July 29, 2010

ரங்கமணிகளுக்கு பத்து கேள்விகள்

நீங்க ஊருக்கு போகும்போதெல்லாம் ப்ரெண்ட்ஸ் கூப்படறாங்கன்னு போய் ஊரசுத்திட்டு, நல்லா மொக்கிட்டு, ஏதாவது ஒரு புதுப்படத்த பார்த்துட்டு வர்றீங்க. இதே எங்க ஊருக்கு வரும்போது நாங்க சொந்தக்காரங்க வீட்டுக்கு போகும்போது கூட வராட்டியும் பரவால்ல, போரடிக்குதே இனிமே வரவே மாட்டேன்னு புலம்பறீங்களே ஏன்?

நாலுபேருக்கே ஒழுங்கா சமைக்க வராதுன்னு தெரிஞ்சிருந்தும் உங்கம்மா வீட்டுக்குப் போகும்போதெல்லாம் நீ வேணா சமையேன்னு சொல்லி மாட்டிவிடறீங்களே அது ஏன்?

நாங்க விருந்தே சமைச்சாலும் கிச்சன க்ளீனா வச்சிருக்கோம். ஒரு டீ போட்டாக்கூட நாலு பாத்திரத்த தீச்சி, கிச்சன ஒரு போர்க்களமாவே மாத்திடறீங்களே ஏன்?

ஸ்கூல்ல குடுத்தனுப்பிச்ச சர்க்குலர ஏன் என்கிட்ட காமிக்கல, லீவ் லெட்டர்ல நான் தான் கையெழுத்து போடுவேன்னு சப்ப மேட்டருக்கெல்லாம் குதிக்கறீங்களே, என்னிக்காவது காலைல புள்ளய கொண்டு போய் வேன் ஏத்திவிட்ருக்கீங்களா?

உங்க ஒன்னு விட்ட மாமாவோட பேத்திக்கு காது குத்துன்னா ரெண்டு நாள் முன்னாடியே கிளம்புற நீங்க, எங்க தாய்மாமன் பொண்ணு கல்யாணத்துக்கு கரெக்டா முகூர்த்த டைமுக்கு வர்றீங்களே அது ஏன்?

உங்க ப்ரெண்ட்ஸ் வீட்டுக்கு சாப்பிட வரும்போது அத செய், இத செய், சேர அங்கபோடு, டீப்பாய இங்க வைன்னு இல்லாத ரவுசு பண்றீங்களே. எங்க ப்ரெண்ட்ஸ் வீட்டுக்கு வரும்போது மட்டும் கரெக்டா அவங்க கிளம்புற டைமுக்கு வந்து “அடடா கிளம்பிட்டீங்களா. ஆபிஸ்ல ஹெவி வொர்க்”ன்னு கூசாம புழுகுறீங்களே அது ஏன்?

உங்க வீட்டு விசேஷத்துக்கு போனா ஏதாவது ஒரு பாட்டிக்கிட்டயோ, தாத்தாகிட்டயோ அறிமுகப்படுத்திட்டு பேசிட்ரு வந்துர்றேன்னு சொல்லி எஸ்ஸாயிட்டு , எங்களை அவங்களோட ஆட்டோகிராப கேக்க வச்சி கொடுமப்படுத்தறீங்களே. ஏன் இந்த மர்டர் வெறி?

நீங்க செலவு பண்ணா அவசியம், நாங்க பண்ணா அநாவசியமா? 35,000 ரூபாய் கொடுத்து போன் வாங்கறது காஸ்ட்லியா தெரியல. 350 ரூபாய்க்கு குர்தா வாங்கின அவசியமான்னு கேக்கறீங்களே. இது எந்த ஊர் நியாயம்?

விருந்தே சமைச்சாலும் எங்கம்மா போடற பழையது மாதிரி வராதுன்னு கமெண்ட் அடிச்சு வெறுப்பேத்தறீங்களே, உங்களுக்கு திருப்திங்கறதே கிடையாதா?

தினமும் பதினொரு மணி பன்னிரெண்டு மணின்னு வர்ற நீங்க, நாங்க ஊருக்கு போனா மட்டும் 8.30/9 மணிக்கே வீட்டுக்கு வந்துடறீங்களே ஏன்?

July 28, 2010

தோசையம்மா தோசை...

தோச்சைம்மா தோச்சைம்மா
அம்மா சுட்ட தோசை
அர்ச்சி மாஆவு உள்ந்து மாஆவு
அர்ச்சு சுட்ட தோச்சை
அப்பாக்கு நாலு
பாப்பாக்கு ஒன்னு
தின்ன தின்ன ஆச்சை
இன்னும் கேட்டா பூச்சை.

முடிக்கும்போது டப்பென்று எதிரிலிருப்பவருக்கு அடி விழும். ஜூனியரின் ரைம்ஸ் லிஸ்டில் அம்மா சேர்த்தது.

சிம்பிள் & ஈஸி டிபன் லிஸ்டில் தோசயை சேர்க்கலாம். ஒரே மாவை வைத்துக்கொண்டு நாலைந்து ஐட்டம் தேத்திடலாம். இந்த தோசையை அடிப்படையாய் வைத்து பத்து பக்கத்துக்கு ஒரு மெனு கொண்ட ஹோட்டல் தான் Dosa Calling. மெனுவில் கற்பனை குதிரை றெக்கை கட்டி பறக்கிறது.

தமிழகத்தில் ஆரம்பிக்கிற மெனு, அப்படியே மைசூர் மசாலா தோசை, ஆந்திரா பெசரெட்டு, பக்கத்துல சிங்கப்பூர், சைனா என ஓரியண்டல் வகை, அப்படியே பான்கேக்ஸ் என ஒரு இண்டர்நேஷனல ட்ரிப் அடிக்கிறது.

தோசை வகைகள், ஊத்தப்ப வகைகள், அடை வகைகள், அப்புறம் இண்டர்நேஷனல் தோசை வகைகள் (Just the stuffing is different), அப்புறம் ஐஸ்க்ரீம் தோசை (Pancakes topped with ice-creams) எனப் போகிறது மெனு. முக்கால்வாசி தோசைகள் ஸ்டஃப்டு வெரைட்டீஸ். நாங்கள் மைசூர் மசாலா தோசை (உருளையுடன் மிளகாய் பேஸ்ட் மிக்ஸ் பண்ணி வித்யாசமான டேஸ்டில் இருந்தது), செட் தோசை, செஸ்வான் தோசை, ஓரியண்டல் ஸ்டஃப்டு தோசை ஆகியவை ஆர்டர் செய்தோம். எல்லாமே நன்றாக இருந்தது. சாம்பார் ரொம்ப நன்றாக இருந்தது. சட்னி வகைகள் ஆவரேஜ் தான். செட் தோசைக்கு வடைகறி இல்லை. ஜூனியருக்கு ப்ராப்ளமாய் தெரியவில்லை:) ஐஸ்க்ரீம் தோசைல பான்கேக் கொஞ்சம் ஹார்டாய் இருந்தது. டேஸ்ட் வாஸ் குட்.

டிபன் மட்டுமில்லாமல் சவுத் இண்டியன் லஞ்சும் உண்டு. தாலி மீலாக கிடைக்கிறது போலும். ட்ரை செய்யவில்லை. அதனால் எப்படியிருக்கும் என்ற ஐடியா இல்லை. மெனுவில் பாயாசம் ஆஃப் தி டே என இருந்தது. ஆர்வமாய் கேட்டாய் லஞ்சுக்கு மட்டும்தான் என்றார்கள். மெனுவிலும் போட்டுத் தொலையாலாமே. வீணா ஆசை காட்டிட்டு:(

உணவகம் ஒக்கே. ஆனால் சின்னசின்னதாய் நிறைய குறைகள். அநியாயத்துக்கு கும்பல்.வெயிட்டிங்க் டைம் மினிமம் இருவது நிமிடங்கள். ஏசி எபெக்டே இல்லை/போடவில்லையா தெரியவில்லை. கொஞ்சம் ஓபன் கிச்சனாய் இருப்பதால் வெக்கையாக இருக்கிறது. சர்வ் செய்பவர்களுக்கு ட்ரெய்னிங் போதவில்லை. ஆர்டர் மாற்றி தருவது, டிலே, சர்விங் பிரச்சனை என நிறைய குளறுபடிகள்.

மேலதிக தகவல்கள்

உணவகம் - Dosa Calling
உணவு - சவுத் இண்டியன் - Veg only
இடம் - அடையார் வெங்கடரத்தினம் நகர் (கஸ்தூரிபாய் நகர் அடுத்து). லாரன்ஸ் மேயோ ஷோரூம் கீழே. அதில்லாமல் கீழ்பாக்கத்திலும் ஒரு கிளை இருக்கிறது.
டப்பு - ஆவரேஜ். 25 ரூபாயிலிருந்து ஆரம்பிக்கிறது தோசை விலை.


பரிந்துரை - தோசை விரும்பிகள் கண்டிப்பாக முயற்சிக்கலாம். Food is not impressive as the menu:(

July 26, 2010

’யமஹா’தகர்கள்

தெருவின் ஆரம்பத்தில் திரும்பும்போதே அப்பாவின் வரவை அறிவித்துவிடும் வண்டி. ராயல் என்பீல்ட். அங்கங்கே கருப்பு பெயிண்டை உதிர்த்திருந்த கடோத்கஜன் செகண்ட் ஹாண்டாக வந்து சேர்ந்தான். அழகான கண்ணை உறுத்தாத, க்ளிட்டரிங் ப்ளூ கலருக்கு மாறியது. விடுமுறைக்கு அண்ணன்கள் வந்தால் நான்கு பேர் சேர்ந்து நகர்த்தினாலும் அசையாமல் மலை மாதிரி இருக்கும். அப்பா அதிலமர்ந்து வருவது கொள்ளை அழகாக இருக்கும். தினமும் ராமு மாமா துடைத்தாலும் வாரயிறுதியில் கட்டாயமாக அப்பா பார்த்து பார்த்து துடைத்து வைப்பார். தினமும் காலை தவறாமல் எங்களை ஒரு ரவுண்ட் அடிப்பார். வேலை மாற்றங்களும் பதவி உயர்வும் அரசாங்க வண்டிகளை உபயோகப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் அப்பாவைத் தள்ளினாலும் வண்டியை கூடவே வைத்திருந்தார். மதுராந்தகம் வந்து இனிமேல் வண்டி ஒத்துவராது என்றதால் விற்கவே மனமில்லாமல் விற்றார். சமீபத்தில் அண்ணா தன் நண்பர் வண்டியை எடுத்துக் கொண்டு வந்திருந்தார். அப்பாவை ஒரு ரவுண்ட் கூட்டி போகச் சொல்லி வற்புறுத்தி அழைத்துச் சென்றேன். இம்முறை ஜூனியர் முன்னால் அமர்ந்து கொண்டான். மாமனிடத்தில் மாப்பிள்ளை. Felt very happy.
*********

பிவிஆரில் டாய் ஸ்டோரி பார்க்க போயிருந்தோம். 3D கண்ணாடிகளை ஸ்நாக்ஸ் கவுண்டரில் விநியோகித்தனர். பாப்கார்ன் பெப்சி வாங்குபவர்களை மீறி கண்ணாடியைப் பெறுவதற்குள் முழி பிதுங்கிவிட்டது. கண்ணாடிகளை டிக்கட் கொடுக்கும்போதே இஷ்யூ செய்யலாமே என கேட்டதற்கு சரியான பதிலே இல்லை. அதில்லாமல் கண்ணாடி 25 ரூபாய். நோ ரீபண்ட் என்றார்கள். இந்தக் கண்ணாடியை வைத்துக்கொண்டு நாங்கள் என்ன செய்யப்போகிறோம் என்றதற்கு வேணும்னா வாங்கிக்கோங்க என்ற திமிரான பதில் வேறு. இம்மாதிரியான பெரிய நிறுவனங்களுக்கு கஸ்டமர் கேர், கஸ்டமரிடம் எப்படி பிஹேவ் செய்வது எப்படி என வகுப்பெடுக்கனும் போல.
**********

I've been on a calendar, but i've never been on time - Marlyn Manroe
லேண்ட் மார்க் பையில் பார்த்த இந்த ஸ்டேட்மெண்டை பகிர்ந்து கொள்ள வேண்டும் என தோன்றியது.
***********

இந்த சனி ஞாயிறு எந்த சேனலைத் திருப்பினாலும் விருது வழங்கும் விழாவாகவே இருந்தது. கலைஞர், விஜய், கே டிவி என ஏதாவது ஒரு சேனலில் யாராவது ஒருவர் யாருக்காவது நன்றி சொல்லிக்கொண்டிருந்தார்கள். இதன் நடுவில் விஜயில் மிர்ச்சு மியூசிக் அவார்ட்ஸ் வேற ஒளிபரப்பப்போகிறார்களாம். இப்படியே எல்லா சேனல்களும் விருதுகளைத் தர ஆரம்பித்தால் என்னவாகும். விஜய் வருடம் தவறாமல் ஏதாவது ஒரு பெயரில் கமல், சூர்யா மற்றும் விஜய்க்கு அவார்ட் கொடுத்துவிடுகிறார்கள். அதே போல் ஒவ்வொரு சேனலும் அவர்களுக்கு வேண்டிய/பிடித்த நடிகர்/நடிகைகள் என ஆரம்பித்தால் யார்தான் உண்மையிலே தகுதியுடையவர்கள் எனத் தெரிந்து கொள்வது?
************

சென்னை சாலைகளில் ஸ்கூல் யூனிபார்மில் நிறைய குட்டிப் பையன்கள் பதற வைக்கும் வேகத்தில் வண்டி ஓட்டுகிறார்கள். அதிலும் நிறைய அபாச்சியும், யமஹாவும் தான். எருமை மாடு மாதிரி பிரமாண்டமாய் இருக்கும் வண்டியில் அநாயசமாக அசுர வேகத்தில் பறக்கிறார்கள். வண்டியை சாய்க்கறதை பார்த்தால் விட்டால் படுத்துக்கொண்டே ஒட்டுவான்கள் போலிருக்கு:( போன தடவை அப்படி யமஹாவில் பறந்த பையனால் நிலை தடுமாறி விழப் பார்த்தோம். ஒரு நொடியில் சுதாரித்ததால் உயிர் பிழைத்தோம் (க்றீச்சிட்டு நின்ற லாரியை நினைத்தால் இப்போதும் நடுங்குகிறது). பெற்றோர்கள் வண்டி வாங்கி கொடுக்காமல் இருக்கலாம். ஸ்டேட்டஸ் பார்ப்பவர்கள் ஆபத்தையும் பார்த்தால் நன்றாக இருக்கும்.

July 23, 2010

நான் யார் தெரியுமா?

பதிவுலகத்தில் நான் எப்படிப்பட்டவர் என்ற தொடர் பதிவுக்கு விதூஷக்கா கூப்பிட்டிருக்காங்க. ஓய்ய்ய்ய்ய்ய்ய். நாங்கள்லாம் யார் தெரியும்ல என சவுண்ட் விட நானும் களத்தில் குதிச்சாச்சு. கமான் கொஸ்டீன் மீ. கொஸ்டீன் மீ..

1) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?

வித்யா

2) அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?

சிங்கம் எங்க போனாலும் சிங்கம் தான். அதே மாதிரி நான் இங்கயும் வித்யா தான்:)

3) நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி.

அந்த மங்களகரமான நிகழ்வை (நாசமாப் போக என நீங்கள் சொல்வது எனக்கு கேக்குது) இதோடு நூத்தி நாப்பது தடவை எழுதியாச்சு. இங்கன போய் படிச்சு பார்த்துக்கோங்க.

4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?

ஆங் அப்படியே செஞ்சி பிரபலமாயிட்டாலும். இன்னும் கொஞ்சம் பெட்டராய் சொல்லனும்னா “எனக்கு இந்த விளம்பரமே பிடிக்காதுங்க. நான் என் மனநிறைவுக்காக எழுதறேன். ஹிட்ஸ், கமெண்ட்ஸ் எல்லாம் முக்கியமில்ல”. (இதான் சாக்குன்னு கமெண்ட் போடாம போனீங்க பூச்சாண்டிக்கிட்ட புடிச்சிகுடுத்திடுவேன்).

5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?

எழுதற முக்கால்வாசி மேட்டர் நம்ம சொந்தக் கதை சோகக் கதைதான். ஏன்னு கேட்டா யோசிச்சு எழுதற அளவுக்கு சரக்கு லேது. விளைவுகள் ஏற்படுமளவிற்கு நான் எதையும் (இங்கு) யாரிடமும் பகிர்வதில்லை.
6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?
நான் எழுதற மொக்கைக்கெல்லாம் காசு கொடுப்பாங்களா? Time pass. Relaxation. அம்புட்டுதேன்.

7) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?
ஒன்ன வச்சிக்கிட்டே ஒன்னும் முடியல. இதுக்கு மேட்டர் தேத்தறதுக்கே நாக்கு தள்ளுது. இதுல இன்னொன்னு. ஹுக்கும்.

8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?

கோபம் நிறைய ஏற்படுவதுண்டு. தவறுகளை சுட்டிக்காட்டும் அளவிற்கு எனக்கு யாருடனும் பழக்கமில்லை. ஒருமுறை பட்டதே போதுமென தோன்றுகிறது. (நட்பைப் பொறுத்தவரை பதிவுலகத்திற்காக என் உலகத்தை திறப்பதற்கு ரொம்பவே தயக்கமாய் இருக்கிறது. I know i'm wrong here. Still i've my own reasons). நான் எழுத வந்தது ரிலாக்சேஷனுக்காக. அதை மட்டும் பார்த்தால் போதும் என்ற மனநிலை ஏற்பட்டுவிட்டது. அதையும் மீறி சில நிகழ்வுகள் எரிச்சலடைய செய்கின்றன. I act as a blind, deaf n dumb in blogdom during serious issues.

பொறாமை நிறைய பேரின் எழுத்தைப் பார்த்து. மொக்கை, சீரியஸ், இலக்கணம் என நிறைய விஷயங்களில் பலரைப் பார்த்து வியந்திருக்கிறேன். நீயும் இருக்கியே என்ற எண்ணம் ஏற்படும். அந்த லிஸ்ட் கொஞ்சம் பெரிசு.

9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..

ஹி ஹி. என்னை எழுதுன்னு சொன்ன என் தம்பிதான் (அடிக்க தேடாதீங்க. அவன் பதிவுகலத்தை விட்டு எஸ்ஸாயிட்டான்). என்னுடைய நெருங்கிய நண்பர்கள் மற்றும் அலுவலக நண்பர்கள் பாராட்டுவாங்க. ஆனாலும் எப்படி இப்படி உன்னால அடக்கி வாசிக்க முடியுதுன்னு கலாய்ச்சிக்கிட்டே இருப்பாங்க. காங்க. இப்பல்லாம் கமெண்ட் வரதே பெரிய விஷயமா இருக்கு. பதிவர்களில் எப்போதாவது விக்கி உரையாடியில் பதிவு நல்லாருக்குன்னு பாராட்டுவார். நோட் பண்ணுங்க எப்போதாவது. ஏன்னா நான் எப்பவாவது தான் நல்லா எழுதறேன்.

10) கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்.

ஒன்னியும் தெரிய வேணாம். தெரிஞ்ச வரைக்கும் போதும். 2016ல சி.எம் ஆனதுக்கப்புறம் அவங்கள எனக்கு நல்லா தெரியுமேன்னு யாராச்சும் சிபாரிசுக்கு வந்துட்டா. என்னதான் கொடை வள்ளலா இருந்தாலும் கடமை கண்ணியம் கட்டுப்பாடு வேணுமல்லவா. ஆகவே தோழர்களே....

இதை கண்டினியூ பண்ண நான் கூப்டறது

வெட்டிவம்பு விஜய்
"No time for blog" என அலப்பறை பண்ணும் ராஜி
“பிரபல பதிவர்” விக்னேஷ்வரி (விக்கி நீங்க ஆசைப்பட்ட மாதிரியே உங்கள
பிரபலமாக்கிட்டேன். அமவுண்ட் சீக்கிரம் செட்டில் பண்ணிடுங்க)
உழவன்

July 21, 2010

மதராசபட்டிணம் - மாறுபட்ட கோணத்தில்..

டிஸ்கி : மதராசபட்டிணம் படத்தின் க்ளைமேக்ஸ் நெருங்குகையில் டைரக்டர் தமிழ் சினிமாக்களின் இலக்கணங்களை மீறாமல் கொஞ்சம் ரொம்பவே இழுத்துவிட்டார். துரையம்மாள் ட்ரஸ்டை தேடிப் போகும்போதே இந்தக் கதையை இன்ன டைரக்டர் எடுத்திருந்தால் எப்படியிருந்திருக்கும் என யோசித்துப் பார்த்தேன். வீட்டிற்கு வந்து டெவலப் செய்தது. நகைச்சுவைக்காகவே தவிர யார் மனதையும் புண்படுத்த அல்ல.

என் இனிய தமிழ் மக்களே...

பூக்கள் பூக்கும் தருணம் பாடலின் போது ஆர்யா-ஏமி அமர்ந்திருக்கும் போட்டை சுற்றி பத்து படகுகளில் வெள்ளை உடையில் தேவதைகள் (என்ற பெயரில்) சிலர் ஆடுவார்கள். அந்த மணிக்கூண்டில் நடக்கும் சண்டையின்போது ஆர்யா அடிபட்டு மயங்கிவிடுவார். ஏமி தன் மானத்தை காப்பாற்றிக்கொள்ள வில்லனை மேலிருந்து கீழே தள்ளி கொன்றுவிடுவார். கடமை தவறாத கவர்னர், மகள் என்றும் பாராமல் அவரை அரெஸ்ட் செய்து லண்டன் ஜெயிலில் அடைத்துவிடுவார் (அதான் இந்தியாவுக்கு சுதந்திரம் குடுத்துட்டாங்களே. Moreover ஏமி லண்டன் சிட்டிசனாச்சே. லாஜிக். லாஜிக்). ஆயுள் தண்டனை முடிந்து ஏமி இந்தியாவுக்கு வருவார். அவர் ஏர்போர்டில் இறங்கியதும் இழுத்துக்கொண்டிருக்கும் ஆர்யா இன்னும் ஆஸ்மா ட்ரபிள் வந்தவர் மாதிரி இன்னும் இழுத்து இழுத்து மூச்சுவிடுவார். அப்படியே பாட்டியக் காமிக்கிறோம். நவரசத்தையும் மூஞ்சில காமிப்பாங்க. கண்டிப்பா கண்ணு துடிக்கும். ஆர்யா இருக்கிற இடத்துக்கு வந்து பார்த்து அவர தொடுவாங்க. அத்தனை காலமா கோத்ரேஜ் பீரோல் பூட்டி வச்சிருந்த ஆர்யாவோட உசிர் படக்குன்னு போய்டும் (இதயா டாவடிச்சோம் என்ற அதிர்ச்சி தான் உண்மையான காரணமாயிருக்கும்). ஆர்யாவோட கால்மாட்டுல உக்காந்திருக்கிற பாட்டியோட தலை தொபுக்கட்டீர்ன்னு தொங்கிரும்.

எந்த சாரே...

ஆர்யாவை தண்ணியில் தள்ளி்விட்டுவிட்டு போகும் ஏமிக்கு லண்டனில் வேறொருவோடு கல்யாணமாகிறது. ஏமியின் காதல் கதையை தெரிந்து கொள்ளும் அந்த வெள்ளக்கார துரை ஏமியை அழைத்துக்கொண்டு இந்தியா வருகிறார். படாதபாடுபட்டு ஆர்யாவை கண்டுபிடித்து ஏமியை ஏற்றுக்கொள்ள சொல்கிறார். அதற்கு ஆர்யா “என்னுடைய காதலி உங்கள் மனைவி ஆகலாம். ஆனால் உங்க மனைவி என்னுடையா காதலி ஆக முடியாது துரை. எங்க நீங்க போட்ட அந்த மோதிரத்த கழட்ட சொல்லுங்க பார்ப்போம்”. ஏமி கூலாக மோதிரத்த கழட்டிக்கொடுத்துவிட்டு “நீ சொன்ன டயலாக் எல்லாம் தமிழ்நாட்டு கல்ச்சருக்கு தான் பொருந்தும். ஐ’ம் ஃப்ரம் லண்டன். Not applicable to me".

தங்கச்ச்ச்ச்ச்சீஈஈஈஈஈஈ...

செல்வி பிறந்தவுடனேயே அவர் அம்மா இறந்துவிட, தாய்க்கு தாயாக இருந்து செல்வியை கண்ணும் கருத்துமாய் வளர்க்கிறார் ஆர்யா (உங்களுக்கு அபாரமான மனதைரியம் இருந்தால் ஆர்யாவை நீக்கிவிட்டு அவரை கற்பனை செய்து கொள்ளவும்). அண்ணனுக்கு பயந்த, அண்ணன் மீது அளவில்லா பாசம் கொண்ட தங்கையாக வலம் வருகிறார் செல்வி. அதே நேரம் அவருக்கு ஒரு (நல்ல) வெள்ளைக்கார துரையுடன் காதல் வளர்கிறது. இது தெரியாமல் அண்ணன் வேறொருவருக்கு தங்கையை கல்யாணம் செய்து தருவதாக வாக்கு கொடுத்துவிடுகிறார். இதுல சைட் ட்ராக்கா அவரை ஒருதலையாக காதலிக்கிறார் ஏமி. அவர் காலடி மண்ணை விபூதியாக பூசிக்கொள்கிறார். அவருக்காக தோபிகானாவில் வந்து துணி தோய்க்கிறார். கழுதை மேய்க்கிறார். அவரின் பார்வை கூட ஏமி மீது படாது. அப்படிப்பட்ட பண்பாளர் அவர். தங்கையின் காதல் விஷயம் தெரிந்ததும் ஒரு நீண்ண்ண்ண்ண்ட (டயலாக்) போராட்டமே நடக்கிறது வீட்டில். கடைசியில் தங்கையின் ஆசைதான் பெரிது என நினைத்து காதலுக்கு பச்சை கொடி காட்டுகிறார். ஏமியை இழுத்துக்கொண்டு போகவரும் வில்லனை (பேசியே) கொல்கிறார். இவர் ஏற்கனவே பேசிவைத்திருந்த பையன் வீட்டார் நிச்சயம் பண்ண வர இவர் மறுத்து நிலைமையை விளக்க, அவர்கள் வாக்கு தவறிட்டியே என சொல்ல, அந்த வார்த்தையை கேட்ட அடுத்த நொடி சலவைக்கல் மீது விழுந்து உயிர்விடுகிறார் நம்ம கவரிமான் பரம்பரை ஹீரோ.

லாலாலா லல லாலா...

ஆர்யா-ஏமி காதல் விவகாரம் கவர்னருக்கு தெரிய வருகிறது. ஆர்யாவிடம் கவர்னர் ஸ்டேட்டசை சுட்டிக் காட்டி பெண் தர மறுக்கிறார். வெகுண்டெழும் ஆர்யா வொர்க் பெர்மிட்டில் லண்டன் சென்று தினக்கூலியாக வேலைக்கு சேர்கிறார். ஒரே பாட்டில் பெரிய பணக்காரராகி ஈஸ்ட் இந்தியா கம்பெனியின் பார்ட்னராக முன்னேறுகிறார். யூகே குடியுரிமைப் பெற்று தாயகம் திரும்பி ஏமியை கரம்பிடிக்கிறார்.

அழுக்க அடிச்சி பாத்திருக்கியா..

சட்டைய சர்ஃப் எக்ஸல்ல தோச்சிருப்ப. ரின் மேட்டிக்ல தோச்சிருப்ப. ஏன் அரசன் சோப்ல கூட தோச்சிருப்ப. ஆனா சலவக்கல்ல தோச்சிருக்கியா. சோப்பே இல்லாம தோச்சிருக்கியா. ஓங்கி அடிச்சா நாலு மூட்டை துணியோட அழுக்கும் அடையாளமில்லாம போய்டும்டா பார்க்கிறியா. பார்க்கிறியா. பார்றா. தொம். தொம். தொம் என ஆர்யா அடிக்க பின்னாடி ட்ராம் ஒன்று வெடித்து பனை மர அளவு பறக்கிறது. ஏமிக்கு புடைவக்கு பதிலாக பாவாடை தாவணி குடுத்து ஊட்டி மலையில் ஒரு டூயட் உண்டு.

ஏமியின் கையெழுத்து...

”I've some unfinished business in India" என சொல்லிவிட்டு ஒரு தோள்பையோடு ஏர்போர்டில் இறங்குகிறார் ஏமி (பாட்டி). விமானத்திலிருந்து இறங்கி இமி்க்ரேஷனைக் கடக்கும்போது “memories coming" பாட்டு. செக்யூரிட்டு கார்டுடனான காதலுக்கு சாட்சியா அவரிடமிருந்து அடித்த மெட்டல் டிடெக்டரை (1947 மாடல்) தொட்டுப் பார்த்துக்கொண்டே வெளியே வருகி்றார். ட்ராமிலேறியவுடன் மீண்டும் அதே பாடல். ட்ராமில் சுட்ட மணியை எடுத்துப் பார்த்துக்கொள்கிறார். இப்போது கண்டக்டராய் இருக்கும் ஆளின் பெயர் துரை என்பதை அறிந்தவுடன் பஸ் கம்பியில் சாய்ந்துக் கொண்டு குலுங்கி குலுங்கி அழுகிறார். ரெஸ்ட் ஆஃப் த ஸ்டோரி ஆர்யாவை தேடுவது.

ரீ-மேக்...

தமிழ்ல ஆர்யா-ஏமி நடிச்சு சூப்பர் ஹிட்டான கதைய மட்டும் எடுத்துகிட்டு தெலுங்கு ரசிகர்களுக்கு பிடிச்ச மாதிரி மாத்தியிருக்கோம். நடிகர் நடிகைகள் எல்லாரும் தமிழ்ப்படத்துல
நடிச்சவங்கதான். காஸ்ட்யூம், வசனங்கள், லொகேஷன் எல்லாம் தமிழ்படத்துல வந்த மாதிரிதான். இல்ல இல்ல. அப்படியே காப்பியெல்லாம் அடிக்கல. ரொம்பக் கஷ்டப்பட்டு தெலுங்கு ரசிகர்களுக்கு பிடிச்ச மாதிரி படத்தின் தலைப்பை “மதராசபட்டிணம்லு” என மாத்திருக்கோம். இதுக்காக ஆறு மாசமா உழைச்சோம்.

July 15, 2010

தூக்கமும் கண்களை தழுவட்டுமே...

வாழ்க்கைல நிம்மதி தரக்கூடிய விஷயங்களில் தூக்கமும் ஒன்று. சிலருக்கு தூக்கத்துல கூட நிம்மதி இருக்காது. எதுனா டெரரான கனா வந்து எழுப்பிவிட்டுடும். சிலரோ அவங்க நல்லா தூங்கினாலும் பெரிசா கச்சேரி பண்ணி பக்கத்துல படுத்துருக்கவங்கள தூங்க விடாம பண்ணிடுவாங்க. எந்த பிக்கல் பிடுங்கல் இல்லாம நிம்மதியான ஆழ்ந்த உறக்கம் வாய்க்கப்பெற்றவர்கள் வரம் வாங்கி வந்தவர்கள். நானும் அந்த வரத்தால் ஆசிர்வதிக்கப்பட்டிருந்தேன். ஒரு காலத்தில். ஹும்ம். அது ஒரு அழகிய நிலாக் காலம்.

பள்ளி படிக்கும்போதெல்லாம் இரவு ஏழரைக்கே சாமியாட ஆரம்பித்துவிடுவேன். எட்டும் மணிக்கெல்லாம் தூங்கி விடியற்காலை 5.30 அல்லது 6 மணிக்கு முழிப்பது வழக்கமாகவே இருந்தது. பரீட்சை நேரங்களில் மட்டும் 4.30 மணிக்கு எழுந்து ரிவைஸ் செய்வது வழக்கம். என்றைக்குமே அதிகம் படிச்சதில்லை. ப்ளஸ் டூவில் கணக்கிற்கு மட்டும் ட்யூஷன் போனேன். ட்யூஷன் முடியவே 7.30 ஆகிவிடும். அப்போ படுக்க செல்வது 9 அல்லது 9.30 என ஷிப்ட் ஆனது. காலேஜ் அட்மிஷன் ஸ்காலர்ஷிப்போடு கிடைத்த சந்தோஷத்தை கொண்டாட முடியாதபடி பேரிடியாக இருந்தது காலேஜ் டைமிங். 7.30 மணி முதல் 3.30 வரை காலேஜ். 7.30 மணி காலேஜுக்கு 6 மணிக்கு பஸ் வரும். அப்படியென்றால் நான் தினமும் 5 மணிக்கே எழ வேண்டும். சாயந்திரம் 3.30 மணிக்கு காலேஜ் விட்டாலும் வீடு வந்து சேர ஆறு மணிக்கு மேலாகிவிடும். நண்பர்களோடு விளையாட/ஊர்சுற்ற, ரெக்கார்ட், அசைன்மெண்ட் என முடித்து, கொட்டிக்கொண்டு படுக்க எப்படியும் பத்தாகிவிடும். எட்டு மணி நேர தூக்கத்துக்கு ஒரு மணி நேரம் குறைகிறதே என அம்மாவிடம் செமத்தியாக ஃபீல் பண்ணி அதை விட செமத்தியாக வாங்கிக் கட்டிக்கொள்வேன். பள்ளி முதற்கொண்டு அம்மா எங்களுடனே எழுந்துவிடுவார். டீ போட்டு கொடுத்து தூங்காமல் படிக்கும்படி பார்த்துக்கொள்வார். அதுவும் 2000த்தில் நானும் தம்பியும் முறையே ப்ளஸ் டூ, டெண்த் என இரண்டு பேருமே போர்ட் எக்ஸாம்க்கு அப்பியர் ஆனோம். அதனால் ஒருநாள் என்னுடனும் ஒரு நாள் அவனுடனும் உட்கார்ந்து காவல் காப்பார்கள். ஆ.வி/கு.மு/மங்.மலர் என ஏதாவது ஒன்றை அம்மாவும் புரட்டிக்கொண்டிருப்பார்கள்.

காலேஜ் படிக்கும்போது சனி ஞாயிறுகளில் மற்ற ஐந்து நாட்களுக்கும் சேர்த்து வைத்து தூங்குவேன். காலையில் பத்து வரை தூக்கம். பின்னர் அருமையான டிபன். பதினொன்றை வாக்கில் டீ. எண்ணைய் குளியல். மதியம் சாப்பாடு. ஒரு பெரிய குட்டித்தூக்கம். விளையாட/நண்பர்கள் வீட்டிற்கு/ அரிதாய் அம்மாவிற்கு ஏதேனும் உதவி. நைட் நோ டின்னர். டிவியில் ஏதாவது படம் பார்த்துவிட்டு மறுபடியும் தூக்கம். காலேஜ் முடியும் வரை இந்த ரொட்டீன் தொடர்ந்தது. பின்னர் வேலையில் சேர்ந்து ட்ரெயினிங் பீரியடில் கூட ஒன்னும் பெரிய டிஃபரென்ஸ் தெரியவில்லை. அரட்டை எல்லாம் க்ளாஸிலேயே முடிந்துவிடும்:) அதனால் பத்தரை பதினொன்றுகெல்லாம் தூங்கிவிடுவோம். என்ன காலை மட்டும் கொஞ்சம் அரக்க பரக்க எழுந்து கிளம்பனும். ப்ரொஜெக்ட் அலாகேட் ஆகி இரண்டாவது ஆபிஸ் மாற்றம் வந்த பிறகு தான் எல்லாம் தலைகீழாக ஆரம்பித்தன.

சில சமயங்களில் வீட்டுக்கு வரவே ஒரு மணியாகிவிடும். காலையில் லேட்டாய் போகலாமென்றால் ஆபிஸ் கேப் கிடையாது. MTCயில் நசுங்கி செத்துடுவோம் என்ற பயத்தில் மறுபடியும் காலையில் 8.30 மணிக்கெல்லாம் கேப் பிடிக்க ஓட வேண்டி வரும். வெள்ளிக்கிழமை நைட் ட்ரெய்ன் பிடித்து வீடு போய் சேர்ந்து தூங்க ஆரம்பித்தால் தூங்கிக்கொண்டே இருப்பேன். ஒரு முறை அம்மா நான் எவ்ளோ நேரம் தான் தூங்கறேன்னு பார்க்க காலை எழுப்பாமலேயே விட்டுவிட்டார்கள். அசராமல் தூங்கிக்கொண்டிருந்தவளை மதியம் சாப்பாட்டிற்கு எழுப்பியபோது மணி 2. எந்த விஷயத்திலும் என்னை கண்டிக்காத அப்பா இந்த விஷய்த்தில் மட்டும் லேசாக தட்டுவார். “பொம்பிள பிள்ளை காலைல இவ்ளோ நேரமா தூங்குவா?”. தூக்கத்துக்கு என்ன ஆம்பிளை/பொம்பிளை வேண்டியிருக்கு என்பேன். கல்யாணத்துக்கப்புறம் எப்படி இப்படி தூங்கறேன்னு பார்க்கிறேன் என்பார்.

கல்யாணம் ஆன பின்பு கொஞ்சம் பம்ம ஆரம்பித்தேன். வழக்கமான க.பி பம்மல்கள். சனி ஞாயிறுகளில் பாண்டியோ அல்லது அம்மா வீட்டிற்கோ பயணம் இருக்கும். அதற்கு விடியற்காலை எழுந்து பஸ் பிடிக்க வேண்டும். பின்னர் ஜூனியரை சுமந்திருந்தபோது அசுர தூக்கம் வரும். காலையில் 8.30 வரைக்குமாவது தூங்குவேன். என்னை எழுப்ப ரகு போராடுவார். அஞ்சு நிமிஷம் அஞ்சு நிமிஷம் என அரை மணி நேரம் தூங்குவேன். டாக்டரிடம் ரகு சொன்னது இன்னும் நினைவிருக்கிறது. “அநியாயத்துக்கு தூங்கறா டாக்டர். Is it normal?". Absolutely yes. அவங்களை தூங்க விட்டுடுங்க என்று டாக்டர் பாலை வார்த்தார்.

ஜூனியர் பிறந்து என் தூக்கத்திற்கு பெரிய ஆப்படித்தான். முதல் ஆறு மாதங்களுக்கு இரவில் ஒரு நிமிடம் கூட தூங்க மாட்டான். ஷிப்ட் போட்டுக்க்கொண்டு நான், அம்மா, அப்பா ஆகியோர் பார்த்துக்கொள்வோம். இரவு 6.30 மணிவாக்கில் விளையாட ஆரம்பித்து, துரை டயர்டாகி மறுநாள் காலை 5.30 அல்லது 6 மணிவாக்கில் தான் தூங்குவார். நைட் 12 வரை நான் பார்த்துக்கொள்வேன். பின்னர் 3 மணி வரை அம்மா. மீண்டும் அவன் தூங்கும் வரை நான். ஆறு மாதத்திற்கு பிறகு அவன் நைட் தூங்க ஆரம்பித்தாலும் டைமிங் பிரச்சனை. 11 மணிக்கு மேல் தான் தூங்கப்போவான். 2 வயது வரை நடு ராத்திரியில் பால் கரைத்துக் கொடுக்க எழுந்திருக்கனும். நிம்மதியான, தொடர்ச்சியான தூக்கமில்லாமல் போனது. எப்படா சனி ஞாயிறு எப்படா வரும் என இருக்கும். இருக்கிறது. வாரநாட்களில் 8.30 வரைக்கும் தூங்கும் ஜூனியர் சனி ஞாயிறுகளில் டாணென்று 6 மணிக்கு எழுந்து விடுவான்:( திரும்பவும் அவனை தூங்க வைப்பதற்குள் என் தூக்கம் பறந்திருக்கும்.

ஜூனியருக்கு ஸ்கூல் வேன் காலை 7.30க்கெல்லாம் வந்துவிடுகிறது. நான் 5.30க்கே எழவேண்டியிருக்கிறது. நைட் படுக்க 12 மணியாகிவிடுகிறது. வளைச்சு வளைச்சு தூங்கினல்ல அனுபவின்னு அப்பா கிண்டல் பண்றார். அதவிட கொடுமையா இந்த வாரத்துல மட்டும் ஸ்லீப்பிங் பொசிஷன் பத்தின அரதப் பழசான மெயில் பத்து தடவ ஃபார்வர்ட் பண்ணிட்டாங்க மக்கள். ஸ்பெஷலா எனக்காகவாம். அவ்வ்வ்வ்வ். இப்ப எதுக்கு இந்த சோகக் கதைன்னு கேக்கறவங்களுக்கு. என் சோகத்தை வேற எங்க சொல்லுவேன்.

July 13, 2010

களவாணி

யதார்த்தமான கதை என்ற பெயரில் பிழிய பிழிய அழவில்லை. பத்து பேரின் ஊனத்தை உறையச்செய்யும் விதமாய் காமிக்கவில்லை. யாரும் பெருங்குரலெடுத்து அழவில்லை. வெட்டருவா வேல்கம்புகளுடன் டாய்ய்ய்ய்ய்ய் எனக் கத்திக்கொண்டு யாரும் யாரையும் துரத்தவில்லை. சந்துக்குள் நடக்கும் ஹீரோயினை வழிமறித்து மீசையை முறுக்கிக்கொண்டு கேணத்தனமாய் சிரிக்கவில்லை. முக்கியமாய் நேட்டிவிட்டியை காமிக்கிறேன் பேர்வழி என அண்டராயரை காமித்துக்கொண்டு அழுக்காய் நிக்கவில்லை. இருந்து படம் முழுக்க ரசித்து சிரிக்குமாறு ஒரு “யதார்த்தமான” படத்தை தந்திருக்கும் இயக்குனர் சற்குணத்தை எவ்வளவுப் பாராட்டினாலும் தகும்.

சின்ன சின்ன களவாணித்தனம் பண்ணிக்கொண்டு, துபாயிலிருந்து அப்பா அனுப்பும் காசை சூரைவிட்டுக்கொண்டுத் திரியும் சண்டியனுக்கு தீராப் பகையிலிருக்கும் அடுத்த ஊர் பெண்னிடம் காதல் அரும்புகிறது. அப்பாவை சமாளித்து, பகையாளியான பெண்ணின் அண்ணனை எதிர்த்து எப்படி அவளை கைப்பிடிக்கிறான் என்பது கதை.

சண்டை போடாம ஜாலியா விளையாடுங்கடா என சொல்பவரிடம் “சண்டை போடறதுதான் எங்களுக்கு ஜாலி” என சிறுவன் சொல்லுமிடத்தில் புன்னகைக்க ஆரம்பித்தால் படம் முடியும் வரை அதை தக்க வைக்கிறார்கள். மிஸ்டர் வொயிட்டாக வலம் வரும் கதையின்நாயகன் விமல் அறிக்கி @ அறிவழகனாகவே அட போட வைக்கிறார். பார்க்கிற பொண்ணையெல்லாம் மாமன கட்டிகறேன்னு சொல்லு என அதட்டுவதும், உர முட்டை திருடுவது என மைனர் மாப்பிள்ளையாக கலக்குகிறார். அறிமுக ஹீரோயினான ஓவியா கேரளத்து வரவு. கண்கள் கவிபாடுகின்றன. வில்லனாக வரும் இளங்கோ அறிமுகமாம். சுத்தமாய் தெரியவில்லை. சுத்தமாய் வில்லத்தனத்தை கத்தாமல் செய்திருக்கிறார். கண்களாலேயே பயத்தை விதைக்கிறார். க்ளைமேக்ஸில் தொபுக்கடீர் என நல்லவராய் மாறும்போது தான் கொஞ்சூண்டு உதைக்கிறது. பொருத்தமான கதாபாத்திரங்கள். எல்லாரையும் தூக்கி சாப்பிடுவது விமலின் அம்மாவாக நடித்திருக்கு சரண்யா தான். குருட்டுத்தனமாய் பையனுக்கு சப்போர்ட் பண்ணுவதும், கோவக்கார கணவருக்கு பயப்படுவதும், அவரை சமாளிக்க ப்ளான் செய்வதும் சூப்பராய் செய்திருக்கிறார். “ஆவணி வந்தா டாப்பா வருவான்” என ஒவ்வொரு முறை சொல்லும்போதும் தியேட்டரே அதிர்கிறது.

பஞ்சாயத்தாக வரும் கஞ்சா கருப்பு ஒவ்வொரு முறையும் விமல் அண்ட் கோவிடம் சிக்கும்போதும் கலக்கியெடுக்கிறார். பாலிடால் குடிப்பது, ரெக்கார்ட் டான்சாடும் பெண்ணிற்கு அன்பளிப்பு கொடுத்து வாங்கிக் கட்டிக்கொள்வது, ஹாஸ்பிட்டல் காமெடி என ரகளை. மகனைக் கரித்துக்கொட்டிக்கொண்டே இருக்கும் துபாய் அப்பாவாக இளவரசு. நிறைவாக செய்திருக்கிறார். அதே போல் அறிக்கி LC112, பாலிடால் குடித்து தப்புவது, மாப்பிள்ளையௌ தூக்குவது என சின்ன சின்ன சீன்கள் சிரிப்பை சிதறிடிக்கின்றன. தஞ்சாவூரின் மொத்த அழகை அள்ளித் தருகிறது கேமரா. இசை. பேஞ்ச மழை பாடல் நன்றாக இருக்கிறது. பிண்ணனிக்கு கிராமிய மெட்டில் வரும் சினிமாப் பாடல்களை பயன்படுத்தியிருப்பது நன்றாக இருக்கிறது. பிண்ணனி இசையும் ஒகே.

களவாணி - உள்ளம் கவர் கள்வன்.

July 6, 2010

Toy Story 3

பிக்சார் மற்றும் டிஸ்னி தயாரிப்பில் வந்திருக்கும் 3D அனிமேட்டட் படம் டாய் ஸ்டோரி 3. பொதுவாக ஹாலிவுட்டில் sequel 100 சதவிகிதம் திருப்தியளிப்பது குறைவே. ஆனால் டாய் ஸ்டோரி 3 அற்புதமாக தயாரிக்கப்பட்டிருக்கிறது. படம் ஆரம்பிக்கும் முன் காட்டப்படும் Day & Night குறும்படம் விஷுவலைசேஷன் மூலம் மனதை கொள்ளை அடிக்கிறது.

கதையின் நாயகர்களான பொம்மைகளுக்கு சொந்தக்காரனான andy காலேஜ் செல்லவிருக்கிறான். காலேஜுக்கு செல்லும் முன் வேண்டாத பொருட்களை எல்லாம் க்ளீன் செய்யும்படி சொல்கிறார் andy அம்மா (இந்த அம்மாக்களே இப்படித்தான் போல). அவ்வாறே செய்யும் andy தான் இத்தனை வருடங்கள் வைத்து விளையாடிய பொம்மைகளில் வுட்டியை (woody) மட்டும் எடுத்துக்கொண்டு மற்ற பொம்மைகளை பரணில் போட முடிவு செய்கிறான். ஒரு சிறு குழப்பத்தால் மற்ற பொம்மைகள் குப்பை என ஒதுக்கப்படுகின்றன. andy தங்களை குப்பையில் கொட்டியதாக நினைத்துக்கொள்ளும் பொம்மைகள் அங்கிருந்து தப்பி சன்னிசைட் என்ற டே கேர் செண்டர்க்கு செல்கின்றன. அங்கே lotso தலைமையில் வார்மிங் வெல்கம் கொடுக்கப்படுகிறது. டே கேரில் எப்போதுமே குழந்தைகளால் கொஞ்சப்படுவோம்/விளையாட்டுக்குட்படுத்தப்படுவோம் என்ற உத்தரவாதத்துடன் கேட்டர்பில்லர் ரூமிற்கு அனுப்பப்படுகிறார்கள். வீட்டில் நடந்த சம்பவங்களை woody சொல்ல யாருமே நம்ப மறுக்கிறார்கள். கனத்த மனதுடம் woody மட்டும் அங்கிருந்து தப்பி செல்கிறான்.

கேட்டர்பில்லர் ரூமில் எதிர்மறையாக நடக்க, இவர்களுக்கு lotsoவின் சுயரூபம் தெரியவருகிறது. இதன் தொடர்ச்சியாக betty (மிசஸ் பொட்டேட்டோ) மூலமாக நடந்த உண்மைகள் தெரிய வர சன்னிசைடிலிருந்து தப்பித்தார்களா? Woody என்னவானான்? அனைவரும் andyயை சென்றடைந்தார்களா என்பதை விறுவிறுப்பாகச் சொல்லியிருக்கிறார்கள்.

கிட்டத்தட்ட பத்து வருடங்கள் கழித்து வெளிவந்திருக்கும் sequel. காத்திருப்பின் முழுபலனையும் தந்திருக்கிறார்கள். படத்தில் நகைச்சுவை, ஆக்‌ஷன், செண்டிமெண்ட், ட்ராமா, சஸ்பென்ஸ் என அனைத்து அம்சங்களையும் ரசிக்கும்படி கொடுத்திருப்பது பாராட்டப்படவேண்டியது. படம் ஆரம்பித்த கொஞ்ச நேரத்திற்கெல்லாம் அனிமேடட் படம் என்பது மறந்து போகிறது. படத்தில் வரும் பொம்மைகளோடு நாமும் பயணிக்க ஆரம்பித்துவிடுகிறோம். கண்களில் நீர் தளும்ப சிரிக்க வைப்பதோடில்லாமல் அன்பு மற்றும் நிராகரிக்கப்படுதலின் வலியை அழகாக சொல்லியிருக்கிறார்கள். பார்பி மற்றும் கென்னின் ரொமாண்டிக் காமெடிகள், டைனோ ரெக்சின் புலம்பல், மிஸ்டர் பொட்டேட்டோ ஹெட்டின் உருவமாற்றமும் அதைத் தொடர்ந்த சில சீன்களும் அசத்தல் வகையறா. அதைவிட அல்டிமேட்டாக பஸ்ஸின் ஸ்பானிஷ் வெர்ஷன் ROTFL. சிரித்து மாளவில்லை. அதே சமயம் டேகேரிலிருந்து தப்பிப்பது, வேஸ்ட்யார்டிலிருந்து எஸ்கேப்பாவது, கடைசியில் எங்கு சென்று சேர்கிறார்கள் என நிறைய இடங்களில் ஆவென பார்க்க வைக்கிறார்கள்.

3D எபெக்ட்ஸ் சுமார்தான் என்றாலும் அதுவொரு குறையாகத் தெரியவில்லை. விறுவிறுப்பான கதையோட்டத்தில் குறைகளே இல்லாததுபோலிருக்கிறது. அதுதான் உண்மையும் கூட. கண்டிப்பாக சிறுவர்களுக்கான படம் என கேட்டகரைஸ் செய்துவிட முடியாது. பெரியவர்களும் ஈக்வலி எஞ்சாய் செய்யக்கூடிய படம்.

Toy Story 3 - Full of life.