட்டம். கொஞ்சமே கொஞ்சம் புளிப்போடு (மாவில் தயிர் சேர்க்கிறார்களாம்) ஜீராவில் ஊறியிருக்கும் பேடாவைக் கடித்துக்கொண்டே வரும்போது நடுவில் மாட்டும் முந்திரி மற்றும் பூசணி, வெள்ளரி விதைகள் அவ்வளவு ருசியாக இருக்கும். அம்மா பிரியாணிக் கடையில் குஷ்கா சாப்பிட்டுவிட்டு நேராக சேர்மன் ஸ்வீட்ஸ் போய் மக்கன் பேடா சாப்பிடுவது சொர்க்கம்:) நிறைய கடைகளில் விற்கப்பட்டாலும் சேர்மன் ஸ்வீட்ஸில் நன்றாக இருக்கும். ஷெல்ஃப் லைஃப் ரொம்பக் கம்மி. ஃப்ரிட்ஜில் வைத்தால் ரெண்டு நாட்கள் தாங்கும்.
புகைப்படம் நன்றி http://tastyappetite.blogspot.com/2010/08/makkan-peda-arcot-sweet.html

ட்ரை ஃப்ரூட் அல்வா

இதுவும் வேலூர் ஸ்பெஷல் தான். கோட்டைக்கு எதிரே இருந்த (இப்போதில்லையென நினைக்கிறேன்) ஆக்ரா ஸ்வீட்ஸில் கிடைக்கும் ஐட்டம் இது. ட்ரை ஃப்ரூட் அல்வா. மற்ற இடங்களில் கிடைக்கும் ட்ரை ஃப்ரூட் அல்வாக்கள் போல் இறுகியில்லாமல், வாயில் போட்டால் வழுக்கிக் கொண்டு போகும் சுவை. முந்திரி, திராட்சை, கிஸ்மிஸ், டூட்டி ஃப்ரூட்டி போன்றவையோடு கொஞ்சம் கேரட், கோவா சேர்த்து செய்யப்படும் அல்வா இது. என் அக்காவின் ஃபேவரைட்.

காஜூ டாஃபி

பாண்டிச்சேரியில் நேரு வீதியில் உள்ள லல்லு குல்ஃபி கடையில் கிடைக்கும் முந்திரி கேக். சாக்லேட் போன்று சிறு சிறு துண்டுகளாக பட்டர் பேப்பரில் சுற்றி வைத்திருப்பார்கள். கொஞ்சம் நொரநொரவென சர்க்கரையும் முந்திரியும் தனித்து தெரியும் வித்யாசமான இனிப்பு.

ஆக்ரா பேடா

காலேஜ் டூரிற்காக ஆக்ரா சென்றபோதுதான் முதன்முதலில் சுவைத்தேன். Fell in love with its taste:) பூசணியையும் சர்க்கரையும் கொண்டு செய்யப்படும் இனிப்பு. சென்னையில் கங்கோத்ரியிலும், பாண்டியில் மித்தாய் மந்திரிலும் மட்டுமே கிடைக்கிறது (எனக்குத் தெரிந்து).

மால்புவா

ராஜஸ்தான் ஸ்பெஷல் இனிப்பு இது. கிட்டத்தட்ட குலோப் ஜாமூன் டேஸ்ட் தானென்றாலும் தட்டையாக, அதிகம் ஜீராயில்லாமல் இருக்கும். சூடாக சாப்பிடும்போது தேவாம்ரிதமாக இருக்கும். சென்னையில் அண்ணா நகர் ஸ்ரீ ராஜஸ்தானி தாபாவில் கிடைக்கும்.

ரப்டி

பாஸந்தி, கீர், பால் பாயாசம் எல்லாவற்றையும் சேர்த்து உருவாக்கினது போலொரு சுவை. கெட்டியாக பிஸ்தா சீவி போட்ட ரப்டி டக்கராக இருக்கும். சென்னையில் வேளச்சேரி கெபாப் கோர்ட்டில் கிடைக்கிறது

காஜா

பட்டனுக்குத் தைக்கறதில்லீங்க. ஆந்திரா ஸ்பெஷல் ஸ்வீட். பாதுஷா மாதிரியே இருக்கும். ஆனால் உள்ளே ஸ்டஃப் செய்யப்பட்டிருக்கும் ஜீராதான் அல்டிமேட். அதோடு பொடித்த சர்க்கரையில் புரட்டி எடுக்கப்பட்டிருக்கும். என் அண்ணாவின் மாமனார் ஊரிலிருந்து (காக்கிநாடா) வரும்போதெல்லாம் வாங்கிவருவார். கண்டிப்பாக ஒன்றிரண்டாவது ரிசர்வ் பண்ணி வைப்பார் அண்ணா:)

புத்ரேக்கலு

முதன்முதலில் இந்த ஸ்வீட்டை நீட்டிக்கொண்டே பேர் சொன்னபோது ஏங்க ஸ்வீட் கொடுக்கும்போது திட்றீங்க என ஆஃபிஸ் கொலீக்கை கலாய்த்திருக்கிறோம். ஆனால் சுவை அற்புதமாக இருக்கும். இதை எப்படி இவ்வளவு பொறுமையாக செய்கிறார்கள் என்ற ஆச்சர்யம் ஒவ்வொரு முறை சாப்பிடும்போதும் ஏற்படும். அவ்வளவு மெல்லிய பேப்பர் போலிருக்கும் லேயர்கள் வாயில் போட்டவுடனே கரையும்.


யாழ்ப்பாணம் கொழுக்கட்டை

தமிழினி இனிப்பகம் என்ற கடைகளிக் கிடைக்கும். கேழ்வரகில் செய்யப்பட்ட மேல்மாவும், அதிகம் இனிப்பில்லாத தேங்காய் மற்றும் பயத்தம்பருப்பு பூரணமும் நல்ல காம்பினேஷன். அதுவும் இளஞ்சூட்டில் சாப்பிடும்போது அட்டகாசமாக இருக்கிறது. ஒரு பீஸ் எட்டு ரூபாய்க்கு கிடைக்கிறது.

ஆப்பிள் ரசகுல்லா

அடையார் ஆனந்த பவனில் கிடைக்கும் பெங்காலி வகை இனிப்பு. சொட்டச் சொட்ட ஜீராவுடன் அவ்வளவு சாஃப்டாக இருக்கும். ப்ரிட்ஜில் வைத்துச் சாப்பிடும்போது சுவை இன்னும் இருமடங்காக இருக்கும்.

டிஸ்கி : இனிப்புகளை அளவாக உண்பது உடல்நலத்திற்கு நன்மை பயக்கும்;))

November 1, 2010

தித்தி(க்கும்)த்த தீபாவளி

அதோ இதோ என வந்துவிட்டது இந்த வருட தீபாவளி. டமால் டூமிலென எதிர்பாராத தருணங்களில் வெடிக்(கப்படு)கும் வெடிகளே சாட்சி. ஜூனியரின் இரண்டு மணி நேர தூக்கத்திற்கு ஒரு மணி நேரம் மெனக்கெடும் கஷ்டத்தை ஒரு நொடியில் வேட்டு வைத்துவிடுகிறார்கள்:( சார் இப்போது ஒரு துப்பாக்கியில் கேப் போட்டு என் கைபிடித்து வெடித்துக்கொண்டிருக்கிறார்.

வயது ஏற ஏற பண்டிகைகளின் மீதான ஆர்வம் குறைவதுபோல் ஒரு மாயை ஏற்படுகிறது. சிறுவயது நினைவுகளெல்லாம் பசுமையாய் கண்முன். வீட்டில் புதுத்துணி எடுப்பது வருடத்திற்கு மூன்று முறை தான். பெற்றோர் திருமண நாள், தீபாவளி, பிறந்த நாள். பொங்கலுக்கு வீட்டுப்பொண்ணுக்கு என பெரியம்மாவிடமிருந்து வந்துவிடும்:)

Atleast ஒரு மாதத்திற்கு முன்னமே ஏற்பாடுகள் தொடங்கிவிடும். டிரெஸ் எடுத்து தைக்க கொடுக்கனும். அம்மா என்ன பலகாரம் என்பதை ஒரு வாரத்திற்கு முன்னர் தான் பைனலைஸ் பண்ணுவார். எல்லா தீபாவளிக்கும் ரவா லட்டு, தேங்காய் பர்பி, வெண்ணைய் முறுக்கு, தட்டை. மெஷினில் பலகாரத்திற்கு தேவையான மாவரைக்கும் போதே எச்சிலூற ஆரம்பித்துவிடும். அதுவும் ரவா லட்டு மாவை அப்படியே திங்கும்போது ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம். ஒரு நாள் முறுக்கு மற்றும் தட்டை, ஒரு நாள் ரவா லட்டு, ஒரு நாள் தேங்காய் பர்பி என பிளான் பண்ணி முடித்துவிடுவார் அம்மா. மெஷினுக்கு போய்வருவதோடு சரி. மற்றபடி பலகாரம் திங்கிற வேலை மட்டும் தான்.

ஒரு வாரத்துக்கு முன்னர் அப்பா கொஞ்சமாய் பட்டாசு வாங்கி தருவார். முன்னோட்டத்திற்கு. அதிலிருக்கும் கேப்பை மட்டுமே வெடிப்போம். மத்ததெல்லாம் தீபாவளியன்று கரியாக்க சேமித்துவைக்கப்படும். எனக்கு நினைவு தெரிந்து மூன்று தீபாவளிக்கு ஊருக்கு போயிருக்கிறேன். தீபாவளிக்கு ஒரு வாரம் முன்பு தாத்தா இறந்துவிட்டார். பண்டிகை கிடையாது. "சே. தாத்தா ஒரு வாரம் கழிச்சு செத்துப்போயிருக்கக்கூடாதா?" என இழப்பின் வலிதெரியாத பருவத்தில் சலித்துக்கொண்டோம். வெடிக்காத வெடிகளிலிருந்து மருந்தினை பிரித்துக்கொட்டி, கரும்புச்சக்கை போட்டு எரித்தபோது ஏற்பட்ட விபத்தில் ஊர்பையனின் காலில் பலத்த தீக்காயம். இன்னும் அவன் காலின் கருகிய தோலைப் பார்க்கும்போது அந்த சம்பவமே நினைவுக்கு வரும்.

என் பொன்னான தீபாவளி தருணங்கள் வாலாஜாவில் இருக்கும்போது தான். சரியான செட். நண்பர்களும் வீட்டுக்கு வந்துவிடுவார்கள். குளிச்சுட்டு ஊதுபத்தியோடு வெளியே வந்தால் தொடர்ந்து நான்கைந்து மணிநேரங்கள் வெடி போட்டுக்கொண்டேயிருப்போம். அதுவும் எல்லாரையும் கலங்கடிக்கும் விதமாக. கொட்டாங்க்குச்சியின் கண்களில் லக்ஷ்மி வெடி வைத்து சிதறடிப்பது, பிளாட்பார்ம் பொந்துகளை தகர்ப்பது, காய்ந்த சாணி உருண்டைகளில் வைப்பது, மரப்பொந்து என அநியாயத்துக்கு வெடிப்போம். தெருவில் யாராவது வரும்போதுதான் வேண்டுமென்றே வெடி வைப்போம். அடுத்தவர்களை வெறியேற்றுவதில் அப்படி ஒரு ஆனந்தம்.

தீபாவளியன்று மட்டும் நானும் தம்பியும் ரொம்ப ராசியாகிவிடுவோம். அப்போதானே நமக்கு வேண்டியது கிடைக்கும். இன்றுவரை எனக்கு சரங்களில் நாட்டமில்லை. என்னோட ஆல் டைம் பேவரிட் லக்ஷ்மி வெடியும், குருவி வெடியும் தான். இரண்டு மூன்று லக்ஷ்மி வெடிகளை ஒன்றாக இணைத்து வெடிக்கும்போது ஆட்டம் பாம் தோற்கும். ஒரு முறை லக்ஷ்மி வெடியை கையில் பிடித்து தூக்கிப் போடும்போது அத்தை பார்த்துவிட்டார். "பொம்பள புள்ளையா இது" என நாள் முழுவதும் அர்ச்சனை (ரவுடி). இரவு நேரங்களில் ஆறேழு புஸ்வாணங்களை ஒரே நேரத்தில் கொளுத்தும்போது அவ்வளவு ரம்மியமாக இருக்கும். பாவாடையை (டெண்த் வரை என்னோட தீபாவளி ட்ரெஸ் எதாவது ஒரு பாவாடை. அப்புறம் தான் போனபோகிறதென மாடர்ன் டிரெஸ் வாங்கித்தந்தார்கள். பெரியம்மா ரெகமண்டேஷன்) லுங்கி மடித்துக் கட்டுகிறார்போல் கட்டிவிடுவார் பெரியம்மா. வெடி வச்சிட்டு ஓடிவர வசதியாக இருக்கும்.

தீபாவளி கொண்டாட்டங்களில் எனக்கு பிடிக்காத விஷயம் அதிகாலை எழுந்து குளிப்பது, தீபாவளி மருந்து திம்பது. லீவு நாள் அதுவுமா 5 மணிக்கெல்லாம் எண்ணெய் தேய்த்து குளிக்க சொல்லுவார்கள். அவ்வ்வ்வ்வ். எனக்கு இன்னும் நள்ளிரவே ஆகலன்னு கதறுவேன். I hate it:(

தலை தீபாவளியின்போது மூன்று மாத கர்ப்பமாக இருந்ததால் நோ பட்டாசு. ஒரு துணுக்கு ஸ்வீட் சாப்பிட்டாலும் வயிற்றைப் பிரட்டி வாந்தி வந்துவிடும். அடுத்த தீபாவளிக்கு ஜூனியருக்கு ஆகாதென நோ வெடிச்சத்தம். போன தீபாவளி ஏதோ சுமாராய் வெடி வைத்து மிச்ச நேரம் அடுப்படியிலேயே கழிந்தது. இந்த முறை பட்டையக் கிளப்பனும்னு பிளான் பண்ணிருக்கேன். ஆண்டவன் சித்தம்:)

பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் எனது தீபத்திருநாள் (அ) தீபாவளி நல்வாழ்த்துகள். Have a happy and safe diwali:)



டிஸ்கி : மீள்பதிவு. வெளியூர் பயணங்கள், பண்டிகைகள், முடிக்கவேண்டிய வேலைகள் நிறைய இருப்பதால் சில வாரங்களுக்கு தொடர்ந்து பதிவுலகத்தில் இயங்க முடியாத நிலை (தீபாவளி போனஸ்??!?!). சில நாட்கள் கழித்து நிறைய பதிவுகளுடன் சந்திக்கிறேன். மீண்டுமொருமுறை அனைவருக்கும் மனமுவந்த தீபாவளி வாழ்த்துகள்.