November 15, 2010

மைனா

படிப்பு வராததால் இளம்வயதிலே வேலைக்குப் போகும் நாயகன், ஆதரவு இல்லாமல் நடுத்தெருவில் நிற்கும் நாயகியின் தாய்க்கும், நாயகிக்கும் ஆதரவளிக்கிறார். சிறு வயது முதலே ஒருவர் மீது ஒருவர் மிக அன்பாக இருக்கின்றனர். நாயகியின் அம்மா நாயகிக்கு வேறிடத்தில் மாப்பிள்ளை பார்ப்பதால் ஆத்திரமாகும் நாயகன், அவளை அடித்துவிடுகிறார். அதனால 15 நாள் ரிமாண்டில் வைக்கப்படுகிறார். இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி நாயகிக்கு வேறிடத்தில் மணமுடித்து வைக்க முயல, சேதி அறிந்த நாயகன் தப்புகிறார். மறுபடியும் போலீஸ் இவரை கைது செய்து சிறைக்கு அழைத்துச் செல்ல முயலும்போது நடக்கும் சம்பவங்களே கதை.

படத்தின் மிகப் பெரிய பலம் காமிரா. மலையும் காடும் சூழ்ந்த கிராமத்தில் கதை நடப்பதாக காட்டுகிறார்கள். ஒவ்வொரு முறை அடர்ப்பச்சை/நீல நிறத்தில் மலை தெரியும்போதெல்லாம் நமக்கு குளிரெடுக்கிறது. க்ளீன் & நீட். இன்னொரு ஹீரோ தம்பி ராமையா. இறுக்கமான திரைக்கதையை இயல்பான இவரின் நகைச்சுவை அழகாய்த் தாங்கிப்பிடிக்கின்றது. “ங்கொப்பத்தா” என அனைவரையும் வார்த்தையால் கடிக்கும்போதாகட்டும், விதார்த்தின் கையோடு சேர்த்து விலங்கிட்டு இழுத்துக்கொண்டு அலைவதாகட்டும் வெடித்துச் சிரிக்க வைக்கிறார். “மாமோய் நீ எங்க இருக்கீங்க” என செல்போன் கேரக்டராக வரும் மனைவியோடு பேசும்போது அவர் காட்டும் எக்ஸ்பிரஷன்கள் அருமை.

காதலைக் காப்பாற்ற போராடும் கிராமத்து இளைஞனாக விதார்த். ஒக்கே ரகம். அமலா பால் - மிரட்டும் கண்கள். வாய் பேசவேண்டியதைக் கண்களே பேசிவிடுகின்றன. லவ்லி. ஜெயிலராக வரும் சேது. பண்டிகை அதுவுமாய் அக்யூஸ்ட்டைத் தேடி அலையும் போலீஸாகவே வாழ்ந்திருக்கிறார். இவர் மனைவி கேரக்டர் மிரட்டல். “தலை தீபாவளிக்குப் போறோமா இல்லையா?” எனும்போது அவர் வாய்ஸ் செம்மையாக இருக்கிறது. விதார்த்தின் அப்பா காரெக்டர், வாத்தியார், ரியல் எஸ்டேட் ப்ரோக்கர், என அனைவரும் கவனிக்கும்படி செய்திருக்கிறார்கள். இசை இமானாம். நம்பமுடியவில்லை. அனைத்துப் பாடல்களும் நன்றாக இருக்கின்றன. அதிலும் “கையப் பிடி கண்ணப் பாரு பாடல்” இப்போ என் ஃபேவரைட். பிண்ணனி இசை சுமார் ரகம் தான்.

பாடல்களில் பருத்தி வீரன் இமிட்டேஷனும், “சுருளிக்கும் மைனாக்கும் இடையில என்ன இருக்கு” என்பது போன்ற மொக்கை சீன்களிலும் கடுப்பாகிறது. அதை விட சைக்கிளோட்டி படிக்க வைப்பது, மின்மினிப் பூச்சிக் கொண்டுவருவது போன்ற சீன்கள் மகா திராபை. நேட்டிவிட்டி படமென்றாலே அண்ட்ராயர் தெரிய லுங்கி கட்ட வேண்டும் என விதி உருவாகிவிட்டது போல. அதே போல் அமலா பாலின் அம்மாவாக நடித்திருப்பவர் நன்றாக செய்திருந்தாலும், உச்சஸ்தாயில் கீச் கீச்சென கத்தும்போது காது கிழிகிறது:(

பழைய கதைதான் என்றாலும், திரைக்கதையில் பயணத்தைக் கொண்டு வந்து, சில திருப்புமுனைகளோடு, துருத்திக்கொண்டு தெரியாத நகைச்சுவையோடு படத்தைக் கொடுத்ததற்காக பிரபு சாலமனை பாராட்டலாம்.

11 comments:

பவள சங்கரி said...

அட நல்லாத்தான் இருக்கும் போல.....நன்றிம்மா

Unknown said...

நீங்க கிறுக்கின விமர்சனம் சின்னதா இருந்தாலும் சிறப்பதாங்க இருக்கு

VELU.G said...

நல்ல விமர்சனம்

CS. Mohan Kumar said...

ஆஹா விமர்சனம் எல்லாம் எழுத ஆரம்பிச்சிடீங்களா? ரைட்டு:))

பாடல்களில் எனக்கு பஸ்ஸில் வரும் அந்த டப்பங்குத்து பாட்டு தான் பிடித்தது. செம பீட்டு.

நிற்க. நானும் வானவில்லில் இப்போதான் மைனா பத்தி எழுதி உள்ளேன்.

அமுதா கிருஷ்ணா said...

இனிமேல் தான் பார்க்கணும் லொகேஷன்களுக்காக...

விக்னேஷ்வரி said...

எனக்கு இந்தப் படம் பார்க்கற பொறுமை இருக்கும்னு தோணல.

Vidhya Chandrasekaran said...

நன்றி சங்கரி மேடம்.
நன்றி மணிவண்ணன்.
நன்றி வேலு.
நன்றி மோகன் குமார்.
நன்றி அமுதா கிருஷ்ணா.

நன்றி விக்னேஷ்வரி (ஒரு தடவை பார்க்கலாம்).

vinthaimanithan said...

மைனா நல்லா பாடுதுன்னு சொல்றீங்க! சரி பாத்துடுவோம்!

RVS said...

வழவழக்காமல் விமர்சனம் 'நச்'. ;-)

மனோ சாமிநாதன் said...

விமர்சனம் நன்றாக இருக்கிறது. படம் பார்த்த பின் மறுபடியும் இதைப் படிக்க வேன்டும்!!

Thamira said...

சைக்கிளோட்டி படிக்க வைப்பது, மின்மினிப் பூச்சிக் கொண்டுவருவது போன்ற சீன்கள் மகா திராபை.//

கரெக்டா சொன்னீங்க.! :-))